maraikal
MUM
"

இளையோர்


தெய்வீகப் பெருமை கூறும் தேவ தாயின் வணக்க மாதம்


வைகாசி மாதம் வணக்க மாதமாகவும் மாதாவின் மாதமாகவும் நினைவு கூறப்படுகின்றது. நமக்கொரு தாய் இருக்கின்றார். நம்மை என்றும் காக்கின்றார் என்று பாடும் மாதமிது. மே மாதம் மாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம்.

“அருள் நிறைந்தவளே வாழ்க ஆண்டவர் உம்முடனே” என கபிரியேல் வான தூதர் மரியாளைப் புகழ்கின்றார். (லூக் 1:28) இறைவன் வாசம் செய்ய தேர்ந்து கொண்ட திருக்கோயில் நம் தாய் மரியாள். பெண்ணினத்தின் ஆசிர்வதிக்கப்பட்ட பேரரசி நம் பிரியமுள்ள அன்னை அவளை அன்றாடம் அன்புடன் நினைத்து நெஞ்சாரப் புகழ்வது நம் எல்லோரதும் கடமை.

சிறப்பாக நம் அன்னையை புகழவும் வாழ்த்தவும் இந்த மே மாதம் நமக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இம் மாதம் முழுவதும் தினமும் மாலையில் ஆலயத்தில் அல்லது நம் வீடுகளில் ஒன்றுகூடி செபமாலை மன்றாட்டுகளை அர்ச்சனைப் பூக்களாக்கி குடும்பங்களாக குழுக்களாக கூடி செபமாலை சொல்லுவோம்.

பெண்கள் கூடுமிடங்களில் பேச்சு நிறைந்திருக்கும். மாதாவின் வாழ்வை வாசிப்போர் மனதில் தெளிவாக ஒன்று புலப்படும். அது மாதா அதிகம் பேசியதில்லை என்பது. அவள் பேசாமலே சாதித்த பெருமைக்குரியவள்.

மரியாள் மணமாகாமலே தாயாக வேண்டுமென்பது இறைவன் வகுத்த நியதி அவள் மறுப்பேதும் கூறவில்லை. சட்டம் பேசவில்லை. “இதோ ஆண்டவருடைய அடிமை உமது சொற்படியே எனக்கு நிகழட்டும்” என்று இறைச்சித்தத்திற்கு பணிந்தவள்.

மாதா பரிசுத்த ஆவியின் அருட்பொழிவை முழுமையாகப் பெற்று ஆண்டவர் இயேசுவை தன் உதரத்தில் தாங்கி நமக்கு ஆலயமாய் இருக்கின்றார். இயேசுவின் பிரசன்னமும் பரிசுத்த ஆவியின் நிறைவும் தேவ அன்பை அவரிடம் ஊற்றுகின்றது.

கடவுள் அன்பாய் இருக்கின்றார். எனவே இறைவனின் பிரசன்னத்தை முழுமையாகப் பெற்ற அவள் மனித நேயம் நிறைந்தவளாய் தியாக அன்பை சுமந்தவளாய் மக்களை தேடி நன்மை செய்பவளாய் விளங்கினாள்.

முதிர் வயதில் தன் உறவினரான எலிசபேத் கருத்தாங்கி இருப்பதை அறிந்து 127 கி.மீ. பயணம் செய்து எலிசபேத்தை வாழ்த்தவும் உதவி செய்யவும் அவரைத் தேடி மாதா வருகின்றார். மாதாவைக் கண்டவுடன் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு எலிசபேத் உரத்த குரலில் “என் ஆண்டவருடைய தாய் என்னிடம் வர நாள் பேறு பெற்றது என்படி என வியந்து தன் மகிழ்வை பகிர்ந்து கொள்ளுகின்றார்.

கடவுளே அவள் வயிற்றில் வந்து பிறக்கின்றார் வான தூதர்கள் வாழ்த்துப்பா இசைக்கின்றார்கள். இடையர்களும் ஞானிகளும் போற்றிப் புகழ்கின்றனர். இதையெல்லாம் கண்ட மரியாள் ஆனந்தக் கூத்தாடவில்லை. அகம்பாவம் கொள்ளவில்லை, ஊரைக் கூட்டி உற்சாக விருந்து வைக்கவில்லை. மாறாக இந்நிகழ்ச்சிகளை உள்ளத்தில் இருத்தி சிந்திக்கிறாள். (லூக் 2:19)

பன்னிரண்டு வயதில் பாலன் இயேசு காணாமல் போகிறார். மூன்று நாட்களாகத் தேடியலைந்து ஆலயத்தில் கண்டுபிடிக்கின்றனர் அருமைப் பெற்றோர். “ஏன் இப்படிச் செய்தாய் மகனே உன் தந்தையும் நானும் உன்னைக் கவலையோடு தேடினோமே”? பரிதாபமாகக் கேட்கின்றாள் தாய்.

‘மன்னித்து விடம்மா வருத்தப்படாதே என்று மனம் குளிரப் பேசவில்லை மகன் “என்னை ஏன் தேடினீர்கள் என் தந்தையின் இல்லத்தில் இருப்பேனென்று தெரியாதா? (லூக் 2:49) என்று கேட்டார்?

இந்த எதிர்க் கேள்விக்கு நம் வீட்டு அம்மாவாகயிருந்தால் என்ன செய்திருப்பாள்? ஆனால் மரியாள் இதையெல்லாம் மனதில் இருத்தி சிந்திக்கிறாள். (லூக் 2:51)

ஆண்டவர் இயேசு தம் சீடர்களுடனும் மக்களுடனும் பேசிக்கொண்டிருக்கிறார். மகனைத் தேடி வந்திருக்கிறாள் மரியன்னை “உம் தாயும் சகோதரர்களும் உம்மைப் பார்க்க விரும்பி வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள்” என்றனர் சீடர்கள்.

“இறை வார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுவோரே எனது தாயும் சகோதரர்களும் ஆவார்கள் என்கிறார் இயேசு. பெற்ற தாயை மதிக்காதவன் என்று அந்த சாமானியத்தாய் சங்கடப்படவில்லை மனதுக்குள் அடக்கி மௌனம் சாதிக்கிறாள்.

இயேசு பிடிபட்டது, அடிப்பட்டது சித்திரவதைகள் அனுபவித்தது, சிலுவை மரணத்திற்கு தீர்ப்பிடப்பட்டது எல்லாமே அவளுக்குத் தெரியவந்தது.

காட்டிக்கொடுத்தவனை தீர்ப்பு எழுதியவன் காலமெல்லாம் கூடவே சுற்றியலைந்தும் கடைசி நேரத்தில் காணாமல் போனவர்கள் எவரையுமே அவள் நிந்திக்கவில்லை. எல்லாவற்றையும் தன் ஈர நெஞ்சுக்குள்ளே பூட்டி வைக்கிறாள். எதையும் தாங்கும் இதயத்துடன் சிலுவை பாரத்தை இதயத்தில் சுமந்தபடி கூட்டத்தோடு பின் தொடருகிறாள். தொலைவில் நின்றபடியே மகனின் உயிர்ப் பலியைக் கண்டு துடிக்கிறாள்.

இந்த அமைதிக்கு இடர்களையும் இன்னல்களையும் மனதில் சுமந்த பொறுமைக்கு விலைமதிப்பில்லாத பரிசு இறுதியில் கிடைக்கிறது.

நீ எனக்கு மட்டும் தாயல்ல, இந்த உலகத்துக்கே இனி நீதான் அம்மா என்று இறைவனே உரிமை சாசனம் எழுதுகிறார். எல்லாவற்றையுமே மனதுக்குள் இருத்தி தியானித்த மரியாளைப்பற்றி நாமும் ஆர அமர சிந்தித்தோமானால் அவளது தெய்வீகப் பெருமைகள் ஒவ்வொன்றாய் எமக்குப் புலப்படும்.

மரியன்னையை அறியும் ஞானத்திற்காக நாம் எங்கும் தேடியலைய வேண்டாம். இருக்கிற இடத்திலேயே நேரம் ஒதுக்கி சிந்திப்போம். அதற்காகத்தான் திருச்சபை இந்த மே மாதத்தை ஒதுக்கி தியானிக்கப் பணிக்கிறது.

எனவே, மேன்மைமிகு மே மாதத்தில் மரியின் அடைக்கலத்தை மனமுவந்து தேடுவோம்.

 


 
 
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter