maraikal
MUM
"

இளையோர்

 

                                  பொதுக்காலம் 34ம் ஞாயிறு - 1ம் ஆண்டு
         நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழ

வாசகம்  24-11-2019

முதல் வாசகம்

இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர்.

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 5: 1-3

அந்நாள்களில் இஸ்ரயேலின்அனைத்துக் குலங்களும் எபிரோனுக்கு வந்து தாவீதிடம் கூறியது: “நாங்கள் உம் எலும்பும் சதையுமானவர்கள். சவுல் எங்கள் மீது ஆட்சி செய்த கடந்த காலத்திலும் கூட நீரே இஸ்ரயேலை நடத்திச் சென்றவர்.

‘நீயே என் மக்கள் இஸ்ரயேலின் ஆயனாக இருப்பாய்; நீயே இஸ்ரயேலுக்குத் தலைமை தாங்குவாய்’ என்று உமக்கே ஆண்டவர் கூறினார்."

இஸ்ரயேலின் பெரியோர்கள் எல்லாரும் அரசரைக் காண எபிரோனுக்கு வந்தனர். அரசர் தாவீது எபிரோனில் ஆண்டவர் திருமுன் அவர்களோடு உடன்படிக்கை செய்து கொண்டார். இஸ்ரயேலின் அரசராக அவர்கள் தாவீதைத் திருப்பொழிவு செய்தனர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்  திபா 122: 1-2. 4-5 (பல்லவி: 1)

பல்லவி: அகமகிழ்வுடன் ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்.

1 "ஆண்டவரது இல்லத்திற்குப் போவோம்" என்ற அழைப்பை நான் கேட்டபோது அகமகிழ்ந்தேன். 2 எருசலேமே! இதோ, நாங்கள் அடியெடுத்து வைத்து உன் வாயில்களில் நிற்கின்றோம். பல்லவி

4 ஆண்டவரின் திருக்குலத்தார் ஆங்கே செல்கின்றனர்; இஸ்ரயேல் மக்களுக்கு இட்ட கட்டளைகளுக்கிணங்க ஆண்டவரது பெயருக்கு அவர்கள் நன்றி செலுத்தச் செல்வார்கள். 5 அங்கே நீதி வழங்க அரியணைகள் இருக்கின்றன. அவை தாவீது வீட்டாரின் அரியணைகள். பல்லவி


இரண்டாம் வாசகம்

தந்தையாம் கடவுள் நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்கு உட்படுத்தினார்.

திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 12-20

சகோதரர் சகோதரிகளே, தந்தையாம் கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். அவர் இறைமக்களுக்கான ஒளிமயமான உரிமைப்பேற்றில் பங்கு பெற உங்களைத் தகுதியுள்ளவர்கள் ஆக்கியுள்ளார். அவரே இருளின் அதிகாரத்திலிருந்து நம்மை விடுவித்துத் தம் அன்பார்ந்த மகனின் ஆட்சிக்குட்படுத்தினார். அம்மகனால்தான் நாம் பாவமன்னிப்பாகிய மீட்பைப் பெறுகிறோம். அவர் கட்புலனாகாத கடவுளது சாயல்; படைப்பனைத்திலும் தலைப்பேறு.

ஏனெனில் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை, கட்புலனாகுபவை, கட்புலனாகாதவை, அரியணையில் அமர்வோர், தலைமை தாங்குவோர், ஆட்சியாளர், அதிகாரம் கொண்டோர் ஆகிய அனைவரும் அவரால் படைக்கப்பட்டனர்.

அனைத்தும் அவர் வழியாய் அவருக்காகப் படைக்கப்பட்டன. அனைத்துக்கும் முந்தியவர் அவரே; அனைத்தும் அவரோடு இணைந்து நிலைபெறுகின்றன. திருச்சபையாகிய உடலுக்குத் தலையும் தொடக்கமும் அவரே.

எல்லாவற்றுள்ளும் முதன்மை பெறுமாறு இறந்து உயிர்த்தெழுவோருள் அவர் தலைப்பேறு ஆனார். தம் முழு நிறைவும் அவருள் குடிகொள்ளக் கடவுள் திருவுளம் கொண்டார்.

சிலுவையில் இயேசு சிந்திய இரத்தத்தால் அமைதியை நிலைநாட்டவும் விண்ணிலுள்ளவை, மண்ணிலுள்ளவை அனைத்தையும் அவர் வழி தம்மோடு ஒப்புரவாக்கவும் கடவுள் திருவுளம் கொண்டார்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 11: 10

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு போற்றப்பெறுக! அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 23: 35-43

அக்காலத்தில் இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்ததை மக்கள் பார்த்துக்கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், "பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக்கொள்ளட்டும்'' என்று கேலி செய்தார்கள்.

படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, "நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்'' என்று எள்ளி நகையாடினர்.

"இவன் யூதரின் அரசன்'' என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது.

சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், "நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று'' என்று அவரைப் பழித்துரைத்தான்.

ஆனால் மற்றவன் அவனைக் கடிந்துகொண்டு, "கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!'' என்று பதிலுரைத்தான்.

பின்பு அவன், "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்'' என்றான்.

அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்'' என்றார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

 


I 2 சாமுவேல் 5: 1-3

II கொலோசையர் 1: 12-20

III லூக்கா 23: 35-43

ஒப்பற்ற அரசர் இயேசு!

நிகழ்வு

ரஷ்யாவில் அரசர் ஒருவர் இருந்தார். அவர் மக்களை மிகவும் அன்பு செய்தார்; மக்களும் அவரை மிகவும் அன்புசெய்தார்கள். அவர் இரவுநேரங்களில் மாறுவேடம் தரித்து, நகர்வலம் செல்வார். அப்படிச் செல்லும்போது, தான் சந்திக்கின்ற மனிதர்களோடு அவர் பேசுவார். அப்பொழுது அவர்கள் அரசாங்கத்தைப் பற்றி சொல்லக்கூடிய குறை நிறைகளைக் கேட்டுக்கொண்டு, குறைகளைச் சரிசெய்வார். இதனால் அவருடைய ஆட்சியில் மக்கள் எந்தக் குறையுமில்லாமல் இருந்தார்கள். ஒருநாள் இரவு அவர் ஒரு விவசாயியைப் போன்று மாறுவேடம் தரித்து, நகர்வலம் சென்றார். அன்று அவர் நிறைய இடங்களைச் சுற்றிப் பார்த்தார். அதனால் அவர் மிகவும் களைப்பாக இருந்தார். "வழியில் ஏதாவது விடுதி இருந்தால், அதில் சிறிதுநேரம் தங்கிவிட்டு, விடிவதற்கு முன்னம் அரண்மனைக்குச் சென்றுவிடலாம்" என்று யோசித்துக்கொண்டே நடந்துசென்றார். அவர் இவ்வாறு யோசித்துக்கொண்டே நடந்துகொண்டிருக்கும்போதே, அவருடைய பார்வையில் ஒரு பெரிய விடுதி தென்பட்டது.

உடனே அவர் அந்த விடுதிக் காப்பாளரிடம் சென்று, "ஐயா! நான் தொலைதூரத்திலிருந்து வருகிறேன்; சிறிதுநேரம் இந்த விடுதியில் தங்குவதற்கு எனக்கு இடம் கிடைக்குமா...?" என்றார். விடுதிக் காப்பாளர் மாறுவேடத்தில் இருந்த அரசரைப் பார்த்துவிட்டு, அவர் அரசர் என்று தெரியாமல், "பெரியவரே! இந்த விடுதி பெரிய பெரிய மனிதர்கள் தங்கக்கூடிய விடுதி... உம்மைப்போன்ற சாதாரண விவசாயியை இதில் தங்கவைக்க முடியாது. மீறி நான் இந்த விடுதியில் உம்மைத் தங்கவைத்தால், விடுதியின் உரிமையாளர் என்னை வேலையை விட்டே நீக்கிவிடுவார்" என்றார். இதைக்கேட்டு விவசாயியின் தோற்றத்தில் இருந்த அரசர் சற்று அதிர்ச்சியடைந்தாலும், அதை வெளியே காட்டிக்கொள்ளாமல், அங்கிருந்து மெல்ல நடக்கத் தொடங்கினார்.

இவற்றையெல்லாம் சற்றுத் தொலைவில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த காவலாளி ஒருவர், விடுதிக்காப்பாளரிடம் ஓடிவந்து, "ஐயா! இவருடைய தோற்றம் வேண்டுமானால் ஒரு விவசாயியைப் போன்று இருக்கலாம். ஆனால், இவருடைய குரலும் இவருடைய நடையும் நம்முடைய அரசரைப் போன்று இருக்கின்றன. நிச்சயம் இவர் நம்முடைய அரசராகத்தான் இருப்பார்" என்றார். இதைக் கேட்டு அதிர்ந்துபோன விடுதிக்காப்பாளர் அரசரிடம் வேகமாக ஓடிச்சென்று, "அரசே! நீங்கள் ஒரு சாதாரண விவசாயியைப் போன்று இருந்ததால்தான் அப்படிப் பேசிவிட்டேன்! என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்... நீங்கள் எங்களுடைய விடுதியில் வந்து தங்குவது நாங்கள் பெற்ற மிகப்பெரிய பேறு! வாருங்கள்" என்று அவரை வாஞ்சையோடு அழைத்தார். அதன்பின் அவருடைய அழைப்பினை ஏற்று, அரசர் அங்கு தங்கிவிட்டுச் சென்றார்.

இந்த நிகழ்வில் வருகின்ற அரசரின் தோற்றம் ஒரு சாதாரண விவசாயியைப் போன்று இருந்தாலும் அவருடைய குரலும் அவருடைய நடையும் அவர் அரசர் என்பதை நிரூபித்ததுபோன்று, இயேசு இம்மண்ணுலகில் வாழ்ந்தபோது ஒரு தச்சரின் மகனாக, பாவிகளின் நண்பராக வலம்வந்தாலும் உண்மையில் அவர் எல்லா அதிகாரமும் தன்னகத்தே கொண்ட ஓர் ஒப்பற்ற அரசர். அப்படிப்பட்ட ஒப்பற்ற அரசரின் பெருவிழாவைத்தான் கிறிஸ்து அரசர் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றோம். இந்த அரசர் எப்படிப்பட்ட அரசர்? இவருடைய ஆட்சியில் பங்குகொள்ள நாம் என்ன செய்யவேண்டும்? என்பவைபற்றி இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.

நமக்காகத் துன்புற்ற/துன்புறும் அரசர்

கிறிஸ்து அரசர் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளின் நற்செய்தி வாசகத்தில், இயேசு இரண்டு கள்வர்கள் அல்லது குற்றவாளிகள் நடுவில், துன்பங்களை அனுபவித்தவாறு சிலுவையில் தொங்கிக்கொண்டிருப்பதாக வாசிக்கின்றோம். இயேசு சாதாரணமானவர் கிடையாது; ஒப்பற்ற அரசர். ஆனால், குற்றவாளியைப் போன்று சிலுவையில் தொங்கி, துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றார். எவ்வளவு பெரிய முரண் இது! இந்தக் காட்சி நமக்கொரு முக்கியமான செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அதுதான் இயேசு இவ்வுலக அரசர்களைபோன்று சட்டங்களாலும் அடக்குமுறைகளாலும் மக்களைத் துன்புறுத்துகின்ற அரசர் கிடையாது. மாறாக, மக்களுக்காக மக்களுடைய பாவங்கட்காகத் துன்புறும் அரசர் என்பதாகும்.

இறைவாக்கினர் எசாயா இதனை அழகாகக் கூறுவார், "அவரோ நம் குற்றங்கட்காகக் காயமடைந்தார்; நம் துன்பங்களைச் சுமந்துகொண்டார்; நமக்கு நிறைவாழ்வளிக்கத் தண்டிக்கப்பட்டார்." (எசா 53:5) எவ்வளவு உண்மையான வார்த்தைகள் இவை! இயேசு இன்றைக்கு இருக்கின்ற அரசர்களைப் போன்று துன்புறுத்துகின்ற அரசர் அல்ல. மாறாக, நமக்காகத் துன்புற்ற, எளியவர், வறியவர் துன்புறுகின்றபோது, அவர்களோடு சேர்ந்து தானும் துன்புறுகின்ற (திப 9:5) துன்புறும் அரசராக, துன்புறும் ஊழியராக இருக்கின்றார். அதனால்தான் அவர் ஒப்பற்ற அரசராக இருக்கின்றார்.

மன்னிக்கும் கிறிஸ்து அரசர்

கிறிஸ்து அரசர் நம்மாகத் துன்புற்ற இன்றும் துன்புறுகின்ற அரசர் மட்டும் கிடையாது; அவர் குற்றங்களை மன்னிக்கின்ற அரசராக இருக்கின்றார். இன்றைய நற்செய்தியின் முந்தைய பகுதியில் இயேசு தன்னைத் துன்புறுதியவர்கட்காகத் தந்தைக் கடவுளிடம், "தந்தையே! இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்கட்குத் தெரியவில்லை" (23: 34) என்று மன்றாடுவார். தவறுசெய்தவர்களைத் தண்டிக்கின்ற; பழிவாங்கத் துடிக்கின்ற அரசர்கட்கு நடுவில், தவறுகளை மன்னிக்கின்ற அரசராக இருந்து இயேசு வித்தியாசப்படுகின்றார். இன்னும் சொல்லப்போனால் இயேசு மன்னிப்பைக் குறித்துப் போதித்ததோடு மட்டுமல்லாமல் (லூக் 6: 27-88) தவறுசெய்தவர்களை மன்னிகின்றார். இவ்வாறு அவர் மன்னிக்கின்றராக இருந்து, ஒப்பற்ற அரசராகத் திகழ்கின்றார்.

இயேசு தனக்கெதிராகக் குற்றம் செய்தவர்களை மன்னித்ததால்தான் அடுத்த நாற்பது ஆண்டுகட்கு யூதர்கட்கு எந்தவோர் அழிவும் நேரவில்லை. அந்த நாற்பது ஆண்டுகளில் அவர்கள் மனமாறியிருக்கலாம். ஆனால் அவர்கள் மனம்மாறாததால், நாற்பது ஆண்டுகள் கழித்து – கி.பி. 70 ஆம் ஆண்டில் உரோமையர்களிடமிருந்து அழிவைச் சந்தித்தார்கள்.

மீட்பை வழங்கும் அரசர்

இன்றைய இறைவார்த்தை கிறிஸ்து அரசரைக் குறித்து சொல்லும் மிக முக்கியமான செய்தி, கிறிஸ்து அரசர் பாவமன்னிப்பாகிய மீட்பை வழங்குகின்ற அரசர் என்பதாகும். இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் இச்செய்தியினை, "..... அம்மகனால்தான் (இயேசுவால்தான்) நாம் பாவமன்னிப்பாகிய மீட்பைப் பெறுகின்றோம் (14) என்ற வார்த்தைகளில் கூறுவார்.

புனித பவுல் கூறுகின்ற இந்தக் கூற்றுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பவர்தான், இன்றைய நற்செய்தியில் வருகின்ற, தன்னுடைய குற்றத்தை உணர்ந்து, "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்று சொன்ன நல்ல கள்வர். அந்த மனிதர் இவ்வாறு சொன்ன மறுகணம் இயேசு அவரிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர்" என்கின்றார். இதிலிருந்து இயேசு, வேறு எந்த அரசராலும் தரமுடியாத பாவ மன்னிப்பாகிய மீட்பைத் தரக்கூடியவர் என்ற உண்மை உறுதியாகின்றது. இதனால்தான் இயேசு ஒப்பற்ற அரசராக இருக்கின்றார்.

இப்படிப்பட்ட ஒப்பற்ற அரசரின் ஆட்சியில் நாமும் பங்குபெற வேண்டும் என்றால், அவரைப் போன்று நாமும் பிறர்க்காக துன்பங்களை ஏற்கவும் பிறருடைய குற்றங்களை மன்னிக்கவும் தயாராகவேண்டும். துன்பங்களை ஏற்பதற்கும் குற்றங்களை மன்னிப்பதற்கும் உள்ளத்தில் அன்புவேண்டும். உள்ளத்தில் அன்பு இல்லையென்றால் எதுவும் சாத்தியமில்லை. ஆகையால், ஒப்பற்ற அரசராம் இயேசுவைப் போன்று உள்ளத்தில் பேரன்பு கொண்டு பிறர்க்காகத் துன்பங்களை ஏற்கவும் பிறர் செய்த குற்றங்களை மன்னிக்கவும் தயாராவோம்; கிறிஸ்து அரசரின் ஆட்சியில் பங்குபெறும் தகுதி பெறுவோம்.

சிந்தனை

இயேசு தன் சீடர்களிடம் இறைவனிடம் வேண்டுவதற்குக் கற்றுக்கொடுத்தபோது, "உமது ஆட்சி வருக" (மத் 6:10) என்று சொல்லி வேண்டக் கற்றுத்தருவார். நாம் இறைவனின் ஆட்சி இப்புவியில் வருவதற்கு மன்றாடுவோம். மன்றாடுவதோடு மட்டுமல்லாமல், ஒப்பற்ற அரசராம் இயேசுவின் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 
 
Free Blog Widget
Stats Counter
hit counter