maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                                                பொதுக்காலம் 6ஆம் வாரம் - ஞாயிறு



முதல் வாசகம்

தொழுநோயாளி பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.

லேவியர் நூலிலிருந்து வாசகம் 13: 1-2, 44-46

அந்நாள்களில்

ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் உரைத்தது: “ஒருவர் உடலில் தோல்மீது தொழுநோய் போன்று, ஏதேனும் தடிப்போ, சொறி சிரங்கோ, வெண்படலமோ தோன்ற, அது தொழுநோயென ஐயமுற்றால், அவர் குருவாகிய ஆரோனிடம் அல்லது குருக்களாகிய அவர் புதல்வரில் ஒருவரிடம் கொண்டுவரப்பட வேண்டும்.

அவர் தொழுநோயாளி. அவர் தீட்டுள்ளவர். அவர் தீட்டுள்ளவர், எனக் குரு அறிவிப்பார். ஏனெனில் நோய் அவர் தலையில் உள்ளது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் கிழிந்த உடை அணிந்து, தலை வாராமல் மேலுதட்டை மறைத்துக்கொண்டு, ‘தீட்டு, தீட்டு', என குரலெழுப்ப வேண்டும். நோயுள்ள நாளெல்லாம் அவர் தீட்டுள்ளவர். எனவே தீட்டுள்ள அவர் பாளையத்துக்கு வெளியே தனியாகக் குடியிருப்பார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
 


பதிலுரைப் பாடல்
திபா 32: 1-2. 5. 11 (பல்லவி: 7a) Mp3

பல்லவி: ஆண்டவரே, நீரே எனக்குப் புகலிடம்.
1
எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறுபெற்றவர்.
2
ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். - பல்லவி

5
‘என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்’ என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். - பல்லவி

11
நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள். - பல்லவி

இரண்டாம் வாசகம்

நான் கிறிஸ்துவைப்போல் நடக்கின்றேன்; நீங்கள் என்னைப்போல் நடங்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 10: 31- 11: 1

சகோதரர் சகோதரிகளே,

நீங்கள் உண்டாலும் குடித்தாலும் எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் கடவுளுடைய மாட்சிக்காகவே செய்யுங்கள். யூதருக்கோ கிரேக்கருக்கோ கடவுளின் திருச்சபைக்கோ இடையூறாய் இராதீர்கள். நானும் அனைத்திலும், அனைவருக்கும் உகந்தவனாய் இருக்கிறேன். நான் எனக்குப் பயன் தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன்.

நான் கிறிஸ்துவைப்போல் நடப்பதுபோன்று நீங்களும் என்னைப்போல் நடங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 40-45

ஒரு நாள் தொழுநோயாளர் ஒருவர் இயேசுவிடம் வந்து, “நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும்” என்று முழந்தாள்படியிட்டு வேண்டினார். இயேசு அவர்மீது பரிவுகொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், “நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக!” என்றார். உடனே தொழுநோய் அவரை விட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.

பிறகு அவரிடம், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம், கவனமாய் இரும். ஆனால் நீர் போய் உம்மைக் குருவிடம் காட்டி, நோய் நீங்கியதற்காக மோசே கட்டளையிட்டுள்ள காணிக்கையைச் செலுத்தும். நீர் நலமடைந்துள்ளீர் என்பதற்கு அது சான்றாகும்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறி உடனடியாக அவரை அனுப்பி விட்டார்.

ஆனால் அவர் புறப்பட்டுச் சென்று இந்தச் செய்தியை எங்கும் அறிவித்துப் பரப்பிவந்தார். அதனால் இயேசு எந்த நகருக்குள்ளும் வெளிப்படையாய்ச் செல்ல முடியவில்லை; வெளியே தனிமையான இடங்களில் தங்கி வந்தார். எனினும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் அவரிடம் வந்து கொண்டிருந்தார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

I லேவியர் 13: 1-2, 44-46
II 1 கொரிந்தியர் 10: 31-11:1
III மாற்கு 1: 40-45

“பிறருக்குப் பயன்தருவதை நாடுவோம்”


நிகழ்வு

திருவண்ணாமலையைச் சார்ந்தவர் மணிமாறன். மக்கள் இவரை இவரது பெயரைச் சொல்லி அழைப்பதைவிடவும், ‘தொழுநோயாளரின் தோழன்’ என்றே அழைப்பர். மக்கள் ஏன் இவரை இவ்வாறு அழைக்கின்றார்கள் என்பதற்கு இவரது வாழ்வே பெரிய சான்றாக இருக்கின்றது.

துணி வியாபாரம் செய்து வருகின்ற இவர், ஒருமுறை இந்தியா அளவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.. அப்பொழுது இவர் கொல்கொத்தா நகர்ப் புனித தெரசாவைச் சந்திக்க நேர்ந்தது. அவர் தொழுநோயாளர்களைக் கவனித்துக்கொண்ட விதத்தைப் பார்த்து வியந்துபோன இவர், அவரைத் தன்னுடைய முன்மாதிரியாகக் கொண்டு, தொழுநோயாளர் நடுவில் பணிசெய்யத் தொடங்கினார். முதலில் தன் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு வெளியே, குப்பைமேட்டில் தூக்கி வீசப்பட்ட தொழுநோயாளர்களை அள்ளியெடுத்து, அவர்களுக்கு முதலுதவி செய்தார்; தொழுநோய் முற்றியிருந்தவர்களைச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சிகிச்சை அளித்தார்; தொழுநோயிலிருந்து நலம் பெற்றவர்களை அவர்களது குடும்பத்தில் சேர்த்தார். மேலும் குடும்பத்தால் கைவிடப்பட்ட தொழுநோயாளர்களைத் தன் சொந்தச் செலவில் நல்லடக்கம் செய்தார்.

இதைவிடவும், இன்று இவர் ‘உலக மக்கள் சேவை மையம்’ என்றோர் அமைப்பைத் தொடங்கி, ஒவ்வோர் ஊரிலும் தன்னைப்போன்ற தொண்டுள்ளம் கொண்டவர்களை ஒருங்கிணைத்து, அவர்களைத் தொழுநோயாளர்கள் நடுவில் சேவைசெய்யத் தூண்டி எழுப்பிக் கொண்டிருக்கின்றார். இவரது இந்தப் பதினேழு ஆண்டுகாலச் சேவை தமிழகம் கடந்து, கேரளா, ஆந்திரா போன்ற பல இடங்களில் பரவியிருக்கின்றது. இதனால் மத்திய, மாநில அரசுகள் இவருக்குப் பல விருதுகளை அளித்திருகின்றன. 2019 ஆம் ஆண்டு குடியரசு நாள் விழாவில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் இவருக்கு ‘சிறந்த சமூக சேவகர்’ என்ற விருந்தினை வழங்கிச் சிறப்பித்தார் என்பதும் குறிப்பிடததக்கது.

தொழுநோயாளர்களின் தோழரான மணிமாறன் தனக்குப் பலன்தருவதை நாடாமல், தொழுநோயார்களுக்கு, பிறருக்குப் பலன் தருவதை நாடினார். பொதுக்காலத்தின் ஆறாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும், நமக்குப் பலன் தருவதை அல்ல, பிறருக்குப் பலன் தருவதை நாடவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

யூதச் சமூகத்தில் தொழுநோயாளரின் நிலை:

கொரோனோ பெருந்தொற்றுக் காலத்தில் மக்கள் மிகுதியாகப் பயன்படுத்தப்படும் சொல், ‘சமூக இடைவெளி’. நோய்த்தொற்று உள்ள ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு நோய் பரவிவிடக்கூடாது என்பதற்காக இச்சொல் மிகுதியாக வலியுறுத்திச் சொல்லப்படுகின்றது; ஆனால், யூதர்கள் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களை யூதர்கள் பாளையத்திற்கு அல்லது ஊருக்கு வெளியே வைத்தார்கள். இவ்வாறு ஊருக்கு வெளியே வைக்கப்பட்ட தொழுநோயாளர்கள், தங்களை யாரும் நெருங்கி வரக்கூடாது என்பதற்காகவும், அப்படி யாராவது தங்களை நெருங்கி வந்துவிட்டால், அவர்களும் தீட்டானவர்களாகக்கூடும் என்பதற்காகவும் தீட்டு தீட்டு என்று கத்தவேண்டும். இதனால் தொழுநோயாளர்கள் உடலளவில் மட்டுமல்லாது மனதளவிலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டார்கள். இது குறித்து இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிக்கின்றோம்.

இப்படித் தீட்டு என்று சொல்லப்பட்டு, ஊருக்கு வெளியே வைக்கப்பட்டு, உடலளவிலும் மனத்தளவிலும் பாதிக்கப்பட்ட தொழுநோயாளர் ஒருவர் நம்பிக்கையோடும் துணிவோடும், அதே நேரத்தில் மிகுந்த தாழ்ச்சியோடும் இயேசுவிடம் வருவதைக் குறித்துத்தான் இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கின்றோம்.

பிறருக்கு பயன் தருவதை நாடிய இயேசு

“நான் எனக்குப் பயன் தருவதை நாடாமல், பலரும் மீட்படையும்படி அவர்களுக்குப் பயன் தருவதையே நாடுகிறேன்” இது இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் சொல்லக்கூடிய வார்த்தைகள். இவ்வார்த்தைகள் இயேசுவோடு அப்படியே பொருந்திப் போகிறன. தூய ஆவியாரால் நிரப்பப்பட்டு எங்கும் நன்மை செய்துகொண்டே சென்ற இயேசு (திப 10: 38), இன்றைய நற்செய்தியில் தொழுநோயாளர் ஒருவரைத் தொட்டு நலப்படுத்துகின்றார்.

தொழுநோய் என்ற சொல்லைச் சொல்வதற்கு அஞ்சிக் கொண்டிருந்த... தொழுநோயாளரைத் தீட்டு என்று நினைத்துக்கொண்டிருந்த மக்களுக்கு நடுவில் இயேசு பரிவோடு தொழுநோயாளரைத் தொட்டு நலப்படுத்துகின்றார். இதன்மூலம் இயேசு நோயாளர்கள் என்பவர்கள் நமது பரிதாபத்திற்கோ, அச்சத்திற்கோ உரியவர்கள் அல்ல, அவர்கள் நமது பரிவுக்கு உரியவர்கள் என்ற உண்மையை உரக்கச் சொல்கின்றார். இந்த உலகத்தில் யாரும் ‘எனக்கு இந்த நோய் வரவேண்டும்’ என்று விரும்பி ஏற்றுக்கொள்வதில்லை. ஒருசில நோய்கள் அதுவாகவே வருகின்றன (குறிப்பிட்ட நோய்கள் வேண்டுமானால் மனிதர்கள் தாங்களாவே வருவித்துக் கொள்ளக்கூடியவையாக இருக்கலாம்; ஆனால், தொழுநோய் போன்ற பல நோய்கள் மனிதர்களுக்கு அதுவாகவே வருகின்றன. எனவே, நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவர்மீதும் இயேசுவைப் போன்று பரிவுகொண்டு வாழவேண்டும். அதுதான் நாம் அவர்களுக்குச் செய்யக்கூடிய சிறப்பான செயலாக இருக்கும்.

யாருக்கும் சொல்லவேண்டாம் என்ற இயேசு

தன் பணிவாழ்வு முழுவதும் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றிப் பிறருக்குப் பலன்தருவதையே நாடிய இயேசு, தான் செய்த வல்ல செயல்கள் எல்லாருக்கும் தெரியவேண்டும் என்று விளம்பரப்படுத்தவில்லை; மாறாக, அவற்றை யாரிடமும் சொல்லவேண்டாம் என்றே மக்களிடம் சொல்லி வந்தார்.

இன்றைய நற்செய்தியில் இயேசு தொழுநோயாளரை நலப்படுத்திய பின், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்” என்றே சொல்கின்றார். இயேசு தொழுநோயாளரிடம் இவ்வாறு சொல்வதற்கு முதன்மையான காரணம், மக்கள் மெசியாவைப் பற்றி வைத்திருந்த தவறான புரிதல்தான். மெசியா என்பவர் எல்லா நாடுகளின்மீதும் போர்தொடுத்து, இஸ்ரயேலுக்கு ஆட்சி அதிகாரத்தை வழங்குவார் என்று யூதர்கள் நினைத்திருந்தார்கள்; ஆனால் இயேசு யூதர்களுக்கு ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுத்தருபவராக அல்ல, துன்புறும் ஊழியனாகத் தன்னைக் காட்ட விழைக்கின்றார். அதனால்தான் அவர், ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்குப் பகிர்ந்தளித்த பின்பு, மக்கள் தன்னைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்கப்போகிறார்கள் என்பதை உணர்ந்து, தனியாய் மலைக்குச் செல்கின்றார் (யோவா 6: 15).

ஒருவேளை யூதர்கள் நினைத்தது போன்று இயேசு அரசியல் மெசியாவாகி இருந்தால், சிலுவையினால் வரும் மீட்பை யாரும் அடைந்திருக்க முடியாது. எல்லாரும் மீட்படைவதற்காகவே இயேசு தொழுநோயாளரிடம், “இதை யாருக்கும் சொல்ல வேண்டாம்” என்று கூறுகின்றார்; துன்புறும் ஊழியனாகிப் பலருக்கும் பயன் தருவதை நாடுகின்றார். எனவே, நாம் ஒவ்வொருவரும் புனித பவுலைப் போன்று, நம் ஆண்டவர் இயேசுவைப் போன்று பலருக்கும் பயன் தருவதை நாடுவோம்.

சிந்தனை

‘பிறருக்காக வாழ்வது மலையைவிடப் பளுவானது. அந்தப் பளுவைச் சுமக்கத் தயாரானவரே சவாலான வாழ்க்கையை வாழ்கிறார்’ என்பார் மாவோ. ஆகவே, பிறருக்காக வாழ்வது மலையை விடப் பளுவானதாக இருந்தாலும், பிறருக்குப் பயன்தருவதை நாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 


 
Free Blog Widget
Stats Counter
hit counter