maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                                                ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழா  05-01-2020

ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 60: 1-6

எருசலேமே! எழு! ஒளிவீசு! உன் ஒளி தோன்றியுள்ளது. ஆண்டவரின் மாட்சி உன்மேல் உதித்துள்ளது! இதோ! இருள் பூவுலகை மூடும்; காரிருள் மக்களினங்களைக் கவ்வும்; ஆண்டவரோ உன்மீது எழுந்தருள்வார்; அவரது மாட்சி உன்மீது தோன்றும்!

பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; மன்னர் உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர். உன் கண்களை உயர்த்தி உன்னைச் சுற்றிலும் பார்; அவர்கள் அனைவரும் ஒருங்கே திரண்டு உன்னிடம் வருகின்றனர்; தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்; உன் புதல்வியர் தோளில் தூக்கி வரப்படுவர். அப்பொழுது, நீ அதைக் கண்டு அகமகிழ்வாய்; உன் இதயம் வியந்து விம்மும்; கடலின் திரள் செல்வம் உன்னிடம் கொணரப்படும்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும். ஒட்டகங்களின் பெருந்திரள் உன்னை நிரப்பும்; மிதியான், ஏப்பாகு ஆகியவற்றின் இளம் ஒட்டகங்களும் வந்து சேரும்; சேபா நாட்டினர் யாவரும் பொன், நறுமணப் பொருள் ஏந்திவருவர். அவர்கள் ஆண்டவரின் புகழை எடுத்துரைப்பர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 72: 1-2. 7-8. 10-11. 12-13 (பல்லவி: 11)   Mp3

பல்லவி: ஆண்டவரே, எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்.

1
கடவுளே, அரசருக்கு உமது நீதித்தீர்ப்பை வழங்கும் ஆற்றலை அளியும்; அரச மைந்தரிடம் உமது நீதி விளங்கச் செய்யும்.
2
அவர் உம் மக்களை நீதியோடு ஆள்வாராக! உம்முடையவரான எளியோர்க்கு நீதித்தீர்ப்பு வழங்குவாராக. - பல்லவி

 
7
அவர் காலத்தில் நீதி தழைத்தோங்குவதாக; நிலா உள்ள வரையில் மிகுந்த சமாதானம் நிலவுவதாக.
8
ஒரு கடலிலிருந்து அடுத்த கடல்வரைக்கும் அவர் ஆட்சி செலுத்துவார்; பேராற்றிலிருந்து உலகின் எல்லை வரைக்கும் அவர் அரசாள்வார். - பல்லவி

 
10
தர்சீசு அரசர்களும் தீவுகளின் அரசர்களும் காணிக்கைகளைக் கொண்டு வருவார்கள்; சேபாவிலும் செபாவிலுமுள்ள அரசர்கள் நன்கொடைகளைக் கொண்டு வருவார்கள்.
11
எல்லா அரசர்களும் அவர்முன் தரைமட்டும் தாழ்ந்து வணங்குவார்கள். எல்லா இனத்தவரும் அவருக்கு ஊழியம் செய்வார்கள். - பல்லவி

 
12
தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார்.
13
வறியோர்க்கும் ஏழைகட்கும் அவர் இரக்கம் காட்டுவார்; ஏழைகளின் உயிரைக் காப்பாற்றுவார். - பல்லவி

 

இரண்டாம் வாசகம்

பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளர் என இப்போது வெளியாக்கப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 2-3a, 5-6

சகோதரர் சகோதரிகளே,

உங்கள் நலனுக்காகக் கடவுளின் அருளால் எனக்கு அளிக்கப்பட்ட பொறுப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். அந்த மறைபொருள் எனக்கு இறைவெளிப்பாட்டின் வழியாகவே தெரியப்படுத்தப்பட்டது.

அந்த மறைபொருள் மற்ற தலைமுறைகளில் வாழ்ந்த மக்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், இப்போது தூய ஆவி வழியாகத் தூய திருத்தூதருக்கும் இறைவாக்கினருக்கும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நற்செய்தியின் வழியாக, பிற இனத்தாரும் கிறிஸ்து இயேசுவின் மூலம் உடன் உரிமையாளரும், ஒரே உடலின் உறுப்பினரும், வாக்குறுதியின் உடன் பங்காளிகளும் ஆகியிருக்கிறார்கள் என்பதே அம்மறைபொருள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 2: 2

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரின் விண்மீன் எழக் கண்டோம்; அவரை வணங்க வந்திருக்கிறோம். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

அரசரை வணங்க வந்திருக்கிறோம்.

மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 1-12

ஏரோது அரசன் காலத்தில் யூதேயாவிலுள்ள பெத்லகேமில் இயேசு பிறந்தார். அப்போது கிழக்கிலிருந்து ஞானிகள் எருசலேமுக்கு வந்து, “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்றார்கள்.

இதைக் கேட்டதும் ஏரோது அரசன் கலங்கினான். அவனோடு எருசலேம் முழுவதும் கலங்கிற்று. அவன் எல்லாத் தலைமைக் குருக்களையும், மக்களிடையே இருந்த மறைநூல் அறிஞர்களையும் ஒன்றுகூட்டி, மெசியா எங்கே பிறப்பார் என்று அவர்களிடம் விசாரித்தான். அவர்கள் அவனிடம், “யூதேயாவிலுள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும். ஏனெனில், ‘யூதா நாட்டுப் பெத்லகேமே, யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதே இல்லை; ஏனெனில், என் மக்களாகிய இஸ்ரயேலை ஆயரென ஆள்பவர் ஒருவர் உன்னிலிருந்தே தோன்றுவார்’ என்று இறவாக்கினர் எழுதியுள்ளார்” என்றார்கள்.

பின்பு ஏரோது யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக் கொண்டுபோய் விண்மீன் தோன்றிய காலத்தைப் பற்றி விசாரித்து உறுதி செய்துகொண்டான். மேலும் அவர்களிடம், “நீங்கள் சென்று குழந்தையைக் குறித்துத் திட்டவட்டமாய்க் கேட்டு எனக்கு அறிவியுங்கள். அப்பொழுது நானும் சென்று அக்குழந்தையை வணங்குவேன்” என்று கூறி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பி வைத்தான். அரசன் சொன்னதைக் கேட்டு அவர்கள் புறப்பட்டுப் போனார்கள்.

இதோ! முன்பு எழுந்த விண்மீன் தோன்றி குழந்தை இருந்த இடத்திற்கு மேல் வந்து நிற்கும்வரை அவர்களுக்கு முன்னே சென்று கொண்டிருந்தது. அங்கே நின்ற விண்மீனைக் கண்டதும் அவர்கள் மட்டில்லாப் பெருமகிழ்ச்சி அடைந்தார்கள். வீட்டிற்குள் அவர்கள் போய்க் குழந்தையை அதன் தாய் மரியா வைத்திருப்பதைக் கண்டார்கள்; நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து குழந்தையை வணங்கினார்கள்; தங்கள் பேழைகளைத் திறந்து, பொன்னும் சாம்பிராணியும் வெள்ளைப் போளமும் காணிக்கையாகக் கொடுத்தார்கள். ஏரோதிடம் திரும்பிப் போக வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டதால் வேறு வழியாகத் தங்கள் நாடு திரும்பினார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

ஆண்டவரின் திருக்காட்சி (ஜனவரி 03)


I எசாயா 60: 1-6
II எபேசியர் 3: 2-3a, 5-6
III மத்தேயு 2: 1-12

ஞானிகளின் பரிசு


நிகழ்வு

அது ஒரு கிராமப்புறப் பங்கு. அந்தப் பங்கில் இருந்தது நூறு ஆண்டுகளுக்கும் மேலான மிகவும் பழமையான கோயில். பங்குப் பணியாளர் அக்கோயிலைப் புதுப்பிக்க விரும்பினார். அதற்காக அவர் பங்கில் இருந்த முக்கியமான நபர்களை அழைத்து, கூட்டம் நடத்தினார். கூட்டத்தில் பங்குப் பணியாளர் பங்குக்கோயிலைப் புதுபிக்க வேண்டியதன் அவசியத்தைச் சொல்லிவிட்டு, “யார் யார் எவ்வளவு தருவீர்கள்? என்றார். உடனே அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பெரிய பணக்காரரும், அதேநேரத்தில் வடிகட்டிய கஞ்சருமானவர் எழுந்து, “பங்குக் கோயிலைப் புதுபிப்பதற்காக நான் ஆயிரம் உரூபாய் தருகின்றேன்” என்று சொல்லிவிட்டு அமர்ந்துகொண்டார்.

அவர் இவ்வாறு சொல்லி முடித்ததுதான் தாமதம், கோயில் கூரையிலிருந்து ஒரு சிறிய கல் பெயர்ந்து, அவருடைய முதுகில் விழுந்தது. அதைப் பார்த்துத் திடுக்கிட்டுப் போன அந்தப் பணக்காரக் கஞ்சர் மீண்டுமாக எழுந்து, “பங்குப் கோயிலைப் புதுப்பிப்பதற்காக பத்தாயிரம் உரூபாய் தருகின்றேன் என்று சொல்வதைத்தான் ஆயிரம் உரூபாய் தருகின்றேன் என்று சொல்லிட்டேன்” என்று சொல்லிவிட்டு அமர்ந்தார்.

இதையடுத்து அங்கு சிறிதுநேரம் அமைதி நிலவியது. அப்பொழுது ஒரு குரல், “கடவுளே! இவர்மீது மீண்டுமாகக் கூரையிலிருந்து ஒரு கல் பெயர்ந்து விழச் செய்யும்” என்றது. இக்குரலைக் கேட்ட அந்தப் பணக்காரக் கஞ்சர், எங்கே மீண்டுமாகத் தன் மேல் கல் விழுந்துவிடுமோ என்று அஞ்சி, “கோயிலைப் புதுப்பிக்கும் பணிக்கு ஒரு இலட்ச ரூபாய் தருகின்றன்” என்றார்.

வேடிக்கையாகச் சொல்லப்பட்ட நிகழ்வாக இருந்தாலும், பலருக்கு மடிநிறைய பொருள் இருந்தும், அதை கடவுளுக்கு மனமுவந்து கொடுக்க விருப்பமில்லை என்ற உண்மையை இந்த நிகழ்வு எடுத்துக்கூறுகின்றது. இதற்கு முற்றிலும் மாறாக, இன்று நாம் கொண்டாடுகின்ற ஆண்டவரின் திருக்காட்சிப் பெருவிழாவில் வருகின்ற மூன்று ஞானிகள் தங்களிடம் இருந்ததை மனமுவந்து ஆண்டவருக்குக் காணிக்கையாகத் தருகின்றார்கள். மூன்று ஞானிகளும் நமக்கு என்ன செய்திகளை உணர்த்துகின்றார்கள் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஞானிகள் தந்த விலையுயர்ந்த பரிசுகள்

வானில் விண்மீன் தோன்றுவது என்பது கடவுள் கொடுக்கின்ற மிகப்பெரிய அடையாளம். அது முன்பு ஆபிரகாம், ஈசாக்கு, மோசே ஆகியோர் பிறந்தபொழுது வானில் தோன்றியதாக யூதர்கள் நடுவில் ஒரு நம்பிக்கை இருக்கின்றது. இயேசுவின் பிறப்பையொட்டி வானில் விண்மீன் ஒன்று எழுகின்றது. அதைப் பார்த்துவிட்டுதான் கீழ்த்திசை ஞானிகள் இயேசுவைப் பார்க்க வருகின்றார்கள். “வானில் விண்மீன் எழக்கண்டோம்” என்று ஞானிகள் சொல்வது, “யாக்கோபிலிருந்து விண்மீன் ஒன்று உதிக்கும்” (எண் 24: 17) என்று பிலயாம் உரைத்த இறுதி உரையை நமக்கு நினைத்துபடுத்துவதாக இருக்கின்றது.

விண்மீன் வழிகாட்டியதன்படி இயேசுவைக் காண வரும் ஞானிகள், தங்களிடம் இருந்த பொன்னையும் சாம்பிராணியையும் வெள்ளைப்போளத்தையும் காணிக்கையாகத் தருகின்றார்கள். ஞானிகள் இயேசுவுக்குத் தருகின்ற பொன் அவர் அரசர் என்பதையும், சாம்பிராணி அவர் கடவுள் என்பதையும் (விப 30: 37), வெள்ளைப்போளம் அவருடைய மனிதத்தன்மையையும் (விப 30: 23) நமக்கு நினைவுபடுத்துபவையாக இருக்கின்றன. ஞானிகள் இயேசுவை அரசராகவும் கடவுளாகவும் மனிதராகவும் பார்த்து, தங்களிடம் இருந்தவற்றைக் மனமுவந்து காணிக்கையாகத் தந்ததுபோல், நாம் நம்மிடம் இருப்பவற்றை முகமலர்ச்சியோடு தரவேண்டும் (2 கொரி 9: 7).

இயேசு எல்லாருக்குமானவர்

கீழ்த்திசையிலிருந்து வந்த ஞானிகள் குழந்தை இயேசுவைக் கண்டது – தரிசித்தது – இயேசு எல்லாருக்குமானவர் என்ற உண்மையை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. யூதர்கள், மெசியா எல்லா நாடுகளின்மீது போர்தொடுத்து வெற்றிகொண்டு, எருசலேமைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செலுத்துவார் என்று நினைத்தார்கள். இவ்வாறு அவர்கள் மெசியா தங்களுக்கு மட்டுமே சொந்தமானவர் என்று நினைத்தார்கள்; ஆனால் கீழ்த்திசையிலிருந்து இயேசுவைக் காண வந்த ஞானிகள், தங்களிடமுள்ள பரிசுகளைத் அவருக்குத் தருவதன் மூலம், அவர் எல்லாருக்குமானவர் ஆகின்றார். இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகமும் நமக்கு இதே கருத்தினைத்தான் எடுத்துரைக்கின்றது.

பாபிலோனியர்களால் நாடு கடத்தப்பட்ட யூதா நாட்டினர் அன்னிய மண்ணில் அடிமைகளாகவும், கடவுள் தங்களைக் கைநெகிழ்ந்துவிட்டார் என்ற எண்ணத்தோடும் வாழ்ந்து வந்தார்கள். இத்தகைய சூழ்நிலையில்புதிய எருசலேமைக் குறித்து பேசுகின்ற இறைவாக்கினர் எசாயா, “பிற இனத்தார் உன் ஒளி நோக்கி வருவர்; பிற இனத்தாரின் சொத்துகள் உன்னை வந்தடையும்” என்கின்றார். இதுமூலம் மெசியாவாம் இயேசு எல்லாருக்குமானவர் என்ற உண்மை நிலை நாட்டைப்படுகின்றது. மெசியா எல்லாருக்குமானவர் எனில், நாம் அனைவரும் உடன் உரிமையாளராகவும், ஒரே உடலின் உறுப்பினராகவும் வாக்குறுதியின் பக்காளிகளாகவும் ஆகின்றோம். இதை இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் மிகத் தெளிவாக எடுத்துக் கூறுகின்றார்.

நாம் அனைவரும் கிறிஸ்து என்ற ஒரே உடலின் உறுப்புகள் என்றால், நம்மிடம் உயர்ந்தவன், தாழ்ந்தவன், பணக்காரன், ஏழை என்ற பாகுபாடு இருக்கக்கூடாது.

கடவுளை நாம் எத்தகைய மனநிலையோடு தேடுகின்றோம்?

கீழ்த்திசை ஞானிகள் இயேசுவைத் தேடி வந்ததை ஒட்டி, மூன்றுவிதமான மனிதர்கள் நற்செய்தியில் இடம்பெறுவதைக் குறித்து வாசிக்கின்றோம். முதல்வகையான மனிதர்கள் பதவிக்காக எதையும் செய்யத் துணியும் ஏரோது போன்றவர்கள். இந்த ஏரோது, “யூதர்களின் அரசராகப் பிறந்திருக்கின்றவர் எங்கே?” என்று ஞானிகள் கேட்டதும், எங்கே தன்னுடைய பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று கலங்குகின்றான். இந்த எரோதைப் போன்று பதவிக்காக எதையும் செய்யத் துணியும் மனிதர்களை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கலாம்.

இரண்டாவது வகையினர் இயேசுவை, கடவுளைப் பெரிதுபடுத்தாத மறைநூல் அறிஞர்களைப் போன்றவர்கள். இந்த மறைநூல் அறிஞர்களுக்கு இயேசு எங்கே பிறப்பார் என்று நன்றாகவே தெரிந்திருந்தது. இருந்தாலும், அவர்கள் எருசலேமிற்கு மிக அருகில் இருக்கும் பெத்லகேமில் பிறந்த இயேசுவைக் காண விருப்பமில்லாமல் இருக்கின்றார்கள். இன்றைக்கும் கூட, பலர் பெயரளவுக்குக் கிறிஸ்தவர்களாக இருந்துகொண்டு, கடவுளிடம் விருப்பமில்லாமல் இருப்பதைப் பார்க்காலம். மூன்றாவது வகையினர் இயேசுவை முழுமனத்தோடு தேடிய ஞானிகளைப் போன்றவர்கள். இவர்கள் இயேசுவைக் காண்பதற்காகப் பல்வேறு இன்னல் இக்கட்டுகளைச் சந்தித்திருக்கவேண்டும். அவற்றையெல்லாம் கடந்து இவர்கள் இயேசுவைக் காணும் பேறுபெறுகின்றார்கள். நாம் ஒவ்வொருவரும் ஏரோது போன்றோ, மறைநூல் அறிஞர்களைப் போன்றோ அல்லாமல், ஞானிகளைப் போன்று முழு மனத்தோடு ஆண்டவரைத் தேடி, அவர் தருகின்ற ஆசிகளைப் பெற்று மகிழ்வோம்.

சிந்தனை

‘கடவுளுக்கு உகந்த, தூய, உயிருள்ள பலியாக உங்களைப் படையுங்கள். இதுவே நீங்கள் செய்யும் உள்ளார்ந்த வழிபாடு’ (உரோ 12: 1) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் ஞானிகளைப் போன்று கடவுளுக்கு நம்மையே காணிக்கையாகத் தந்து, அவர்களைப் போன்று முழு ஆண்டவரைத் மனத்தோடு தேடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 


 
Free Blog Widget
Stats Counter
hit counter