maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                     திருவருகைக்காலம் 2ஆம் ஞாயிறு


முதல் வாசகம்



கடவுள் உன் பேரொளியைக் காட்டுவார்.

இறைவாக்கினர் பாரூக்கு நூலிலிருந்து வாசகம் 5: 1-9


எருசலேமே, உன் துன்ப துயரத்தின் ஆடைகளைக் களைந்துவிடு; கடவுள் உனக்கு அருளும் மாட்சியின் பேரழகை என்றென்றும் ஆடையாக அணிந்துகொள். கடவுளிடமிருந்து வரும் நீதியை ஆடையாய்ப் புனைந்துகொள்; என்றும் உள்ளவரின் மாட்சியை மணிமுடியாக உன் தலைமீது சூடிக்கொள். கடவுள் வானத்தின் கீழ் உள்ள எல்லா நாடுகளுக்கும் உன் பேரொளியைக் காட்டுவார். ‘நீதியில் ஊன்றிய அமைதி’, ‘இறைப்பற்றில் ஒளிரும் மாட்சி’ என்னும் பெயர்களால் கடவுள் உன்னை என்றென்றும் அழைப்பார்.

எருசலேமே, எழுந்திரு; உயர்ந்த இடத்தில் எழுந்து நில். கீழ்த்திசையை நோக்கு; கீழ்த்திசை முதல் மேற்றிசை வரை உள்ள எல்லா நாடுகளிலிருந்தும் உன் மக்கள் தூயவரின் சொல்லால் ஒன்று சேர்க்கப்பட்டு, கடவுள் தங்களை நினைவுகூர்ந்ததற்காக மகிழ்வதைப் பார். பகைவர்கள் கடத்திச் சென்ற உன் மக்கள் உன்னை விட்டுப் பிரிந்து சென்ற பொழுது நடந்து சென்றார்கள்; ஆனால் கடவுள் அவர்களை உன்னிடம் திரும்ப அழைத்துவரும் பொழுது அரியணையில் வீற்றிருக்கும் மன்னர்போல் உயர்மிகு மாட்சியுடன் அழைத்துவரப்படுவார்கள். கடவுளின் மாட்சியில் இஸ்ரயேல் பாதுகாப்புடன் நடந்து வரும்பொருட்டு, உயர்மலைகள் என்றென்றும் உள்ள குன்றுகள் எல்லாம் தாழவும் பள்ளத்தாக்குகள் நிரம்பவும் இவ்வாறு நிலம் முழுதும் சமமாகவும் கடவுள் கட்டளையிட்டுள்ளார். மேலும், காடுகளும் நறுமணம் வீசும் மரங்கள் அனைத்தும் கடவுளின் கட்டளையால் இஸ்ரயேலுக்கு நிழல் கொடுத்தன. கடவுள் தம் மாட்சியின் ஒளியில் மகிழ்ச்சியோடும், தம்மிடமிருந்து வெளிப்படும் இரக்கத்தோடும் நீதியோடும் இஸ்ரயேலை அழைத்து வருவார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்
திபா 126: 1-2ab. 2cd-3. 4-5. 6 (பல்லவி: 3) Mp3

பல்லவி: ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல்கள் புரிந்துள்ளார்.
1
சீயோனின் அடிமை நிலையை ஆண்டவர் மாற்றினபோது, நாம் ஏதோ கனவு கண்டவர்போல இருந்தோம்.
2ab
அப்பொழுது, நமது முகத்தில் மகிழ்ச்சி காணப்பட்டது. நாவில் களிப்பாரவாரம் எழுந்தது. - பல்லவி

2cd
“ஆண்டவர் அவர்களுக்கு மாபெரும் செயல் புரிந்தார்” என்று பிற இனத்தார் தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
3
ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெருமகிழ்ச்சியுறுகின்றோம். - பல்லவி

4
ஆண்டவரே, தென்னாட்டின் வறண்ட ஓடையை நீரோடையாக வான்மழை மாற்றுவதுபோல, எங்கள் அடிமை நிலையை மாற்றியருளும்.
5
கண்ணீரோடு விதைப்பவர்கள், அக்களிப்போடு அறுவடை செய்வார்கள். - பல்லவி

6
விதை எடுத்துச் செல்லும்போது - செல்லும்போது - அழுகையோடு செல்கின்றார்கள்; அரிகளைச் சுமந்து வரும்போது - வரும்போது - அக்களிப்போடு வருவார்கள். - பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்து வாருங்கள்.

திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 1: 4-6, 8-11

சகோதரர் சகோதரிகளே,

உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு மன்றாடி வருகிறேன். ஏனெனில் தொடக்கமுதல் இன்றுவரை நீங்கள் நற்செய்திப் பணியில் என்னோடு பங்கேற்று வருகிறீர்கள். உங்களுள் இத்தகைய நற்செயலைத் தொடங்கியவர், கிறிஸ்து இயேசுவின் நாள் வரை அதை நிறைவுறச் செய்வார் என உறுதியாய் நம்புகிறேன்.

கிறிஸ்து இயேசு கொண்டிருந்த அதே பரிவுள்ளத்தோடு உங்கள்மீது எத்துணை ஏக்கமாயிருக்கிறேன் என்பதற்குக் கடவுளே சாட்சி.

மேலும், நீங்கள் அறிவிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மேன்மேலும் வளர்ந்து, அன்பால் நிறைந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுகிறேன். கடவுளின் மாட்சிக்காகவும் புகழ்ச்சிக்காகவும் இயேசு கிறிஸ்துவின் வழியாய் நீதியின் செயல்களால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்துவர வேண்டுமென்றே இவ்வாறு செய்கிறேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 3: 4, 6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 1-6

திபேரியு சீசர் ஆட்சி செய்துவந்த பதினைந்தாம் ஆண்டில், பொந்தியு பிலாத்து யூதேயாவின் ஆளுநராக இருந்தார். ஏரோது கலிலேயப் பகுதிக்கும் அவன் சகோதரராகிய பிலிப்பு, இத்துரேயா, திரக்கோனித்துப் பகுதிகளுக்கும் லிசானியா அபிலேன் பகுதிக்கும் குறுநில மன்னர்களாக இருந்தனர். அன்னாவும் கயபாவும் தலைமைக் குருக்களாய் இருந்தனர். அக்காலத்தில் செக்கரியாவின் மகன் யோவான் பாலைநிலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் கடவுளின் வாக்கைப் பெற்றார். “பாவமன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்” என்று யோர்தான் ஆற்றை அடுத்துள்ள பகுதிகள் அனைத்துக்கும் சென்று அவர் பறைசாற்றிவந்தார். இதைப்பற்றி இறைவாக்கினர் எசாயாவின் உரைகள் அடங்கிய நூலில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:

“பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; பள்ளத்தாக்குகள் எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானவை நேராக்கப்படும்; கரடுமுரடானவை சமதளமாக்கப்படும். மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.



 


“சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுங்கள்”
திருவருகைக் காலம் இரண்டாம் ஞாயிறு


I பாரூக் 5: 1-9
II பிலிப்பியர் 1: 4-6, 8-11
III லூக்கா 3: 1-6

“சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுங்கள்”

நிகழ்வு

அரசாங்க அதிகாரி ஒருவர் இருந்தார். தீமையின் மொத்த உருவாக இருந்த அவர், குற்றத்திற்கு மேல் குற்றம் செய்து வந்தார். ஒரு கட்டத்தில் அவர் செய்த குற்றமனைத்தும் வெளியுலகிற்குத் தெரிய வந்து, காவல்துறையினர் அவரைக் கைது செய்ய வந்தபோது, அவர் ஒரு அப்பாவியைக் கை காட்டி, “இவர்தான் எல்லாக் குற்றங்களையும் புரிந்தவர்; அதனால் இவரைக் கைது செய்யுங்கள்” என்றார். இதனால் காவல்துறையினர் அந்த அப்பாவியைக் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இதன்பிறகு அரசாங்க அதிகாரியின் வீட்டில் அவரது மனைவி, பிள்ளைகள் என ஒருவர் மாற்றி ஒருவர் திடீர்த் திடீரென இறந்தார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு அரசாங்க அதிகாரிக்கு நன்கு அறிமுகமானவர்கள், “இப்போதாவது நீ உன்னுடைய பாவத்தை விட்டுவிட்டு, திருந்த நட” என்று அறிவுரை கூறினார்கள். இவரோ, “நான் எந்தக் குற்றமும் செய்யவில்லை; நான் எதற்கு மனம்மாறவேண்டும்?” என்று சொல்லித் தொடர்ந்து குற்றங்கள் புரிந்து வந்தார்.

ஒருநாள் இவருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தை எழுதியவர், இவர் பொருட்டு, சிறையில் தண்டனையை அனுபவித்து வந்தவர். அவர் அந்தக் கடிதத்தில், “நீங்கள் எனக்குச் செய்த குற்றத்தை நான் மன்னித்துவிட்டேன்” என்று எழுதி இருந்தார். இக்கடிதம் அரசாங்க அதிகாரியில் உள்ளத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதனால் இவர், “எத்தனையோ மனிதர்கள் நான் மனம்மாற வேண்டும் என்று சொன்னபோது, அவையெல்லாம் என்னிடத்தில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை; ஆனால், என் குற்றங்களுக்காகத் தண்டனை பெறுகின்றவர் என்னை மன்னித்துவிட்டார் என்று சொன்னது, என்னுடைய வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. இனிமேல் நான் பாவம் செய்யாமல், புதியதொரு வாழ்க்கை வாழ்வேன்” என்றார்.

ஆம், பாவங்களுக்கு மேல் பாவங்கள் செய்த இந்த அரசாங்க அதிகாரி, யாருக்கு எதிராகப் பெரிய பாவம் செய்தாரோ, அவரிடமிருந்தே மன்னிப்புப் பெற்றதும் புதியதொரு மனிதராக வாழத் தொடங்கினார். திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, பாவத்தை விட்டுவிட்டுச் சிறந்தவற்றை ஏற்றுச் செயல்பட அழைப்பு விடுக்கின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

சிறந்தவற்றை ஏற்றுச் செயல்படுவதற்குப் பவுல் விடுக்கும் அழைப்பு

ஒருசிலர் இருக்கின்றார்கள். இவர்களுக்கு நல்லது எது, தீயது எது எனத் தெரியாது. காரணம், இவர்களுடைய அறியாமை அல்லது அறிவின்மை. அறிவின்மை அழிவுக்கு இட்டுச் செல்லும். அதனால்தான் ஆண்டவராகிய கடவுள் இறைவாக்கினர ஓசேயா வழியாக, “அறிவின்மையால் என் மக்கள் அழிகின்றார்கள்” (ஓசே 4:6) என்கிறார். இன்னும் ஒருசிலர் இருக்கின்றார்கள். இவர்களுக்கு நல்லது எது, தீயது எனத் தெரியும்; ஆனால், இவர்களால் நல்லவற்றைச் செய்ய முடியாது (உரோ 7:15). காரணம், இவர்களுடைய உடல் பலவீனம்.

இப்படி நல்லது எது, தீயது எது எனத் தெரியாமலும், நல்லது எது எனத் தெரிந்தும், அதைச் செய்ய முடியாமலும் இருக்கும் மனிதர்களைப் பார்த்துத்தான், பவுல் “நீங்கள் அறிவிலும் அனைத்தையும் உய்த்துணரும் பண்பிலும் மென்மேலும் வளர்ந்து, அன்பில் சிறந்து, சிறந்தவற்றையே ஏற்றுச் செயல்படுமாறு இறைவனை வேண்டுகின்றேன்” என்கிறார். நாம் சிறந்தவற்றை ஏற்றுச் செயல்படுமாறு பவுல் இறைவனிடம் வேண்டுகிறார் எனில், நாம் சிறந்தவற்றை ஏற்றுச் செயல்படுவதே பவுலின் விருப்பம் என்று உறுதியாகச் சொல்லலாம். பவுல் சொல்லும் சிறந்தது எது என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் சொல்கின்றது. தொடர்ந்து அது குறித்துச் குறித்துச் சிந்திப்போம்..

எது சிறந்தது?

பவுல் சொல்வது போல், சிறந்தவற்றை ஏற்றுச் செயல்படுவதற்கு, ஒருவருக்கு எது சிறந்தது எனத் தெரிந்திருக்க வேண்டும். மேலும் சிறந்தது எது எனத் தெரிந்திருப்பது மட்டுமல்லாமல், அதன்படி வாழவேண்டும்.

நற்செய்தியில் வரும் திருமுழுக்கு யோவான், கடவுள் வழங்கிய சிறந்த கொடையான அவருடைய வாக்கைப் பெற்றுக்கொண்டு, அதன்படி வாழ்ந்து, “பாவ மன்னிப்பு அடைய மனம்மாறித் திருமுழுக்குப் பெறுங்கள்” என்கிறார். இங்கே சிறந்தது எது எனில், மனம்மாற்றம்தான். ஆம், எவர் ஒருவர் தன்னுடைய பாவத்தை விட்டுவிட்டு மனம்மாறிப் புதியதொரு வாழ்க்கை வாழ்கின்றாரோ, அவர் பாவமன்னிப்பைப் பெற்றுக்கொள்கின்றார்.

உண்மையான மனம்மாற்றம் எது என்பதைத் திருமுழுக்கு யோவான், மத்தேயு நற்செய்தியில் இன்னும் தெளிவாகக் கூறுவார். “நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்” (மத் 3:8) என்று திருமுழுக்கு யோவான் சொல்வதன் மூலம், மனம்மாற்றம் என்பது வெறும் சொல்லல்ல, அது செயல் என்று என்பது புரிகின்றது. சிறந்தவற்றை ஏற்றுக் செயல்படுத்தவேண்டும் என்றும், மனம்மாற்றம்தான் சிறந்தது என்றும் சிந்தித்த நாம், எதற்காக நாம் மனம்மாறவேண்டும் என்று சிந்திப்போம்.

சமமாக்க வரும் கடவுள்

நாம் வாழும் இவ்வுலகில் உயர்ந்தவன் – தாழ்ந்தவன், பணக்காரன் – ஏழை, படித்தவன் – பாமரன்... இப்படி ஏற்றத்தாழ்வுகள் நிறைய உண்டு. இத்தகைய ஏற்றத்தாழ்வுகளால், மனிதர்கள் சக மனிதர்களை மனிதர்களாகக்கூட மதிக்காத அவலநிலை ஏற்பட்டுள்ளது. மனிதர்கள் சக மனிதர்களை மனிதர்களாக மதித்திருந்தால் இனத்தின் பெயராலும், மொழியின் பெயராலும் இவ்வளவு கலவரங்களும் உயிர்ச்சேதமும் ஏற்பட்டிருக்காது. இந்தக் கலவரங்களும் உயிர்ச்சேதமுமே மனிதர்கள் சக மனிதர்களை மனிதர்களாக மதிக்கவில்லை என்பதற்குச் சான்றுகளாக இருக்கின்றன.

இத்தகைய சூழ்நிலையில் பாரூக் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், “.....குன்றுகள் எல்லாம் தாழவும் பள்ளத்தாக்குகள் நிரம்பவும் இவ்வாறு நிலம் முழுவதும் சமமாகவும் கடவுள் கட்டளையிட்டுள்ளார்” என்கிறது. ஆம், மெசியாவின் வருகையின் போது எல்லாம் சமமாகும். அப்போது மேற்சொன்ன எந்தவோர் ஏற்றத் தாழ்வும் இராது.

ஒருவேளை நாம் சக மனிதர்களை மனிதர்களாகப் பார்க்காமல், அவர்களை வேறுபடுத்திப் பார்க்கின்றோம் எனில், முதலில் நாம் மனம்மாறி, மெசியாவாம் கிறிஸ்து இயேசுவோடு ஒன்றிணைந்து இருக்கும் நாம் அனைவரும் ஒன்றாய் இருக்கின்றோம் (கலா 3:28) என்ற உணர்வோடு வாழவேண்டும். இத்தகைய மாற்றமானது நம்மிடமிருந்து தொடங்கவேண்டும்.

ஆகவே, மெசியாவாம் இயேசு எல்லாவற்றையும், எல்லாரையும் சமமாக்க வருவதால், நாம் நம்மிடம் இருக்கும் மனிதர்களை பிரித்துப் பார்க்கும் மனநிலையிலிருந்து மனம்மாறி, எல்லாரையும் சகோதரர் சகோதரியாகப் பார்க்கும் சிறந்தவற்றை ஏற்றுச் செயல்படுத்திக் கடவுளின் அன்பு மக்களாவோம்.

சிந்தனை

‘தாயின் கருவில் உருவானது முதல், மனித உயிர் மாண்புடன் மதிக்கப்பட்டுக் காப்பாற்றப் படவேண்டும்’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, நாம் இவ்வுலகில் உள்ள எல்லாரையும் மனித மாண்போடு நடத்தி, எல்லாரையும் சமமாக நடத்த வரும் இயேசுவின் உண்மையான சீடர்களாகி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 

 


 
Free Blog Widget
Stats Counter
hit counter