maraikal
MUM

இளையோர்

 

                All Souls Day  - இறந்த அனைவர் நினைவு - 1ம் ஆண்டு

================================================
முதல் வாசகம் வாசகம்  02-11-2019

சாலமோனின் ஞானம் 3:1-9
நீதி மான்களின் ஆன்மாக்கள் கடவுளின் கையில் உள்ளன. கடுந்தொல்லை எதுவும் அவர்களைத் தீண்டாது. அறிவிலிகளின் கண்களில் இறந்தவர்களைப்போல் அவர்கள் தோன்றினார்கள். நீதிமான்களின் பிரிவு பெருந்துன்பமாகக் கருதப்பட்டது. அவர்கள் நம்மைவிட்டுப் பிரிந்து சென்றது பேரழிவாகக் கருதப்பட்டது. அவர்களோ அமைதியாக இளைப்பாறுகிறார்கள்.

மனிதர் பார்வையில் அவர்கள் தண்டிக்கப்பட்டாலும், இறவாமையில் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள். சிறிதளவு அவர்கள் தண்டித்துத் திருத்தப்பட்டபின், பேரளவு கைம்மாறு பெறுவார்கள். கடவுள் அவர்களைச் சோதித்தறிந்தபின், அவர்களைத் தமக்குத் தகுதியுள்ளவர்கள் என்று கண்டார்.

பொன்னை உலையிலிட்டுப் புடமிடுவதுபோல் அவர் அவர்களைப் புடமிட்டார்: எரிபலிபோல் அவர்களை ஏற்றுக்கொண்டார். கடவுள் அவர்களைச் சந்திக்கவரும்போது அவர்கள் ஒளி வீசுவார்கள்: அரிதாள் நடுவே தீப்பொறிபோலப் பரந்து சுடர்விடுவார்கள்: நாடுகளுக்குத் தீர்ப்பு வழங்குவார்கள்: மக்கள்மீது ஆட்சிசெலுத்துவார்கள். ஆண்டவரோ அவர்கள்மீது என்றென்றும் அரசாள்வார். அவரை நம்புவோர் உண்மையை அறிந்துகொள்வர்: அன்பில் நம்பிக்கை கொள்வோர் அவரோடு நிலைத்திருப்பர். அருளும் இரக்கமும் அவர் தேர்ந்து கொண்டோர் மீது இருக்கும்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



இரண்டாம் வாசகம்

உரோமையர் 5:5-11

அந்த எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது: எனெனில் நாம் பெற்றுள்ள தூய ஆவியின் வழியாய்க் கடவுளின் அன்பு நம் உள்ளங்களில் பொழியப்பட்டுள்ளது. நாம் இறைப்பற்று இன்றி வலுவற்று இருந்தபோதே, குறித்தகாலம் வந்ததும் கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார்.

நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுத்தலே அரிது. ஒருவேளை நல்லவர் ஒருவருக்காக யாரேனும் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம்.

ஆனால், நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார். ஆகையால் இப்போது நாம் கிறிஸ்துவின் இரத்தத்தினால் கடவுளுக்கு ஏற்புடையவர்களாகி, அவர் வழியாய் தண்டனையிலிருந்து தப்பி மீட்புப்பெறுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ?

நாம் கடவுளுக்குப் பகைவர்களாயிருந்தும் அவருடைய மகன் நமக்காக உயிரைக் கொடுத்ததால் கடவுளோடு ஒப்புரவாக்கப்பட்டுள்ளோம். அப்படியானால் ஒப்புரவாக்கப்பட்டுள்ள நாம், வாழும் அவர் மகன் வழியாகவே மீட்கப்படுவோம் என மிக உறுதியாய் நம்பலாம் அன்றோ! அது மட்டும் அல்ல, இப்போது கடவுளோடு நம்மை ஒப்புரவாக்கியுள்ள நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நாம் கடவுளோடு உறவுகொண்டு பெருமகிழ்ச்சியடைகிறோம். இம்மகிழ்ச்சியை நமக்குத் தருபவர் கடவுளே.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

நற்செய்தி வாசகம்

மத். 25: 31 - 46

வானதூதர் அனைவரும் புடை சூழ மானிட மகன் மாட்சியுடன் வரும்போது தம் மாட்சிமிகு அரியணையில் வீற்றிருப்பார். எல்லா மக்களினத்தாரும் அவர் முன்னிலையில் ஒன்று கூட்டப்படுவர்.

ஓர் ஆயர் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வௌவேறாகப் பிரித்துச் செம்மறியாடுகளை வலப்பக்கத்திலும் வெள்ளாடுகளை இடப்பக்கத்திலும் நிறுத்துவதுபோல் அம்மக்களை அவர் வௌவேறாகப் பிரித்து நிறுத்துவார்.

பின்பு அரியணையில் வீற்றிருக்கும் அரசர் தம் வலப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து,  என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்: உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.

ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள்: தாகமாய் இருந்தேன், என் தாகத்தைத் தணித்தீர்கள்: அன்னியனாக இருந்தேன், என்னை ஏற்றுக் கொண்டீர்கள்: நான் ஆடையின்றி இருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை அணிவித்தீர்கள்: நோயுற்றிருந்தேன், என்னைக் கவனித்துக் கொண்டீர்கள்: சிறையில் இருந்தேன், என்னைத் தேடி வந்தீர்கள் என்பார்.

அதற்கு நேர்மையாளர்கள் ஆண்டவரே, எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உணவளித்தோம், அல்லது தாகமுள்ளவராகக் கண்டு உமது தாகத்தைத் தணித்தோம்? எப்பொழுது உம்மை அன்னியராகக் கண்டு ஏற்றுக் கொண்டோம்? அல்லது ஆடை இல்லாதவராகக் கண்டு ஆடை அணிவித்தோம்? எப்பொழுது நோயுற்றவராக அல்லது சிறையில் இருக்கக் கண்டு உம்மைத்தேடி வந்தோம்?  என்று கேட்பார்கள்.

அதற்கு அரசர், மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்லுகிறேன் எனப் பதிலளிப்பார்.

பின்பு இடப்பக்கத்தில் உள்ளோரைப் பார்த்து, சபிக்கப் பட்டவர்களே, என்னிடமிருந்து அகன்று போங்கள். அலகைக்கும் அதன் தூதருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற என்றும் அணையாத நெருப்புக்குள் செல்லுங்கள்.

ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் எனக்கு உணவு கொடுக்கவில்லை: தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தணிக்கவில்லை. நான் அன்னியனாய் இருந்தேன், நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. நோயுற்றிருந்தேன், சிறையிலிருந்தேன், என்னைக் கவனித்துக் கொள்ளவில்லை  என்பார்.

அதற்கு அவர்கள், ஆண்டவரே, எப்பொழுது நீர் பசியாகவோ, தாகமாகவோ, அன்னியராகவோ, ஆடையின்றியோ, நோயுற்றோ, சிறையிலோ இருக்கக் கண்டு உமக்குத் தொண்டு செய்யாதிருந்தோம்?  எனக் கேட்பார்கள். அப்பொழுது அவர், மிகச் சிறியோராகிய இவர்களுள் ஒருவருக்கு நீங்கள் எதையெல்லாம் செய்யவில்லையோ அதை எனக்கும் செய்யவில்லை என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்  எனப் பதிலளிப்பார்.

இவர்கள் முடிவில்லாத் தண்டனை அடையவும் நேர்மையாளர்கள் நிலை வாழ்வு பெறவும் செல்வார்கள்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி


================================================
மறையுரைச் சிந்தனை - 1
================================================
இறந்த ஆன்மாக்களின் நினைவு நாள் (நவம்பர் 02)

நிகழ்வு

பெருநகர் ஒன்றில் சிறிய மருத்துவமனை ஒன்று இருந்தது. அந்த மருத்தவமனையின் அவரசச் சிகிச்சைப் பிரிவில் இறக்கும் தருவாயில் நோயாளி ஒருவர் இருந்தார். அவர், தான் இறந்த பிறகு என்ன ஆவோமோ என்று பயந்துகொண்டே இருந்தார். அப்போது அங்கு வந்த தலைமை மருத்துவரிடம் நோயாளி, “ஐயா! நான் இறப்பதைக் குறித்து பயப்படவில்லை, ஆனால் நான் இறந்தபிறகு என்ன ஆவேனோ என்பதை நினைக்கும்போதுதான் எனக்கு பயமாகக் இருக்கிறது” என்றார். இவ்வாறு சொல்லிவிட்டு அவர் மருத்துவரிடம், “நீங்கள்தான் கிறிஸ்தவராயிற்றே! நான் இறந்தபிறகு என்ன ஆவேன் என்பது உங்களுக்குத் தெரியுமா?, தெரிந்தால் சொல்லுங்களேன்” என்று கெஞ்சிக் கேட்டார். அதற்கு அந்த மருத்துவர், “எனக்கு ஒன்றும் தெரியாது” என்று பதிலளித்தார்.

அவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும்போது, அவர்கள் இருந்த அறையின் கதவை யாரோ தட்டுவது போன்று இருந்தது. உடனே மருத்துவர் சென்று கதவைத் திறந்தார். அப்போது மறுபக்கத்திலிருந்து மருத்துவரின் செல்ல நாயானது அவர்மீது வந்து அன்போடு பாய்ந்தது. அவர் அதனை அன்போடு தாங்கிக்கொண்டார். பின்னர் நோயாளியிடம் திரும்பி வந்த மருத்துவர் இவ்வாறு பேசத் தொடங்கினார், “ஐயா! உங்களுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். என்னுடைய நாய் இந்த அறைக்குள் இதற்கு முன்பு வந்ததில்லை, இந்த அறை எப்படி இருக்கும் என்பதுகூட அதற்குத் தெரியாது. ஆனால் நான் இந்த அறையின் கதவைத் திறந்தபோது அது என்மீது வேகமாகப் பாய்ந்தது. அதற்குத் தெரிந்திருக்கிறது இந்த அறையில் அதன் தலைவனாகிய நான் இருக்கிறேன் என்று. இது போன்றுதான் இறப்புக்குப் பிறகு என்ன ஆவீர்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இறப்புக்குப் பிறகு எல்லாம் வல்லவராகிய ஆண்டவரைச் சந்திப்பீர்கள் என்பது மட்டும் உறுதி” என்றார்.

இவ்வார்த்தைகளை கேட்டபிறகு இறக்கும் தருவாயில் இருந்த அந்த நோயாளி, தான் இறந்த பிறகு ஆண்டவரைச் சந்திக்க இருக்கின்றோம் என்பதை நினைத்து ஆறுதல் அடைந்தார். இறந்த பிறகு கிறிஸ்துவோடு – கடவுளோடு - இருக்கப் போகிறோம் என்ற பவுலடியாரின் வார்த்தைகளுக்கு (பிலி 1:23) இந்த நிகழ்வு எவ்வளவு பொருத்தமாக இருக்கின்றது.



வரலாற்றுப் பின்னணி

இன்று நாம் இறந்த ஆன்மாக்களின் நினைவுநாளைக் கொண்டாடுகின்றோம். இந்த நாளில் நம்முடைய குடும்பங்களில் மரித்த அன்பர்கள், நம்மைவிட்டுப் பிறந்த நண்பர்கள், உற்றார் உறவினார்கள், யாரும் நினையாத ஆன்மாக்களை நினைவுகூர்ந்து பார்க்கின்றோம்.

இறந்தவர்களை நினைவுகூர்ந்து பார்த்து, அவர்களுக்குப் பலி ஒப்புக்கொடுக்கும் வழக்கம் மக்கபேயர் காலத்திலிருந்து இருப்பதை விவிலியத்திலிருந்து நாம் படித்தறிகின்றோம். யூதா மக்கபேயு போரில் இறந்தவர்களின் பாவம் போக்கும் பலியாக ஆறு கிலோ வெள்ளி சேகரித்து, அதனை எருசலேம் திருக்கோவிலுக்கு அனுப்பி வைக்கிறான். அவன் இப்படிச் செய்ததற்குக் காரணம் இறந்தவர்கள் உயிர்பெற்று எழுவார்கள் என்பதில் அவன் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தான். (2 மக் 12: 46). இறந்தவர்களுக்கு என்று தனியொரு நாளை ஒதுக்கி, அதில் அவர்களை நினைவுகூர்ந்து பார்க்கும் பழக்கம் கிபி. ஏழாம் நூற்றாண்டில் ஏற்பட்டது. 998 ஆம் ஆண்டு குலூனியில் இருந்த ஓடிலோ என்ற துறவி, தன்னுடைய சபைத் துறவிகளிடம் அனைத்துப் புனிதர்களுக்கு அடுத்தநாளில் அதாவது நவம்பர் 2 ஆம் நாள் இறந்தவர்காக பலி ஒப்புக்கொடுக்கவேண்டும் என்ற ஆணையை விடுத்தார். அவருடைய ஆணைக்கிணங்க சபைத் துறவிகளும் அன்றைய தினத்தில் இறந்தவர்களுக்காக பலி ஒப்புக்கொடுத்தார்கள். பதினான்காம் நூற்றாண்டில் துறவிகள் மட்டுமல்லாது, எல்லா மக்களுக்கும் இதனைக் கொண்டாடும் வழக்கம் உண்டானது.

15 ஆம் நூற்றாண்டில் டொமினிக் சபையைச் சேர்ந்த துறவிகள் இறந்த ஆன்மாக்களின் நினைவு நாளில் மூன்று திருப்பலிகள் நிறைவேற்றினார்கள். ஒன்று இறந்த ஆன்மாக்களுக்காகவும் இரண்டு தங்களுடைய சொந்தக் கருத்துகளுக்காகவும் மூன்றாவது திருத்தந்தையின் கருத்துகளுக்காகவும் நிறைவேற்றினார்கள். 1915 ஆம் ஆண்டு அப்போது இருந்த திருத்தந்தை பதினைந்தாம் பெனடிக்ட் இப்படி மூன்று திருப்பலிகளை நிறைவுவேற்றுவோருக்கு பரிபூரணப் பலன் கிடைக்கும் என்றும் அறிவிப்பு விடுத்தார். அதன்படியே ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2 ஆம் நாள் இறந்த ஆன்மாக்களின் நினைவு நாளைக் கொண்டாடுகின்றோம்.

இவ்விழாவைக் கொண்டாடுவதன் நோக்கம்

இவ்விழாவைக் கொண்டாடுவதன் நோக்கங்களில் ஒன்று இறந்த ஆன்மாக்களுக்காக, அதுவும் குறிப்பாக உத்தரிக்கும் தளத்தில் உள்ள யாரும் நினையாத ஆன்மாகளுக்காக ஜெபிக்கவேண்டும் என்பதுதான்.

புனிதர்கள் சமூக உறவை நம்புகின்றோம் என்று விசுவாசப் பிரமாணத்தில் சொல்கிறோம். இதன் அர்த்தம் என்ன?. மூன்று விதமான திருச்சபை இருப்பதாக மறைவல்லுநர்கள் சொல்கிறார்கள். ஒன்று விண்ணகத்தில் இருக்கும் வெற்றிபெற்ற திருச்சபை, இரண்டு மண்ணகத்தில் இருக்கும் போராடும் திருச்சபை, மூன்றாவது உத்தகரிக்க தளத்தில் உள்ள துன்புறும் திருச்சபை. விண்ணகத்தில் இருக்கும் வெற்றிபெற்ற திருச்சபையான புனிதர்கள் கூட்டத்திற்காக நாம் ஜெபிக்கவேண்டியதில்லை, மாறாக அவர்களுடைய பரிந்துபேசுதல் தான் நமக்குத் தேவையாக இருக்கின்றது. ஆனால் துன்புறும் திருச்சபை எனப்படும் உத்தரிக்க தளத்தில் இருப்போருக்கு நம்முடைய வேண்டுதல் நிச்சயம் தேவைப்படுகின்றது. நாம் அவர்களுக்காக ஜெபங்களை, வேண்டுதல்களை, பூசைப் பலிகளை ஒப்புக்கொடுக்கின்றது அவர்களுடைய பாவங்கள் அனைத்தும் நீங்கப் பெற்று அவர்கள் விண்ணகத் திருக்கூட்டத்தில் சேர்வார்கள் என்பது நமக்கு நம்பிக்கையாக இருக்கின்றது. ஆகவே. நாம் உத்தரிக்க தளத்தில் இருக்கும் ஆன்மாக்களுக்காக ஜெபிப்பது நமது தலையாக கடமையும் நோக்கமுமாக இருக்கின்றது.

இவ்விழாவைக் கொண்டாடுவதன் இன்னொரு நோக்கம் நாமும் ஒருநாள் இறந்து, உயிர்த்தெழுந்து விண்ணகத் திருக்கூட்டத்தில் சேர்வோம் என்ற நம்பிக்கையாகும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு கூறுவார், “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே, என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” (யோவா 11:25) என்று. நாம் ஆண்டவர் இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து வாழும்போது இறந்தாலும் வாழ்வோம் என்பது உறுதியாக இருக்கின்றது. “நாம் இவ்வுலகில் குடியிருக்கும் உடலாகிய கூடாரம் அழிந்துபோனாலும் கடவுளிடமிருந்து கிடைக்கும் வீடு ஒன்று விண்ணுலகில் நமக்கு உண்டு. அது மனித கையால் கட்டப்படாதது, நிலையானது என்பது நமக்குத் தெரியும் அல்லவா!” என்பார் தூய பவுல் (2 கொரி 5:1. ஆகையால் நம்முடைய வாழ்வு இந்த மண்ணுலக வாழ்வோடு முடிந்துபோவதல்ல, மாறாக விண்ணக வாழ்வு என்ற ஒன்று உண்டு. என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

இறந்த ஆன்மாக்களின் நினைவு நாளைக் கொண்டாடும் நாம் இவ்விழா நமக்குக் கற்றுத் தரும் பாடம் என்ன என்பதைச் சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.


இறப்பைக் குறித்த அச்சத்தைத் தவிர்ப்போம்


மனிதர்கள் இன்றைக்கு இறப்பை அல்லது சாவைக் குறித்து பயந்துகொண்டிருக்கிறார்கள். இறப்பு எப்படி இருக்குமோ?, இறப்புக்குப் பின்னால் என்ன நடக்குமோ என்பதுதான் ஒவ்வொருவரின் அச்ச உணர்வாக இருக்கின்றது. ஆனால், கிறிஸ்தவர்களாக நாம் சாவைக் கண்டு பயப்படத் தேவையில்லை. ஏனென்றால் இறப்பு என்பது ஒரு கடத்தல்தான்; இறப்பில் நம்முடைய வாழ்வு மாறுபடுகிறதே அன்றி அழிந்துபோவதில்லை. ஆகவே, நாம் சாவைத் துணிவோடு ஏற்றுகொள்வதற்குக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு யூத கதை இது. யூத இராபி ஒருவர் தொழுகைக்கூடத்தில் தொழுகையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் அவருடைய இரண்டு பிள்ளைகளைக் காணவில்லை, அவருடைய மனைவி மட்டுமே இருந்தார். அவர் அவருடைய மனைவியிடத்தில் பிள்ளைகள் எங்கே என்று கேட்க, அவர் எதுவும் பேசாது சிறிது நேரம் அமைதியாக இருந்து பின்னர் பேசத் தொடங்கினார். “நீண்ட நாட்களுக்கு முன்பாக தூரத்து உறவினர் ஒருவர் என்னிடத்தில் இரண்டு வைரக்கற்களைக் கொடுத்துவிட்டு, அதனை பத்திரமாக வைத்திருக்குமாறு சொல்லிவிட்டுப் போனார். நானும் அதனை இந்நாள் வரை பத்திரமாகப் பாதுகாத்து வந்தேன்.. இன்றைக்கு நீங்கள் தொழுகைக்கூடத்திற்குப் போனபின்பு என்னிடத்தில் இரண்டு வைரக்கற்களைக் கொடுத்த அந்த தூரத்து உறவினர், வைரக்கற்களைத் திரும்பக் கேட்டார்”. இப்படிச் சொல்லிவிட்டு அவர் தன்னுடைய கணவரிடம், “நான் அதனை அவரிடம் திரும்பக் கொடுக்கணுமா? வேண்டாமா?” என்று கேட்டார். அதற்கு இராபி, “கொடுத்ததைத் திரும்பக் கொடுப்பதுதானே முறை, இதில் என்ன சந்தேகம்?” என்றார்.

இதைக் கேட்ட இராபியின் மனைவி, தன்னுடைய கணவரை வீட்டின் உள்ளறைக்கு அழைத்துச் சென்று, இறந்து போய் இருந்த இரண்டு பிள்ளைகளையும் சுட்டிக்காட்டி, “நம்மிடம் இரண்டு பிள்ளைகளை ஒப்படைத்த கடவுள், அதனைத் திரும்பக் கேட்டார், நானும் அதனை அப்படியே தந்துவிட்டேன்” என்றார். எல்லாவற்றையும் கேட்டு அந்த இராபி கண்கலங்கி நின்றார். இருந்தாலும் கடவுள் கொடுத்ததை கடவுள்தானே எடுத்திருக்கின்றார் என்ற மனத் தெளிவோடு இருந்தார்.

இறப்பு என்பது கடவுளோடு சேர்வதற்கான ஒரு கடத்தல் என்பதைத் தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. ஆகவே, நாமும் இறப்பு என்பதை அழிவாகப் பார்க்காமல், அதனை ஒரு கடத்தலாக, மாற்றமாகப் பார்க்கும்போது இறப்பைக் குறித்த தேவையற்ற அச்சம் விலகும் என்பது உறுதி.


மண்ணுலக வாழ்வை அர்த்தப்படுத்துவோம்


இறப்பு என்பது நம்முடைய கையில் இல்லை. ஆனால் இறப்புக்குப் பிறகான வாழ்வு – விண்ணக மகிமை - என்பது நம்முடைய கையில் இருக்கின்றது. நாம் இந்த மண்ணக வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும்போது இறைவன் தரும் விண்ணக மகிமையைப் பெற்றுக்கொள்வது உறுதி. ஆகவே, இறந்த ஆன்மாக்களின் நினைவு நாளான இன்று, உத்தரிக்கும் ஆன்மாக்களுக்காக ஜெபிப்போம்; நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம் என்பதை உணர்ந்தவர்களாய் இறப்பைக் குறித்த அச்சத்தைத் தவிர்ப்போம், நமது மண்ணக வாழ்வை அர்த்தமுள்ளதாக்குவோம், அதன்வழியாக இறைவன் அளிக்கும் விண்ணக வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 

Free Blog Widget
Stats Counter
hit counter