maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                                    பொதுக்காலம் 28ஆம் வாரம் - ஞாயிறு


முதல் வாசகம்
 

ஞானத்தோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்.

சாலமோனின் ஞான நூலிலிருந்து வாசகம் 7: 7-11

நான் மன்றாடினேன்; ஞானம் எனக்குக் கொடுக்கப்பட்டது. நான் இறைவனை வேண்டினேன்; ஞானத்தின் ஆவி என்மீது பொழியப்பட்டது. செங்கோலுக்கும் அரியணைக்கும் மேலாக அதை விரும்பித் தேர்ந்தேன்; அதனோடு ஒப்பிடும்போது, செல்வம் ஒன்றுமே இல்லை என்று உணர்ந்தேன். விலையுயர்ந்த மாணிக்கக் கல்லும் அதற்கு ஈடில்லை; அதனோடு ஒப்பிடும்போது, பொன்னெல்லாம் சிறிதளவு மணலுக்கே நிகர்; அதற்கு முன் வெள்ளியும் களிமண்ணாகவே கருதப்படும்.

உடல் நலத்திற்கும் அழகிற்கும் மேலாக அதன்மீது அன்பு கொண்டேன்; ஒளிக்கு மாற்றாக அதைத் தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் அதன் சுடரொளி என்றும் மங்காது.

ஞானத்தோடு எல்லா நலன்களும் என்னிடம் வந்து சேர்ந்தன. அளவற்ற செல்வத்தை அது ஏந்தி வந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 90: 12-13. 14-15. 16-17 (பல்லவி: 14a) Mp3

பல்லவி: ஆண்டவரே, உம் பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்.

12
எங்கள் வாழ்நாள்களைக் கணிக்க எங்களுக்குக் கற்பியும்; அப்பொழுது ஞானமிகு உள்ளத்தைப் பெற்றிடுவோம்.
13
ஆண்டவரே, திரும்பி வாரும்; எத்துணைக் காலம் இந்நிலை? உம் ஊழியருக்கு இரக்கம் காட்டும். - பல்லவி

 
14
காலைதோறும் உமது பேரன்பால் எங்களுக்கு நிறைவளியும்; அப்பொழுது வாழ்நாளெல்லாம் நாங்கள் களிகூர்ந்து மகிழ்வோம்.
15
எங்களை நீர் ஒடுக்கிய நாள்களுக்கும் நாங்கள் தீங்குற்ற ஆண்டுகளுக்கும் ஈடாக, எம்மை மகிழச்செய்யும். - பல்லவி

 
16
உம் அடியார்மீது உம் செயலும் அவர்தம் மைந்தர்மீது உமது மாட்சியும் விளங்கச் செய்யும்.
17
எம் கடவுளாம் தலைவரின் இன்னருள் எம்மீது தங்குவதாக! நாங்கள் செய்பவற்றில் எங்களுக்கு வெற்றி தாரும்! ஆம், நாங்கள் செய்பவற்றில் வெற்றியருளும்! - பல்லவி

 

இரண்டாம் வாசகம்

கடவுளுடைய வார்த்தை உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 4: 12-13

சகோதரர் சகோதரிகளே,

கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது, ஆற்றல் வாய்ந்தது; இரு பக்கமும் வெட்டக்கூடிய எந்த வாளினும் கூர்மையானது; ஆன்மாவையும் ஆவியையும் பிரிக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவுகிறது; எலும்பு மூட்டையும் மச்சையையும் அவ்வாறே ஊடுருவுகிறது; உள்ளத்தின் சிந்தனைகளையும் நோக்கங்களையும் சீர்தூக்கிப் பார்க்கிறது. படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்குக் கொடுக்க வேண்டும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 5: 3

அல்லேலூயா, அல்லேலூயா! ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-30

அக்காலத்தில்

இயேசு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, “நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரைக் கேட்டார்.

அதற்கு இயேசு அவரிடம், “நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவரும் இல்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? ‘கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச் சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட” என்றார். அவர் இயேசுவிடம், “போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்” என்று கூறினார்.

அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, “உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்று அவரிடம் கூறினார். இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.

இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், “செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்” என்றார். சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, “பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார்.

சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “பின் யார்தாம் மீட்புப் பெற முடியும்?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்” என்றார்.

அப்போது பேதுரு அவரிடம், “பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே” என்று சொன்னார்.

அதற்கு இயேசு, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 17-27

அக்காலத்தில்

இயேசு புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தபோது வழியில் ஒருவர் அவரிடம் ஓடிவந்து முழந்தாள்படியிட்டு, “நல்ல போதகரே, நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அவரைக் கேட்டார்.

அதற்கு இயேசு அவரிடம், “நான் நல்லவன் என ஏன் சொல்கிறீர்? கடவுள் ஒருவரைத் தவிர நல்லவர் எவரும் இல்லையே. உமக்குக் கட்டளைகள் தெரியும் அல்லவா? ‘கொலை செய்யாதே; விபசாரம் செய்யாதே; களவு செய்யாதே; பொய்ச்சான்று சொல்லாதே; வஞ்சித்துப் பறிக்காதே; உன் தாய் தந்தையை மதித்து நட” என்றார். அவர் இயேசுவிடம், “போதகரே, இவை அனைத்தையும் நான் என் இளமையிலிருந்தே கடைப்பிடித்து வந்துள்ளேன்” என்று கூறினார்.

அப்போது இயேசு அன்பொழுக அவரைக் கூர்ந்து நோக்கி, “உமக்கு இன்னும் ஒன்று குறைபடுகிறது. நீர் போய் உமக்கு உள்ளவற்றை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர். பின்பு வந்து என்னைப் பின்பற்றும்” என்று அவரிடம் கூறினார். இயேசு சொன்னதைக் கேட்டதும் அவர் முகம்வாடி வருத்தத்தோடு சென்றுவிட்டார். ஏனெனில் அவருக்கு ஏராளமான சொத்து இருந்தது.

இயேசு சுற்றிலும் திரும்பிப் பார்த்துத் தம் சீடரிடம், “செல்வர் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம்” என்றார். சீடர்கள் அவர் சொன்னதைக் கேட்டுத் திகைப்புக்கு உள்ளானார்கள். மீண்டும் இயேசு அவர்களைப் பார்த்து, “பிள்ளைகளே, செல்வர்கள் இறையாட்சிக்கு உட்படுவது மிகவும் கடினம். அவர்கள் இறையாட்சிக்கு உட்படுவதைவிட ஊசியின் காதில் ஒட்டகம் நுழைவது எளிது” என்றார்.

சீடர்கள் மிகவும் வியப்பில் ஆழ்ந்தவர்களாய், “பின் யார்தாம் மீட்புப் பெற முடியும்?” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள். இயேசு அவர்களைக் கூர்ந்து நோக்கி, “மனிதரால் இது இயலாது. ஆனால் கடவுளுக்கு அப்படியல்ல, கடவுளால் எல்லாம் இயலும்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 



 

I சாலமோனின் ஞானம் 7: 7-11
II எபிரேயர் 4: 12-13
III மாற்கு 10: 17-30

யாரால் நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள முடியும்?


நிகழ்வு

கண்ணுக்கு எட்டிய தூரம்வரை பசுமையாக புல்வெளி, சலசலத்து ஓடுகின்ற ஆறு, ஓங்கி உயிர்ந்த மரங்கள், அதற்கு பின்னால் இருந்த உயரமான மரங்கள், அதற்கும் பின்னால் இருந்த நீலநிற வானம். இத்தகையதொரு இரம்மியமான சூழ்நிலையில் தன் மனைவி மற்றும் மக்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார் ஓர் இறைமனிதர். இறைமனிதர் என்றால் பெயருக்கு அல்ல, உண்மையாக அவர் இறைமனிதராக வாழ்ந்து வந்தார்.

நன்றாக இருந்த அவர் திடீரென நோய்வாய்பட்டார். அவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர், அவருக்குப் புற்றுநோய் இருக்கின்றது என்றும், அதனால் அவர் ஓரிரு மாதங்கள்தான் உயிர்வாழ்வார் என்றும் சொல்லிவிட்டுச் சென்றார். மருத்துவர் இவ்வாறு சொன்னது இறைமனிதருக்கு அதிர்ச்சியாகவே இருந்தது. ஆனாலும் அவர் அதை நினைத்துக் வருத்தப்படவில்லை.

இது நடந்து ஒருசில நாள்கள் கழித்து, இறைமனிதர் தம் வீட்டைவிட்டு வெளியே வந்தார். அவர் கண்முன்னே பசுமையான புல்வெளியும், சலசலவென ஓடும் ஆறும், ஓங்கி உயர்ந்த மரங்களும், அதற்குப் பின்னால் நீலநிற வானமும் அவரோடு ஏதோ பேசுவதைப் போன்று உணர்ந்தார்.. அப்பொழுது அவர் அவற்றைப் பார்த்து, “இன்னும் ஒருசில நாள்களுக்குப் பிறகு உங்களோடு நான் இல்லாமல் போகலாம். ஆனாலும், நான் நீங்களெல்லாம் முற்றிலுமாக மறைந்துபோனாலும் நான் என்றென்றும் இருப்பேன். ஏனெனில், நான் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டிருப்பதால் அவர் எனக்கு நிலைவாழ்வை அளிப்பார். அதனால் நான் என்றென்றும் உயிர்வாழ்வேன்” என்றார்.

ஆம், ஆண்டவர்மீது நம்பிக்கைகொள்ளும் ஒருவர் நிலைவாழ்வைப் பெறுவார் என்று இந்த நிகழ்வும், பொதுக்காலத்தின் இருபத்து எட்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு நமக்கு உணர்த்துகின்றன. அது குறித்து நாம் சிந்திப்போம்.

செல்வம் படைத்தவரால் நிலைவாழ்வைப் பெற முடியாது

இன்று ஒருசிலர், கையில் பணம் இருந்தால் எதையும் விலைகொடுத்து வாங்கிவிடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கின்றார். கையில் பணமிருந்தாலும் விலை கொடுத்து வாங்கமுடியாதவை எத்தனையோ இருக்கின்றன. அவற்றில் முதன்மையானது நிலைவாழ்வு. இன்றைய நற்செய்தியில் இயேசுவிடம் வருகின்ற செல்வரும் (மத் 19: 29), தலைவருமான (லூக் 18: 18) இளைஞர், தன்னிடம் பணம் இருந்ததால், தன்னால் நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள முடியும் என்ற எண்ணத்தோடு அவரிடம், “நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்கிறார். அப்பொழுது இயேசு அவரிடம், “உமக்கு உள்ளதை விற்று ஏழைகளுக்குக் கொடும். அப்போது விண்ணகத்தில் நீர் செல்வராய் இருப்பீர்” என்றதும், அவர் முகம் வாடி வருத்தத்தோடு செல்கின்றார்.

செல்வம் வைத்திருந்தால் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு இருந்த அந்த இளைஞனிடம், செல்வம் வைத்திருப்பதால் அல்ல, அதை ஏழைகளுக்குக் கொடுப்பதால் நிலைவாழ்வு உரிமையாக்கிக் கொள்ளலாம் என்று இயேசு சொன்னதும், அவர் வருத்தத்தோடு செல்கின்றார். இந்த இளைஞரிடம் இரண்டு குறைகள் இருந்தன. ஒன்று, தன்மீது அன்புகூர்ந்ததுபோல் தனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூராதது (லேவி 19: 18). ஒருவேளை அவர் தன்மீது அன்பு கூர்ந்ததுபோல், தனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்ந்திருந்தால், தன்னிடம் இருந்ததை ஏழைகளுக்குக் கொடுத்திருப்பார். அவர் தன்னிடம் இருந்ததை அடுத்திருப்பவருக்குக் கொடுக்காததன்மூலம், அடுத்திருப்பவர்மீது அன்புகூரவேண்டும் என்ற ஆண்டவரின் கட்டளையை மீறுகின்றார். இளைஞரிடம் இருந்த இரண்டாவது குறை அவர், கடவுள், செல்வம் என்ற இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முயன்றது (மத் 6: 24). ஒரு காலமும் கடவுளுக்கும் செல்வத்திற்கும் பணிவிடை செய்ய முடியாது என்பதால், செல்வத்தின்மீது மிகுந்த பற்றுக்கொண்டிருந்த அந்த இளைஞரால் கடவுளுக்குப் பணிவிடை செய்ய முடியவில்லை; நிலைவாழ்வையும் பெற முடியவில்லை.

நற்செய்தியில் வரும் இந்த இளைஞரைப் போன்றுதான் பலர் பணத்தின்மீது மிகுதியான பற்று வைத்துக்கொண்டு கடவுளுக்குப் பணிவிடை செய்யவும், நிலைவாழ்வையும் பெற முயன்று பார்க்கின்றார்கள். சாலமோனின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிப்பதுபோல, கடவுளின் ஞானம் செல்வத்தைவிட, மாணிக்கக் கல்லைவிட, பொன்னைவிட மேலானது. எனவே, கடவுளை, அவரது ஞானத்தைத் தேடாமல், பணத்திற்கு மட்டும் பணிவிடை செய்யும் ஒருவரால் நிலைவாழ்வை ஒருநாளும் பெற முடியாது.

ஏழைக்குக் கொடுப்பவராலும் நிலைவாழ்வைப் பெற முடியாது

“ஏழைகளுக்குத் தர்மம் அல்லது அறச்செயல்களைச் செய்வதன்மூலம் ஒருவர் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ளலாம்” என்று யூதர்களின் தால்முத் சொன்னது. இதை யூதர்கள் பெரிதாக நம்பினார்கள்.

இதில் ஒரு சிக்கல் இருக்கின்றது. ஏழைகளுக்கு வாரி வாரிக் கொடுப்பவர், அவ்வாறு கொடுப்பதைத் தவறான வழியில் சம்பாதித்தால், அவரால் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள முடியுமா...? முடியாதுதானே! ஒருவேளை ஏழைகளுக்கு வாரி வாரிக் கொடுப்பவரால் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ளமுடியும் என்றொரு நிலை இருந்தது எனில், ஒருவர் எப்படியும் வாழலாம், ஏழைகளுக்கு ஏழைகளுக்கு வாரி வாரி வழங்கினால் போதும் அவர் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்வார் என்று ஆகிவிடும். அது தவறான மனிதர்களைத் தவறான வழிக்கு இட்டுச் செல்லும். ஆகவே, ஒருவர் ஏழைகளுக்கு வாரி வாரிக் கொடுப்பதால் மட்டும் நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று உறுதியாகச் சொல்லலாம்.

ஆண்டவரில் நம்பிக்கைகொள்பவரால் மட்டுமே நிலைவாழ்வைப் பெறமுடியும்

மிகுதியான பணம் படைத்தவராலும், ஏழைகளுக்கு வாரி வாரிக் கொடுப்பவராலும் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ளமுடியாது எனில், யாரால்தான் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ளலாம் என்ற கேள்வி எழலாம். இயேசுவின் சீடர்களுக்கும் இத்தகையதொரு கேள்வி எழுந்தது. அதனால் அவர்கள் இயேசுவிடம், “பின் யார்தான் மீட்புப் பெற முடியும்?” என்று கேட்கிறார்கள். அதற்கு இயேசு கூறும் பதில்தான், “மனிதரால் இது இயலாது; கடவுளால் எல்லாம் இயலும்” என்பது.

கடவுளால் எல்லாம் இயலும் என்று இயேசு சொல்வதை கடவுள்மீது நம்பிக்கை வைத்து, அவருக்கு ஏற்புடையவற்றை செய்கின்ற ஒருவருக்குக் கடவுளால் நிலைவாழ்வை அளிக்க இயலும் என்றும் நாம் புரிந்துகொள்ளலாம். எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகம், கடவுளின் வார்த்தை எத்துணை ஆற்றல் வாய்ந்து என்று கூறுகின்றது. ஒருவர் ஆற்றல் வாய்ந்த கடவுளின் வார்த்தையின்படி வாழ்கின்றபோது... சாலமோனின் ஞான நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் நாம் வாசிப்பதுபோன்று, நாம் கடவுளிடம் மன்றாடுவதால் கிடைக்கின்ற இறை ஞானத்தின்படி நடக்கின்றபோது நம்மால் கடவுள் தரும் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள இயலும் என்பது உறுதி.

அப்படியானால், செல்வந்தர்களால், ஏழைகளுக்கு வாரி வாரி வழங்குபவரால் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ளமுடியாதா? என்று மற்றொரு கேள்வி எழலாம். அவர்களாலும் நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்ள முடியும். எப்போது எனில், அவர்கள் கடவுளின் வார்த்தையாலும், அவரது ஞானத்தாலும் உந்தப்பட்டு, கடவுளின்மீது ஆழமான நம்பிக்கைவைத்துத் தங்களிடம் இருப்பதைப் பிறருக்கு வாரி வாரி வழங்கினால் அப்போது!

ஆம், இறைநம்பிக்கையின்றிச் செய்யப்படும் நற்செயல்கள் அடித்தளமில்லாத வீட்டிற்கு ஒப்பாகிவிடும். நற்செயல்கள் இல்லாமல், ஒருவரிடம் இருக்கும் நம்பிக்கை கூரையில்லாத வீட்டிற்கு ஒப்பாகிவிடும். எனவே, நாம் இறைநம்பிக்கையில் விளைந்த நற்செயல்களைச் செய்து, நிலைவாழ்வை உரிமையாக்கிக் கொள்வோம்!

சிந்தனை:

‘மானிட மகன்மீது நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர்’ (யோவா 3: 15) என்பார் இயேசு. எனவே, நாம் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கையை நமது செயலில் வெளிப்படுத்துவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 

 


 
Free Blog Widget
Stats Counter
hit counter