maraikal
MUM
"


பாஸ்கா 4ஆம் ஞாயிறு  03-05-2020

முதல் வாசகம்

கடவுள் அவரை ஆண்டவரும் மெசியாவுமாக்கினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 14a, 36-41

பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது பேதுரு பதினொருவருடன் சேர்ந்து, எழுந்து நின்று, உரத்த குரலில் அவர்களிடம் பின்வருமாறு கூறினார்: "நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவைக் கடவுள் ஆண்டவரும் மெசியாவுமாக்கினார் என்பதை இஸ்ரயேல் மக்களாகிய நீங்கள் அனைவரும் உறுதியாக அறிந்துகொள்ளுங்கள்."

அவர்கள் இதைக் கேட்டு உள்ளம் குத்தப்பட்டவர்களாய் பேதுருவையும் மற்றத் திருத்தூதர்களையும் பார்த்து, "சகோதரரே, நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார்கள். அதற்குப் பேதுரு, அவர்களிடம், "நீங்கள் மனம் மாறுங்கள். உங்கள் பாவங்களிலிருந்து மன்னிப்புப் பெறுவதற்காக ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் பெயரால் திருமுழுக்குப் பெறுங்கள். அப்பொழுது தூய ஆவியைக் கொடையாகப் பெறுவீர்கள். ஏனென்றால் இந்த வாக்குறுதியானது உங்களுக்கும் உங்களது பிள்ளைகளுக்கும் தொலையிலுள்ள யாவருக்கும் ஆண்டவராகிய கடவுள் தம்மிடம் அழைக்கும் அனைவருக்கும் உரியது" என்றார்.

மேலும் அவர் வேறுபல சான்றுகளை எடுத்துக்கூறி, "நெறிகெட்ட இந்தத் தலைமுறையிலிருந்து, உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்" என்று அறிவுறுத்தினார். அவருடைய வார்த்தைகளை ஏற்றுக்கொண்டவர்கள் திருமுழுக்குப் பெற்றார்கள். அன்று ஏறக்குறைய மூவாயிரம் பேர் அவர்களோடு சேர்க்கப்பட்டனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்


திபா 23: 1-3a. 3b-4. 5. 6. (பல்லவி: 1)Mp3

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை. அல்லது: அல்லேலூயா.
1
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2
பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3a
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். - பல்லவி

3b
தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார்.
4
மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். - பல்லவி

5
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. - பல்லவி

6
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். - பல்லவி

இரண்டாம் வாசகம்
உங்கள் ஆன்மாக்களின் ஆயரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 2: 20b-25

அன்பிற்குரியவர்களே, நன்மை செய்தும், அதற்காகப் பொறுமையோடு துன்புற்றால், அது கடவுளுக்கு உகந்ததாகும். கிறிஸ்துவும் உங்களுக்காகத் துன்புற்று ஒரு முன் மாதிரியை வைத்துச் சென்றுள்ளார். எனவே நீங்கள் அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுங்கள்; இதற்காகவே அழைக்கப்பட்டுள்ளீர்கள்.

"வன்செயல் எதுவும் அவர் செய்ததில்லை; வஞ்சனை எதுவும் அவர் வாயில் இருந்ததில்லை." பழிக்கப்பட்டபோது பதிலுக்குப் பழிக்கவில்லை; துன்புறுத்தப்பட்டபோது அச்சுறுத்தவில்லை; நியாயமாகத் தீர்ப்பு வழங்குவோரிடம் தம்மை ஒப்படைத்தார். சிலுவையின்மீது தம் உடலில் நம் பாவங்களை அவரே சுமந்தார். நாம் பாவங்களுக்கு இறந்து, நீதிக்காக வாழ்வதற்கே இவ்வாறு செய்தார். அவர்தம் காயங்களால் நீங்கள் குணமடைந்துள்ளீர்கள்.

நீங்கள் வழி தவறி அலையும் ஆடுகளைப்போல இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது உங்கள் ஆன்மாக்களின் ஆயரும் கண்காணிப்பாளருமாய் இருப்பவரிடம் திரும்பி வந்திருக்கிறீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி (யோவா 10: 14-15)

அல்லேலூயா, அல்லேலூயா! நல்ல ஆயன் நானே. நானும் என் ஆடுகளை அறிந்திருக்கிறேன்; என் ஆடுகளும் என்னை அறிந்திருக்கின்றன, என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
ஆடுகளுக்கு வாயில் நானே.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-10

அக்காலத்தில்

இயேசு கூறியது: ""உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆட்டுக் கொட்டிலில் வாயில் வழியாக நுழையாமல் வேறு வழியாக ஏறிக் குதிப்போர் திருடர் அல்லது கொள்ளையராய் இருப்பர். வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர். அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும். அவர் தம்முடைய சொந்த ஆடுகளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு வெளியே கூட்டிச் செல்வார். தம்முடைய சொந்த ஆடுகள் அனைத்தையும் வெளியே ஓட்டி வந்தபின் அவர் அவற்றிற்குமுன் செல்வார். ஆடுகளும் அவரைப் பின்தொடரும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியும். அறியாத ஒருவரை அவை பின்தொடரா. அவரை விட்டு அவை ஓடிப்போகும். ஏனெனில் அவரது குரல் அவற்றுக்குத் தெரியாது."

இயேசு அவர்களிடம் உவமையாக இவ்வாறு சொன்னார். ஆனால் அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

மீண்டும் இயேசு கூறியது: ""உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: ஆடுகளுக்கு வாயில் நானே. எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே. அவர்களுக்கு ஆடுகள் செவிசாய்க்கவில்லை. நானே வாயில். என் வழியாக நுழைவோருக்கு ஆபத்து இல்லை. அவர்கள் உள்ளே போவர்; வெளியே வருவர்; மேய்ச்சல் நிலத்தைக் கண்டுகொள்வர். திருடுவதற்கும் கொல்வதற்கும் அழிப்பதற்குமன்றித் திருடர் வேறெதற்கும் வருவதில்லை. ஆனால் நான் ஆடுகள் வாழ்வைப் பெறும்பொருட்டு, அதுவும் நிறைவாகப் பெறும்பொருட்டு வந்துள்ளேன்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

 


பாஸ்கா காலம் நான்காம் ஞாயிறு


I திருத்தூதர் பணிகள் 2: 14a, 36-41
II 1 பேதுரு 2: 20b-25
III யோவான் 10: 1-10

"ஆண்டவரே நம் ஆயன்; நமக்கேதும் குறையில்லை"

நிகழ்வு

ஒரு வயதான கிறிஸ்தவத் தம்பதியர், தங்களுடைய கடைசிக் காலத்தை அமைதியாகக் கழிக்கவேண்டும் என்பதற்காக, நகரின் நடுவில் இருந்த தங்களது வீட்டை விட்டு, நகருக்கு வெளியே, எந்தவொரு சத்தமும் சந்தடியும் இல்லாத ஒரு வாடகை வீட்டில் வந்து குடியேறினர். தொடக்கத்தில் பிள்ளைகள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என்று யாவரையும் விட்டுப் பிரிந்திருப்பது அவர்களுக்குச் சிரமமாகத்தான் இருந்தது; ஆனாலும், அந்த இடம் மிகவும் அமைதியாக இருந்ததால், எல்லாரையும் விட்டுப் பிரிந்திருப்பது அவர்களுக்கு ஒன்றும் பெரிய சிரமமாக இல்லை.

கடவுள்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருந்த இந்தத் தம்பதியருக்குத் திடீரென்று ஒரு சிக்கல் வந்தது, அது என்ன சிக்கல் எனில், அவர்கள் இருந்த வீட்டின் தலைவாசற் கதவு சரியாகப் பூட்டவில்லை. இதனால் அந்த வயதான தம்பதியர் தாங்கள் இருந்த வீட்டிற்குச் சற்றுத் தள்ளியிருந்த ஓர் ஒப்பந்ததாரரிடம் (Contractor), "தலைவாசற் கதவு சரியாகப் பூட்டுவதில்லை; அதைச் சரிசெய்து தாருங்கள்" என்று கெஞ்சிக் கேட்டார்கள். அவரோ, "இந்தா, அந்தா" என்று நாள்களை இழுத்தடித்தாரே ஒழிய, கதவைச் சரிசெய்து தரவில்லை. இடைப்பட்ட நாள்களில் இந்தத் தம்பதியர், "ஆண்டவரே நம் ஆயன்; நமக்கேதும் குறையில்லை" என்ற வார்த்தைகளைத் திரும்பித் திரும்பச் சொல்லி, தங்களை உற்சாகப்படுத்திக் கொண்டார்கள்.

இவர்கள் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டதன் பேரில், ஒருநாள் ஒப்பந்ததாரர் இவர்களுடைய வீட்டிற்கு வந்து, "பெயருக்கு" ஒரு பூட்டை வாங்கி, மாட்டிவிட்டுச் சென்றார். அதுவும் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் இந்த வயதான தம்பதியர், ""தனியாக இருக்கின்றோம்... ஏதாவது ஆபத்து வந்தால் என்ன செய்வது...?" என்று சற்று வருந்தினார்கள். ஆனாலும், "ஆண்டவர் நம் ஆயர்; நமக்கேதும் குறையில்லை" என்ற வார்த்தைகளைத் திரும்பத் திரும்பச் சொல்லி வந்தார்கள்.

இப்படியிருக்கையில் ஒருநாள் "ஒப்பந்ததாரர் அனுப்பி வைத்தார்" என்று சொல்லிக்கொண்டு, தச்சர் ஒருவர் இந்த வயதான தம்பதியரின் வீட்டிற்குக் கையில் பலகைகள் மற்றும் தேவையான உபகரணங்களோடு வந்தார். வந்தவர் சிறிதுநேரத்தில் தலைவாசல் கதவைச் சரிசெய்தார். அவர் கதவைச் சரிசெய்த மறுவினாடி அவருடைய அலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது.

அதை அவர் எடுத்துப் பேசுகையில் மறுமுனையில் இருந்தவர், "கதவைச் சரிசெய்யச் சொல்லிக் கூப்பிட்டிருந்தோம்; நேரம் ஆகிக்கொண்டே இருக்கின்றது; எப்பொழுது நீங்கள் இங்கு வருவீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அந்தத் தச்சர், "ஐயா! கதவை இப்பொழுதுதான் சரிசெய்து முடித்தேன்" என்று சொல்ல, மறுமுனையில் இருந்தவர், "நான் வீட்டுக்கு முன்னால்தான் இருக்கின்றேன்; நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்?" என்று கேட்டார். அப்பொழுதுதான் தச்சர் வீடுமாறி வந்ததை உணர்ந்தார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த அந்த வயதான தம்பதியர், நல்லாயன் தங்களைக் குறையில்லாமல் பார்த்துக்கொண்டார் என்று அவருக்கு நன்றி சொன்னார்கள். பின்னர் அவர்கள் அந்தத் தச்சருக்கு உரிய பணத்தைக் கொடுத்து, அவரை நன்றியுணர்வோடு வழியனுப்பி வைத்தார்கள்.

ஆம், ஆண்டவர் நம் ஆயனாய் இருப்பதால், நமக்கேதும் குறையிருப்பதில்லை. அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக் கூறுகின்றது. பாஸ்கா காலத்தின் நான்காம் ஞாயிறு, "நல்லாயன் ஞாயிறு" என்பதால், இன்றைய இறைவார்த்தை இயேசு எப்படி நல்லயானாக இருக்கின்றார் என்பதை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு வாயிலாக இருப்பதால், நல்லாயன்

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, "ஆடுகளுக்கு வாயில்நானே" என்கின்றார். ஆடுகளுக்கு வாயில் நானே என்றால், ஆட்டுப்பட்டியில் இருக்கக்கூடிய ஆடுகள் அவர் வழியாகத்தான் உள்ளே போகவும் வெளியே வரவும் முடியும். இதன்மூலம் இயேசு, தானே விண்ணகத்திற்குள் செல்வதற்கான நுழைவாயில் என்றும் தன் வழியாக அன்றி எவரும் விண்ணகத்திற்குள்ளோ அல்லது தந்தையிடமோ செல்ல முடியாது (யோவா 14: 6) என்று மிக உறுதியாகச் சொல்கின்றார்.
இயேசு தன்னை வாயில் என்று சொல்வதன்மூலம், வாயில் வழியாக நுழையாமல், வேறு வழியாக ஏறிக் குதித்து, மந்தையிலிருந்து ஆட்டைத் திருடிய போலியான ஆயர்களைக் (மத் 24:5; யோவா 5:43) குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்ற அழைப்பினையும் தருகின்றார். ஆகையால், இயேசுவின் மந்தையைச் சார்ந்த ஒருவர் அவர் வழியாகவே விண்ணகத்திற்கு நுழையவேண்டும்; அவரை விடுத்து மற்ற போலியான ஆயர்களைக் குறித்து எச்சரிக்கையாகவும் இருக்கவேண்டும். இந்த இரண்டையும் நம்முடைய கவனத்தில் வைத்துக்கொள்ளவேண்டும்.

இயேசு வழிநடத்துபவராக இருப்பதால், நல்லாயன்

இயேசு, ஆடுகளுக்கு வாயிலாக இருப்பதால் மட்டுமல்ல, அவற்றை நல்லமுறையில் வழிநடத்துபவராக இருப்பதாலும், அவர் நல்லாயனாக இருக்கின்றார். இயேசுவின் காலத்திற்கு முன்பாக இருந்த மேய்ப்பர்ளும் சரி, இயேசுவின் காலத்தில் இருந்த மேய்ப்பர்களும் சரி மூடர்களாக இருந்தார்கள் (எரே 10: 21). ஏன் அவர்கள் மூடர்களாக இருந்தார்கள் எனில், கடவுளின் சொற்களுக்குச் செமடுக்க மறுத்து (எரே 12: 10), தங்களுடைய விருப்பத்தின் படி நடந்தார்கள். பாதைக்கு ஒளியாக இருக்கும் இறைவனிடம் சொல்லைக் கேட்டால்தான் நல்வழியில் நடக்க முடியும் (திபா 119: 105). தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தையை நல்லமுறையில் வழிநடத்தவும் முடியும். இவர்கள் கடவுளின் சொல்லுக்குச் செவிமடுக்க வில்லை; அதனாலேயே இவர்கள் மந்தையை நல்லமுறை வழிநடத்த முடியாத மூடர்களாய் இருந்தார்கள்.

ஆனால், நல்லாயனாம் இயேசு அப்படியில்லை, அவர் தந்தையின் சொல்கேட்டு அவருடைய அன்புக்குரிய மகனாக இருந்ததார் (மத் 3: 17; 17:5). தூய ஆவியாரால் நிரப்பப்பட்டவராகவும் (திப 10:38) இதனால் அவர் மக்களை நல்லமுறையில் வழிநடத்தக்கூடிய நல்லாயனாக விளங்கினார். அவர் மந்தையை நல்லமுறையில் வழிநடத்துகின்றார் என்பதற்கு இன்னொரு சான்று, ஆடுகளின் பெயரைத் தெரிந்து வைத்திருப்பது. ஆடுகளைப் பற்றித் தெரிந்திருந்தால்தானே, அவற்றை நல்ல முறையில் வழிநடத்த முடியும்! (எசா 40: 1-11) இயேசு ஆடுகளை நன்கு தெரிந்ததன் மூலமாகவும் தூய ஆவியாரால் நிரப்பட்டதன் மூலமாகவும் அவற்றை நல்லமுறையில் வழிநடத்தி, நல்லாயனாக விளங்குகின்றார்.

இயேசு வாழ்வளிப்பவராக இருப்பதால், நல்லாயன்

இயேசு ஆடுகளுக்கு வாயிலாக இருப்பதால் மட்டுமல்ல, ஆடுகளை வழிநடத்துபவராக இருப்பதால் மட்டுமல்ல; அவர் ஆடுகளுக்காக வாழ்வை அளிப்பவராகவும் இருப்பதாலும்தான் அவர் நல்லாயனாக இருக்கின்றார். பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இருந்த மேய்ப்பர்கள், பெயருக்கு மேய்ப்பர்களாக இருந்து, கொழுத்ததைத் தின்று மந்தையைச் சிதறடித்தார்கள். மேலும் அவர்கள் ஆடுகளை மேய்ப்பதற்குப் பதில் ஆடுகளை மேய்ந்தார்கள். (எசே 33: 3,8). இவ்வாறு அவர்கள் ஆடுகளுக்கு வாழ்வைக் கொடுப்பதற்குப் பதில் அவற்றின் வாழ்வை எடுத்தார்கள். இயேசுவின் காலத்தில் இருந்த தலைவர்கள்கூட ஆடுகளாகிய மக்களுக்கு வாழ்விற்கான வாயிலை அடைப்பவர்களாக இருந்தார்கள்; சட்டங்களால் கொடுமைப்படுத்தினார்கள் (மத் 23: 13). இவர்களுக்கு முற்றிலும் மாறாக இருந்தவர்தான் ஆண்டவர் இயேசு. ஆம், நல்லாயனாம் இயேசு ஆடுகளுக்கு வாழ்வினைக் கொடுப்பவராக இருந்தார் (யோவா 10:10). அதனாலேயே அவர் நல்லயானாக இருக்கின்றார்.

இந்த உலகத்தில் ஆடுகள் என்னும் மக்களுக்காக உயிரைக் கொடுத்தவர்கள் அரிதிலும் அரிது. ஆனால், ஆண்டவர் இயேசு ஆடுகளுக்காக உயிரைக் கொடுத்து, நமக்கு வாழ்வைக் கொடுத்தார். அதனால்தான் அவர் நல்லாயனாக இருக்கின்றார். இந்த நல்லாயனின் மந்தையாக இருக்க நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான், அதுதான் அவருடைய குரல் கேட்டு நடப்பது (யோவா 10:3). ஆகையால், நமக்கு வாயிலாகவும் வழிகாட்டியாகவும் வாழ்வளிப்பவராகவும் இருக்கும் நல்லாயனின் குரல் கேட்டு நாம் நடந்து, அவருடைய அன்பு மக்களாக, மந்தையாக வாழ்வோம்.

சிந்தனை

"ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழுங்கள். ஏனெனில் அவரே நல்லாயன். அவருக்குத்தான் ஆடுகளைத் தெரியும். ஆடுகளுக்கும் நல்லாயனாம் அவரைத்தான் தெரியும்" என்பார் ரஸ்ஸல் பல்லார்ட் என்ற எழுத்தாளர். ஆகையால், நல்லாயனாம் இயேசுவின்மீது நாம் நம்பிக்கை வைத்து, அவருடைய வழிகாட்டுதலில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter