maraikal
MUM
"

இளையோர்

 

                                  பொதுக்காலம் 31ம் ஞாயிறு - 1ம் ஆண்டு

                                           வாசகம்  09-11-2019

முதல் வாசகம்

தூய முத்தம் கொடுத்து ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 16: 3-9, 16, 22-27

qசகோதரர் சகோதரிகளே, கிறிஸ்து இயேசுவுக்காக என்னோடு சேர்ந்து உழைக்கின்ற பிரிஸ்காவுக்கும் அக்கிலாவுக்கும் என் வாழ்த்து. அவர்கள் என் உயிரைக் காக்கத் தலைகொடுக்கவும் முன்வந்தார்கள். அவர்களுக்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்.

நான் மட்டும் அல்ல, பிற இனத்துத் திருச்சபைகள் அனைத்துமே நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றன. அவர்கள் வீட்டில் கூடும் திருச்சபைக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள்.

என் அன்பார்ந்த எப்பைனத்துக்கும் வாழ்த்துக் கூறுங்கள். ஆசியாவில் கிறிஸ்துவை முதன்முதல் ஏற்றுக்கொண்டவர் இவரே. உங்களுக்காக பாடுபட்டு உழைத்த மரியாவுக்கு வாழ்த்துத் தெரிவியுங்கள்.

என் உறவினர்களும் உடன் கைதிகளுமான அந்திரோனிக்கு, யூனியா ஆகியவர்களுக்கும் என் வாழ்த்துகள்; திருத்தூதர்களுள் இவர்கள் பெயர் பெற்றவர்கள்; இவர்கள் எனக்குமுன் கிறிஸ்தவர்கள் ஆனார்கள்.

ஆண்டவருக்கு உரியவரான என் அன்பார்ந்த அம்பிலியாத்துக்கு வாழ்த்துகள். கிறிஸ்துவுக்காக உழைக்கும் என் உடன் உழைப்பாளரான உர்பானுக்கும் என் அன்பார்ந்த ஸ்தாக்கிக்கும் வாழ்த்துச் சொல்லுங்கள். தூய முத்தம் கொடுத்து ஒருவர் மற்றவரை வாழ்த்துங்கள். கிறிஸ்துவின் எல்லாச் சபைகளும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகின்றன.

இந்தத் திருமுகத்தை எழுதிக் கொடுத்த தெர்த்தியுவாகிய நான் ஆண்டவருக்கு உரியவன் என்னும் முறையில் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறேன். நான் தங்குவதற்கும் சபையினர் அனைவரும் ஒன்று கூடுவதற்கும் தம் வீட்டில் இடமளிக்கிற காயு உங்களுக்கு வாழ்த்துச் சொல்கிறார்.

நகரத்தின் பொருளாளரான எரஸ்தும் நம் சகோதரனாகிய குவர்த்தும் உங்களுக்கு வாழ்த்துக் கூறுகிறார்கள். இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர்.

ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப் பட்டுள்ளது. இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது.

என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரியவந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர்.

ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 145: 2-3. 4-5. 10-11 (பல்லவி: 1) Mp3


பல்லவி: என் கடவுளே, என் அரசே! உம் பெயரை எப்பொழுதும் போற்றுவேன்.

2 நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். 3 ஆண்டவர் மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது. பல்லவி

4 ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு உம் செயல்களைப் புகழ்ந்துரைக்கும்; வல்லமைமிகு உம் செயல்களை எடுத்துரைக்கும். 5 உமது மாண்பின் மேன்மையையும் மாட்சியையும் வியத்தகு உம் செயல்களையும் நான் சிந்திப்பேன். பல்லவி

10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள் உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப் பற்றிப் பேசுவார்கள். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

2 கொரி 8: 9

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து செல்வராயிருந்தும் அவருடைய ஏழ்மையினால் நீங்கள் செல்வராகுமாறு உங்களுக்காக ஏழையானார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்?

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 9-15


அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள்.

மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார்.

மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரியவற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார்.

நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப்பார்? பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத்தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்?

எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப்பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.''

பண ஆசைமிக்க பரிசேயர் இவற்றையெல்லாம் கேட்டு இயேசுவை ஏளனம் செய்தனர்.

அவர் அவர்களிடம் கூறியது: "நீங்கள் உங்களை மக்கள்முன் நேர்மையாளராகக் காட்டிக்கொள்கிறீர்கள். கடவுள் உங்கள் உள்ளங்களை அறிவார்.

நீங்கள் உங்களை மக்கள்முன் உயர்ந்தவர்களாகக் காட்டிக்கொள்வது கடவுள் பார்வையில் அருவருப்பாகும்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
இலாத்தரன் பேராலய தேர்ந்தளிப்பு விழா (நவம்பர் 09)

நிகழ்வு

ஒருசில நூற்றாண்டுகளுக்கு முன்பாக நம்முடைய இந்தியத் திருநாட்டில் (?) நடைபெற்ற நிகழ்வு. சுக்யா என்ற சிறுமி ஒருத்தி இருந்தாள். அவள் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்தவள். ஒருநாள் அவள் தீராத நோயினால் பாதிக்கப்பட்டு படுத்தபடுக்கையானாள். அந்த நேரத்தில் அவளுடைய அண்டை வீட்டைச் சார்ந்தவர்கள், இந்தக் கொடிய நோய் நீங்குவதற்கு ஊரின் மலைமேல் இருக்கும் ஆலயத்தில் கொடுக்கப்படும் அர்ச்சனை மலரை எடுத்துவந்து இவளுடைய தலையில் வைக்கவேண்டும். அப்போதுதான் இவளுடைய நோய் குணமாகும் என்று சொன்னார்கள். அவர்களுடைய பேச்சு சரியெனப்படவே சுக்யாவின் தந்தை ஊரின் மலைமேல் இருக்கும் ஆலயத்திற்குப் புறப்பட்டார். ஆனால் அதில் ஒரு பிரச்சனை இருந்தது. அது என்னவென்றால், அந்த ஆலயத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்கள் யாரும் உள்ளே நுழையக்கூடாது, அப்படியே நுழைந்தால் அது தீட்டு என்று சொல்லப்பட்டது. சுக்யாயின் தந்தை எப்படியோ தன்னுடைய முகத்தை மறைத்துக்கொண்டு ஆலயத்தின் உள்ளே நுழைந்துவிட்டார்.

ஆலயத்தின் உள்ளே நுழைந்த அவர் அங்கு நடைபெற்ற வழிபாட்டில் கலந்துகொண்டு இறைவனைத் தரிசித்தார். பின்னர் ஆலயத்தில் குரு கொடுத்துக்கொண்டிருந்த அர்ச்சனை மலரை வாங்குவதற்காகத் தன்னுடைய கையை நீட்டியபோது, பின்னாலிருந்து ஒரு கை அவரைத் தடுத்தது. அது யார் என்று அவர் திரும்பிப் பார்த்தபோது மேல் சாதியைச் சேர்ந்த ஒருவர் அங்கு நின்றுகொண்டிருந்தார். அவர் சுக்யாவின் தந்தையிடம், "என்ன தைரியத்தில் இந்த ஆலயத்திற்குள் நுழைந்தாய்?. உன்னால் இந்த ஆலயமே தீட்டுப்பட்டுப் போய்விட்டது" என்று சொல்லி அவரை வெளியே போகச் சொன்னார். பின்னர் அவர் ஊரைக் கூட்டிஇ சுக்யாவின் தந்தைக்கு ஒருவார காலம் சிறைத்தண்டனையும் வாங்கித்தந்தார். சுக்யாவின் தந்தை ஒருவார காலம் சிறை தண்டனையை முடித்துக்கொண்டு வீட்டுத் திரும்பி வந்தபோது சுக்யா இறந்துபோய் இருந்தார். அப்போது அவர் ஆலயத்தில் நடக்கும் தீண்டாமைக் கொடுமைகளை நினைத்து கண்ணீர்விட்டு அழுதார்.

ஆலயம் - இறைவன் வாழும் இல்லம் - எல்லாருக்கும் சொந்தமானது. அதில் வேறுபாடு பார்ப்பது அந்த ஆண்டவனுக்கே அடுக்காத ஒன்றாகும்.

இன்று நாம் நினைவுகூரும் இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவானது ஆலயத்திற்கு உரிய சிறப்புப் பண்புகளை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. அதனை இப்போது சற்று ஆழமாக சிந்தித்துப் பார்ப்போம்.

வரலாற்றுப் பின்னணி

ஒவ்வொரு மறைமாவட்டத்திற்கும் ஒரு தலைமை ஆலயம் (Cathedral)) உண்டு. ஆயர்தான் இதற்குத் தலைவராக இருப்பார். ஆனால் தலைமை ஆலயங்களுக்கு எல்லாம் தலைமை ஆலயமாக இருப்பதுதோ இலாத்தரன் பேராலயமாகும். இதற்குத் தலைவராக இருப்பவர் திருத்தந்தை அவர்கள் ஆவார். இவ்வாலமானது 4 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த உரோமை அரசன் கான்ஸ்டான்டி நோபிள் வழங்கியது. தொடக்க திருச்சபையில் ஆலயம் என எதுவும் கிடையாது. மக்கள் இல்லங்களில் கூடி ஜெபித்து வந்தார்கள். கிறிஸ்தவர்களுக்கு எதிராக அடிக்கடி வேதகலாபனைகள் நடந்ததாலும் கிறிஸ்தவர்கள் தங்களுக்கென ஆலயம் கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது இந்த நேரத்தில்தான் கான்ஸ்டாண்டி நோபிள் கிறிஸ்தவ மதத்தை உரோமை அரசாங்கத்தின் அரச மதமாக அறிவித்தான். அதன் நிமித்தமாக 313 ஆம் ஆண்டு அவன் தன்னுடைய அரண்மனையை ஆலயமாக மாற்றி, அதனை திருச்சபைக்குத் தந்தான். 324 ஆம் ஆண்டு அப்போது திருத்தந்தையாக இருந்த முதலாம் சில்வஸ்டர் ஆலயத்தை அர்ச்சித்து அதனை உலக மீட்பரின் பாதுகாவலில் ஒப்படைத்தார்.

சிறுது காலத்திற்கு இந்த ஆலயம் திருமுழுக்கு யோவானின் பாதுகாவலுக்கு வைக்கப்பட்டது, பின்னர் நற்செய்தியாளர் தூய யோவானின் பாதுகாவலில்இ அவருடைய பெயரில் வைக்கப்பட்டது. அது இன்று வரை அவருடைய பெயராலே அழைக்கப்பட்டு வருகின்றது.

ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக திருத்தந்தை அங்குதான் இருந்தார். பதினான்காம் நூற்றாண்டில் திருத்தந்தை அவிஞ்னோன் என்ற இடத்திற்கு நாடு கடத்தப்பட்டு, மீண்டுமாகத் திரும்பி வந்தபோது இலாத்தரன் பேராலயமானது சிதிலமடைந்தது காணப்பட்டது. எனவே, திருத்தந்தை தங்குவதற்கு அது சரியான இடமில்லை என்று சொல்லி, திருத்தந்தை பதினோராம் கிரகோரி சாந்தா மரியா என்ற இடத்திற்குச் சென்றார். திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்தூஸ் என்பவரோ தன்னுடைய இடத்தை வத்திக்கானுக்கு மாற்றினார். எனவே, அன்றிலிருந்து இன்று வரை திருத்தந்தையர்கள் வத்திகானிலே தங்கி வருகிறார்கள். இலாத்தரன் பேராலயமோ தற்போது ஓர் அருங்காட்சியம் போன்று இருக்கின்றது.

இந்த பேராயலத்திற்கு மேலும் பல சிறப்புகள் உண்டு. ஆண்டவர் இயேசு இறுதி இராவுணவு உண்ட மேசையும், திருச்சபையின் முதல் திருத்தந்தையாகிய தூய பேதுரு திருப்பலி நிறைவேற்றிய பீடமும் இங்குதான் இருக்கின்றன.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.


ஆலயம் எல்லா மக்களுக்கான இறைவேண்டலில் வீடு


"
ஆலயம் தொழுவது சாலமும் நன்று", "ஆலயம் இல்லாத ஊரில் குடியிருப்பது நல்லதன்று" போன்ற முதுமொழிகள் ஆலயம் நம்முடைய வாழ்வில் எந்தளவுக்கு நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுபவையாக இருக்கின்றன. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் இறைவன் தங்கும் ஆலயத்தை தூய்மையாக வைத்திருக்கின்றோமா?, அதில் வழிபடும் நாம் தூய்மையாக இருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். திருப்பாடல் ஆசிரியர் கூறுவார், "மாசற்றவராய் நடப்போர், உளமார உண்மை பேசுபவர்; தம் நாவினால் புறங்கூறார்; தம் தோழருக்குத் தீங்கிழையார்; அடுத்தவரைப் பழித்துரையார்; நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவோர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை உயர்வாக மதிப்பவர்; தமக்குத் துன்பம் வந்தாலும், கொடுத்த வாக்குறுதியை மீறார்; தம் பணத்தை வட்டிக்குக் கொடாதவர்; மாசற்றவருக்கு எதிராகக் கையூட்டுப் பெறாதவர் இவர்களே ஆண்டவரின் திருமலையில் குடியிருக்கத் தகுதிவுடைவர்" என்று. (திபா 15). நாம் இத்தகைய நெறிப்படி வாழ்கின்றோமா? என்பது நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. மேல் சொல்லப்பட்ட வழிமுறைகளின் படி நடக்காதபோது இறைவனின் இல்லத்திற்குள் நுழைய தகுதி இல்லாமல் போய்விடுகின்றோம் என்பதுதான் உண்மை.

மேலும் ஆலயம் எல்லா மக்களுடைய வழிபாட்டிற்கும் உரியது (எசாயா 56:7). அதனை ஒரு குறிப்பிட்ட இனமோ, சாதியோ சொந்தம் கொண்டாடுவது கிறிஸ்துவின் போதனைக்கு எதிரானது என்பதையும் நாம் புரிந்துகொண்டு வாழவேண்டும்.


தூய ஆவி வாழும் இல்லமாகிய மனிதர்களுக்கும் மதிப்புத் தரவேண்டும்


தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் கூறுவார், "நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும் கடவுளின் ஆவியார் உங்களில் குடிகொண்டிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?, ஒருவர் கடவுளின் கோவிலை அழித்தால் கடவுள் அவரை அழித்துவிடுவார். ஏனெனில், கடவுளின் கோவில் தூயது; நீங்களே அக்கோவில்." (3:16-17). ஆம், ஒவ்வொருவரும் தூய ஆவியார் வாழும் கோவில். எனவே, நாம் நம்மிடம் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து ஒருவர் மற்றவருக்கு மதிப்பளித்து வாழவேண்டும். அப்போதுதான் இறைவன் வாழும் இல்லிடமாக நாம் மாறமுடியும். இல்லையென்றால் கடவுளில் சாபத்திற்குத் தான் நாம் உள்ளாகவேண்டி வரும். பல நேரங்களில், மனிதரால் கட்டப்பட்ட கோவிலுக்கு மதிப்பளிக்கும் நாம், இறைவனால் கட்டப்பட்ட கோவிலுக்கு மதிப்பளிக்க மறுக்கின்றோம். இந்நிலை மாறவேண்டும். எல்லாரிலும் எல்லாம் வல்ல இறைவன் குடிகொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்து வாழவேண்டும்.

ஆகவே, இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் இறைவன் வாழும் இல்லத்திற்கு உரிய மரியாதை செலுத்துவோம், உயிருள்ள ஆலயங்களாகிய மனிதர்களுக்கு மதிப்பளிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



 
இலாத்தரன்  பேராலய நேர்ந்தளிப்பு விழா

"ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே, ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே"

இன்று அன்னையாம் திருச்சபை எல்லா ஆலயங்களுக்கும் தாய் ஆலயமாக இருக்கக்கூடிய இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. ஒவ்வொரு ஆயருக்கும் ஒரு பேராலயம் பொறுப்பில் இருக்கும். அந்த விதத்தில் பார்க்கும்போது உரோமை நகரின் ஆயராக இருக்கக்கூடிய திருத்தந்தையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பேராலயம்தான் இந்த இலாத்தரன் பேராலயம்.

தொடக்கத் திருச்சபையில் கிறிஸ்தவர்கள் உரோமை அரசாங்கத்தால் அதிகமாகத் துன்புறுத்தப்பட்டார்கள். எனவே கிறிஸ்தவர்கள் உரோமையர்களுக்குப் பயந்து இல்லங்களில் தங்களுடைய வழிபாடுகளைச் செய்துவந்தார்கள். அவர்களுக்கு என்று ஆலயங்கள் கிடையாது. என்றைக்கு உரோமையை ஆண்ட கான்ஸ்டாண்டிநோபுள் என்ற மன்னன் கிறிஸ்தவ மதத்தை தன்னுடைய தேசத்தின் மதமாக அறிவித்தானோ அன்றைக்கு ஆலயங்கள் பெருகத் தொடங்கியன. கான்ஸ்டாண்டிநோபுள் தான் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியதன் நிமித்தமாக தன்னுடைய அரண்மனையையே ஆலயமாகப் பயன்படுத்தத் தந்தான். அப்படி வந்ததுதான் இந்த இலாத்தரன் பேராலயம்.

இப்பேராலயம் 324 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி நேர்ந்தளிக்கப்பட்து. தொடக்கத்தில் இப்பேராலயம் உலக மீட்பருக்கும், பின்னர் திருமுழுக்கு யோவானுக்கும், அதன்பின்னர் நற்செய்தியாளரான தூய யோவானுக்கும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

பேராலயம் நேர்ந்தளிக்கப்பட்ட நாளிலிருந்து ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகள் திருந்தந்தையர்கள் அங்கேதான் தங்கியிருந்தார்கள். ஒருசில குழப்பங்களின் காரணமாக சில காலம் அவிஞ்னோன் என்ற இடத்தில் திருத்தந்தையர்கள் தங்க நேர்ந்தது. திருத்தந்தை பதினோராம் கிரஹோரியின் காலத்தில் அந்த குழப்பங்கள் எல்லாம் தீர்ந்து, உரோமை நகருக்கு அவர் வந்தபோது அங்கே இலாத்தரன் பேராலயம் சேதமடைந்திருப்பதைக் கண்டார். எனவே அவர் பேராலயத்தைப் புதுப்பிக்கத் தொடங்கினார். அதன்பிறகு திருத்தந்தை ஐந்தாம் சிக்ஸ்துஸ் என்பவர் இப்போது உள்ள வடிவத்தைக் கொண்டுவந்து நேர்ந்தளித்தார்.

இன்னும் ஒருசில காரணங்களால் இலாத்தரன் பேராலயம் மேலும் சிறப்புப் பெறுவதாக இருக்கின்றது. குறிப்பாக ஆண்டவர் இயேசு தன்னுடைய இறுதி இராவுணவின்போது உண்ணப் பயன்படுத்திய மேசை இங்கேதான் இருக்கின்றது. அதேபோன்று திருத்தூதரான தூய பேதுரு திருப்பலி நிறைவேற்றிய பலிபீடம் இங்கேதான் இருக்கின்றது. இப்படி பல்வேறுபட்ட சிறப்புகளைக் கொண்டதால் இப்பேராலயம் "பொன் ஆலயம் - Golden Church" என்று அழைக்கப்படுகின்றது.

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட வாசகங்கள் நமக்கு என்ன செய்தியைத் தருகின்றன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.

பொதுவாக ஆலயம் என்று சொன்னால் (ஆ)ன்மாக்கள், ஆண்டவனில் (லயிக்க)க்கூடிய இடம் என்று சொல்வார்கள். இது உண்மை. ஆலயத்தில்தான் இறைவனுக்கும், மனிதருக்கும் இடையே ஒரு நல்லுறவு ஏற்படுகின்றது. அங்கேதான் மனிதன் தன்னுடைய கவலையை மறந்து, அமைதியில் இளைப்பாறுகிறான். ஏனென்றால் ஆலயம் ஆண்டவரின் அருளும், இரக்கமும் பொங்கி வழியும் ஓர் இல்லிடமாக விளங்குகின்றது.

இறைவாக்கினர் எசேக்கியேல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், கோவிலிலிருந்து வரும் தண்ணீர் பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும், அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில், இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். அது பாயுமிடமெல்லாம் உயிர் வாழும்" என்று படிக்கின்றோம். கோவிலிருந்து வரும் தண்ணீரை கடவுளின் அருளாக நாம் புரிந்துகொள்ளலாம். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு எருசலேம் ஆலயத்தை "தந்தையின் இல்லம்" என்று அழைக்கின்றார். அதனால்தான் அவ்வாலயத்தில் வாணிபம் செய்தவர்களை எல்லாம் அவர் விரட்டி அடிக்கின்றார்.

கிறிஸ்தவர்களாகிய நாம் ஆலயத்தின் மதிப்பையும், பெருமையும் உணர்ந்துகொண்டு அதற்கேற்ப வாழ்கின்றோமா என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஏனென்றால் ஆலயம்தான் நம்முடைய வாழ்வில் ஆற்றலின் ஊற்று.

இறையியலாளர்களின் இளவரசர் என்று அழைகக்ப்படும் தூய தாமஸ் அக்வீனஸ் அவர்களுடைய வாழ்வில் நடைபெற்ற நிகழ்வு. ஒருநாள் இரவு அவர் நப்லஸ் (Naples) என்று இடத்தில் இருந்த டொமினிக்கன் ஆலயத்தில் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருக்கும்போது  அவருடைய உடலானது பூமியை விட்டு சற்று உயரத்தில் இருந்தது. அப்போது தற்செயலாக அங்கு வந்த ஆலயப் பணியாளர் ஒருவர் இதைக் கண்ணுற்று வியப்புள்ளாகி நின்றார். அவர் தொடர்ந்து என்ன நடக்கின்றது என்று கூர்ந்து கவனித்தார். அந்நேரத்தில் ஆண்டவர் இயேசு தாமஸ் அக்வீனசிடம் பேசத் தொடங்கினார், "

"அக்வீனாஸ் நீ திருச்சபைக்கு மிகப்பெரிய பங்களிப்பைத் தந்திருக்கிறாய் (Summa Theologiae). அதனால் உனக்கு நான் ஒரு பரிசினைத் தரப்போகிறேன். என்ன பரிசுவேண்டும் என்று கேள்,  நான் தருகிறேன்" என்றார். அதற்கு அவர், "ஆண்டவரே, எனக்கு உம்மைத் தவிர வேறு ஒன்றும் வேண்டாம்" என்றார். அதன்பிறகு தாமஸ் அக்வினாஸ் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. இதை நேரில் கண்ணுற்ற அந்த ஆலயப் பணியாளரே சாட்சி,.

கடவுளின் திருச்சன்னதியில் இருக்கும்போது நாம் அடையும் ஆறுதலும், மகிழ்ச்சியையும் வார்த்தைகளால் சொல்லமுடியாது என்பதற்கு மேல சொல்லப்பட்ட நிகழ்ச்சி சான்று. ஆகவே நாம் ஆண்டவரது அருளின் ஊற்றாக இருக்கும் ஆலயத்திற்கு தகுந்த மதிப்பளிக்க வேண்டும், அதனை சந்தைவெளி ஆக்கக்கூடாது என்பதுதான் இயேசு கூறவிரும்பும் செய்தியாக  இருக்கின்றது.

அடுத்ததாக தூய பவுல் கொரிந்தரியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், "நீங்கள் கடவுளுடைய கோவிலென்றும், கடவுளின் ஆவியார் உங்களுக்குள் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா? என்கிறார். ஆம், நாம் ஒவ்வொருவரும் தூய ஆவி வாழும் கோவில். எனவே சக மனிதருக்கு மதிப்பளிக்கின்ற ஒருவர் கடவுளுக்கு மதிப்பளிக்கிறார். அதேநேரத்தில் சக மனிதரை இழிவுபடுத்தும் ஒருவர் கடவுளையும் இழிவுபடுத்துகிறார் என்ற  உண்மையைப் புரிந்துகொண்டு வாழவேண்டும்.

ஆகவே, இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் இறைவன் வாழும் ஆலயத்திற்கு, மனிதர்களுக்கு மதிப்பளிப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

================================================================================

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழா

தந்தியை கண்டுபிடித்தவர் (தந்தி கொடுப்பது இன்று வழக்கொழிந்து போய்விட்டது) சாமுவேல் மோர்ஸ் என்பவர்.

ஒருமுறை அவரிடத்தில் சாதாரண மனிதர் ஒருவர் அணுகிவந்து, "மிகப் பெரிய விஞ்ஞானியான உங்களுக்கு வாழ்க்கையில் துன்பம், கஷ்டம், கலக்கம் இவையெல்லாம் வருவதுண்டா?" என்று கேட்டார். அதற்கு அவர், "துன்பம் இல்லா வாழ்க்கை வாழ நான் என்ன கடவுளா?; எல்லாருடைய வாழ்க்கையையும் என்னுடைய வாழ்க்கையிலும் துன்பங்கள், கஷ்டங்கள் எல்லாம் உண்டு" என்றார்.

உடனே வந்தவர் அவரிடம், "அப்படிப்பட்ட நேரத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்" என்று கேட்டார். அதற்கு அவர், "நான் என்னுடைய வாழ்க்கையின் இருள் சூழ்ந்த நேரங்களில் - துன்பமான வேளையில் - கோவிலுக்குச் சென்று சிலமணி நேரம் உட்கார்ந்து ஜெபிப்பேன். அது எனக்கு ஆறுதலையும், வல்லமையையும் தரும்" என்றார்.

மிகப்பெரிய விஞ்ஞானியே கோவிலுக்குச் சென்று ஜெபித்தார் என்றால் சாதாரண மனிதர்களாகிய நாம் கோவிலின் முக்கியத்துவத்தை - ஜெபத்தின் முக்கியத்துவத்தை -உணர்ந்து வாழவேண்டும்.

இன்று திருச்சபையானது இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடுகின்றது. கி.பி. நான்காம் நூற்றாண்டில் (கி.பி 333 ஆம் ஆண்டுக்குப் பிறகு) கிறிஸ்தவ மதம் உரோமையில் அரசமதமாக அங்கிகரிக்கப்பட்ட பிறகு, அப்போது அரசராக இருந்த கான்ஸ்டன்டைன் திருமுழுக்கு பெற்றான். அவன் திருமுழுக்குப் பெற்ற இடத்தில் எழுந்தருளிய ஆலயம்தான் இலாத்தரன் பேராலயம் என்று அழைக்கப்படுகின்றது.

இவ்வாலயம் உலகில் உள்ள ஆலயங்களுக்கும் தாய் ஆலயம் என்றும், திருத்தந்தையின் ஆலயம் என்று அழைக்கப்படுகின்றது. திருத்தந்தை இங்கே தான் தங்குகிறார். இவ்வாலயத்தில் 5 பொதுச்சங்கங்களும், 20 ஆயர் பேரவையும் நடைபெற்றிருக்கிறது. பேதுரு மற்றும் யோவானின் தலையை வெள்ளிப்பாத்திரத்தில் இங்கேதான் வைத்திருக்கிறார்கள். அத்தோடு பேதுரு திருப்பலி நிறைவேற்றிய பீடமும், ஆண்டவர் இராவுணவு உண்ட மேசையும் இங்கேதான் இருக்கிறது. இப்படி பல்வேறு சிறப்புகளைப் கொண்ட இப்பேராலயமானது மூன்றாம் செர்ஜியுஸ் என்ற திருத்தந்தையால் திருமுழுக்கு யோவானுக்கும், இரண்டாம் லூசியஸ் என்ற திருத்தந்தையால் நற்செய்தியாளர் யோவானுக்கும் நேர்ந்தளிக்கப்பட்டது. இது "மீட்பரின் பேராலயம்" என்றும் அழைக்கப்படுகின்றது.

இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இந்நன்னாளில் இன்றைய வாசங்கள் வழியாக இறைவன் நமக்குத்தரும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு நிறைவு செய்வோம்.

இறைவாக்கினர் எசேக்கியேல் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் "கோவிலிலிருந்து வரும் தண்ணீர் பாயும் இடத்தில் உயிர்கள் வாழும்; பலவகையான மரங்கள் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; கனிகள் குறையா" (எசே 47:9,12) என்று படிக்கின்றோம். ஆம், இறைவனின் ஆலயம் நமக்கு உயிர் வாழ்வதற்கான ஆற்றலையும், வல்லமையையும் தரும் பிறப்பிடமாக இருக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகது. திருப்பாடல் 20:2 ல் வாசிக்கின்றோம், "ஆண்டவராகிய கடவுள் சீயோனிலிருந்து – எருசலேம் திருக்கோவிலிருந்து - உனக்குத் துணை புரிவாராக" என்று. ஆக, இறைவனின் ஆலயம் என்பது இவ்வுலகில் வாழும் உயிர்கள் அனைத்திற்கும் அருளையும், ஆசிரையும் தரும் இல்லிடம் என்பதை உணர்ந்து வாழவேண்டும்.

அடுத்ததாக, இறைவன் வாழும் திருக்கோவிலை நாம் தூய்மையாக வைத்திருக்கவேண்டியது நமது கடமையாகும். இதனை இன்றைய நற்செய்தி வாசகத்தில் படிக்கின்றோம். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு எருசலேம் திருக்கோவிலில் வாணிபம் செய்துகொண்டிருந்த மக்களை விரட்டி அடிக்கின்றார். "என் தந்தையின் இல்லத்தை கள்வர்கள் குகையாக மாற்றாதீர்கள்" என்று கடுஞ்சினம் கொள்கிறார். ஆலயம் எல்லா மக்களும் கூடி ஜெபிக்கக்கூடிய இடம். எனவே அதன் புனிதத் தன்மை பாதுக்காக்கப்படவேண்டும் என்பதே இயேசுவின் விருப்பமாக இருக்கின்றது. நாம் ஒவ்வொருவருமே ஆலயத்தின் புனிதத்தன்மையை உணர்ந்து, அதற்குரிய முக்கியத்துவத்தை கொடுத்து வாழ்வோம்.

நிறைவாக கற்களால் கட்டப்பட்ட கோவில் மட்டுமல்ல, கடவுளால் கட்டப்பட்ட கோவிலாகிய மனிதர்களை நாம் மனிதமாண்போடு நடத்தவேண்டும் என்று இரண்டாம் வாசகத்தில் பவுலடியார் தெளிவுபடுத்துகிறார். "நீங்கள் கடவுளின் கோவிலென்றும், தூய ஆவியார் உங்களுக்குள் குடியிருக்கிறார் என்றும் உங்களுக்குத் தெரியாதா?" என்கிறார் தூய பவுல் (1 கொரி 3:16). ஆதலால் நாம் ஒவ்வொருவரும் நம்மோடு வாழும் உயிருள்ள ஆலயங்களாகிய சக மனிதர்களை மனிதர்களாக மதித்து, அவர்களை முழுமையாக அன்புசெய்யக் கற்றுக்கொள்ளவேண்டும்.

ஆனால் இன்றைக்கு ஒரு மனிதன் தன்னோடு வாழும் சக மனிதர்களை மதிக்காத, அவர்களை விலங்கினும் கீழாக நடத்தக்கூடிய சூழ்நிலையைப் பார்க்கின்றோம். நாம் மனிதர்களை மனிதர்களாக மதிக்காததன் வெளிப்பாடுதான் சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும் வன்முறைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலை மாறவேண்டும். ஒருவர் மற்றவருக்கு - அவர் இறைவனின் சாயலால் படைக்கப்பட்டவர் என்பதை உணர்ந்து - சேவை செய்து வாழவேண்டும்.

"மனிதனால் உணவை உண்டு மட்டும் வாழ்ந்துவிட முடியாது. பணத்தை சம்பாதிப்பது அதன்மூலம் அந்தஸ்தை சேர்ப்பதால் வாழ்விற்குப் பயனில்லை. வாழ்வு இவற்றைவிட அடுத்தவருக்கு சேவை புரிவதில் கிடைக்கும் மாபெரும் மகிழ்ச்சியில் அடங்கியிருக்கிறது" என்பார் எட்வர்ட் பாக் என்ற அறிஞர். ஆம், இது முற்றிலும் உண்மை. மற்றவருக்கு சேவை செய்துவாழ்வதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

மேற்கு வாங்க மாநிலத்தில் முசிராபாத் என்ற குக்கிராமம் உள்ளது. இங்கே உள்ள யாவருமே கல்வியறிவு அற்றவர்கள்; போதிய அடிப்படைவசதி இல்லாதவர்கள். இக்கிராமத்தைச் சேர்ந்த பதினான்கு வயதே ஆனா பாபர்அலி என்ற மாணவன்தான் முதன்முதலில் இக்கிராமத்திலிருந்து பள்ளிக்கூடம் சென்று கல்வியறிவு பெற்றவன். தன்னுடைய வறுமையான சூழ்நிலையிலும், கல்விக் கட்டணம் செலுத்த போதிய பணம் இல்லாத போதிலும் முயன்று கல்வியறிவு பெற்றான்.

இவன் செய்த மிகப்பெரிய காரியம் பள்ளிக்கூடம் முடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபிறகு தன் வயதை ஒத்த சிறுவர், சிறுமியருக்கு பள்ளியில் தான் கற்ற பாடத்தைச் சொல்லிக்கொடுத்தான். தொடக்கத்தில் குறைவான எண்ணிக்கையிலே வந்த சிறுவர்கள் கூட்டம் இப்போது 800 மேல் வந்துகொண்டிருக்கிறது. அவனால் பாடம் சொல்லிக்கொடுக்கப்பட்ட குழந்தைகள் தங்களுடைய வீடுகளில் இருக்கும் பெற்றோர்களுக்கும் சொல்லிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாபர் அலி என்ற அந்த சிறுவனின் அளப்பெரிய செயலைப் பார்த்த பிபிசி என்ற சேனல் அவனுக்கு "இளையோருக்கான சிறந்த தலைமை ஆசிரியர்" என்ற விருதைக் கொடுத்திருக்கிறது. சிறுவன், தான் பெற்ற கல்வியை தன்னோடு மட்டும் வைத்துக் கொள்ளாமல், அதை பிறருக்கும் பயன்படுமாறு செய்தான்; நமக்கெல்லாம எடுத்துக் காட்டாக விளங்குகின்றான்.

நாம் ஒவ்வொருவருமே பிறரில் இறைவன் குடிக்கொண்டிருக்கிறார் என்ற மனநிலையில் வாழ்ந்தால் என்றும், எங்கும் ஆனந்தம் தான்.

ஆதலால் இலாத்தரன் பேராலய நேர்ந்தளிப்பு விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் இறையருளின் பிறப்பிடமான கோவிலுக்கு உரிய மரியாதை செலுத்தி வாழ்வோம். அத்தோடு உயிருள்ள ஆலயங்களை மனித மாண்போடு நடத்துவோம். அவர்களுக்கு உதவி புரிவோம். இறையருள் பெறுவோம்.

 
Free Blog Widget
Stats Counter
hit counter