maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                                    பொதுக்காலம் 19ஆம் வாரம் - ஞாயிறு

 

முதல் வாசகம்

அவ்வுணவினால் வலிமை அடைந்த எலியா, நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.

அரசர்கள் முதல் நூலிலிருந்து வாசகம் 19: 4-8

அந்நாள்களில்

எலியா பாலைநிலத்தில் ஒரு நாள் முழுவதும் பயணம் செய்தார். அங்கே ஒரு சூரைச் செடியின் அடியில் அமர்ந்து கொண்டு, தாம் சாகவேண்டும் எனப் பின்வருமாறு மன்றாடினார்: “ஆண்டவரே, நான் வாழ்ந்தது போதும்; என் உயிரை எடுத்துக்கொள்ளும்; நான் என் மூதாதையரைவிட நல்லவன் அல்ல.” பின்னர் அச்சூரைச் செடியின் அடியில் அவர் படுத்துறங்கினார்.

அப்போது வானதூதர் அவரைத் தட்டி எழுப்பி, “எழுந்து சாப்பிடு” என்றார். அவர் கண் விழித்துப் பார்க்கையில், இதோ! தணலில் சுட்ட ஒரு அப்பமும் ஒரு குவளையில் தண்ணீரும் தம் தலைமாட்டில் இருக்கக் கண்டார். அவற்றை அவர் உண்டு பருகியபின் திரும்பவும் படுத்துக்கொண்டார்.

ஆண்டவரின் தூதர் இரண்டாம் முறை வந்து, அவரைத் தட்டி எழுப்பி, “எழுந்து சாப்பிடு; ஏனெனில் நீ நீண்ட பயணம் செய்ய வேண்டும்” என்றார். அப்பொழுது அவர் எழுந்து உண்டு பருகினார். அவ்வுணவினால் வலிமை அடைந்த அவர், நாற்பது பகலும் நாற்பது இரவும் நடந்து, ஓரேபு என்ற கடவுளின் மலையை அடைந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 34: 1-2. 3-4. 5-6. 7-8 (பல்லவி: 8a) Mp3

பல்லவி: ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்.

1
ஆண்டவரை நான் எக்காலமும் போற்றுவேன்; அவரது புகழ் எப்பொழுதும் என் நாவில் ஒலிக்கும்.
2
நான் ஆண்டவரைப் பற்றிப் பெருமையாகப் பேசுவேன்; எளியோர் இதைக் கேட்டு அக்களிப்பர். - பல்லவி

 
3
என்னுடன் ஆண்டவரைப் பெருமைப்படுத்துங்கள்; அவரது பெயரை ஒருமிக்க மேன்மைப்படுத்துவோம்.
4
துணைவேண்டி நான் ஆண்டவரை மன்றாடினேன்; அவர் எனக்கு மறுமொழி பகர்ந்தார்; எல்லா வகையான அச்சத்தினின்றும் அவர் என்னை விடுவித்தார். - பல்லவி

 
5
அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை.
6
இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவி சாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். - பல்லவி

 
7
ஆண்டவருக்கு அஞ்சி வாழ்வோரை அவர்தம் தூதர் சூழ்ந்துநின்று காத்திடுவர்.
8
ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்; அவரிடம் அடைக்கலம் புகுவோர் பேறுபெற்றோர். - பல்லவி

 

இரண்டாம் வாசகம்

கிறிஸ்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 30- 5: 2

சகோதரர் சகோதரிகளே,

கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள். மீட்பு நாளை முன்னிட்டு உங்கள்மீது பொறிக்கப்பட்ட முத்திரையாக அவர் இருக்கிறார்.

மனக் கசப்பு, சீற்றம், சினம், கூச்சல், பழிச்சொல் எல்லாவற்றையும் தீமை அனைத்தையும் உங்களை விட்டு நீக்குங்கள். ஒருவருக்கொருவர் நன்மை செய்து பரிவு காட்டுங்கள்; கடவுள் உங்களைக் கிறிஸ்து வழியாக மன்னித்ததுபோல நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்.

ஆகவே நீங்கள் கடவுளின் அன்பார்ந்த பிள்ளைகளாய் அவரைப்போல் ஆகுங்கள். கிறிஸ்து உங்களுக்காகத் தம்மை நறுமணம் வீசும் பலியும் காணிக்கையுமாகக் கடவுளிடம் ஒப்படைத்து உங்களிடம் அன்புகூர்ந்தது போல, நீங்களும் அன்பு கொண்டு வாழுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 6: 51

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 41-51

அக்காலத்தில்

“விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே” என்று இயேசு கூறியதால் யூதர்கள் அவருக்கு எதிராக முணுமுணுத்தார்கள். “இவர் யோசேப்பின் மகனாகிய இயேசு அல்லவா? இவருடைய தாயும் தந்தையும் நமக்குத் தெரியாதவர்களா? அப்படியிருக்க, ‘நான் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்தேன்’ என இவர் எப்படிச் சொல்லலாம்?” என்று பேசிக் கொண்டார்கள்.

இயேசு அவர்களைப் பார்த்துக் கூறியது: “உங்களிடையே முணுமுணுக்க வேண்டாம். என்னை அனுப்பிய தந்தை ஈர்த்தாலொழிய எவரும் என்னிடம் வர இயலாது. என்னிடம் வருபவரை நானும் இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். ‘கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்’ என இறைவாக்கு நூல்களில் எழுதியுள்ளது. தந்தைக்குச் செவிசாய்த்து அவரிடமிருந்து கற்றுக்கொண்ட அனைவரும் என்னிடம் வருவர். கடவுள்தாமே கற்றுத்தருவார் என்பதிலிருந்து தந்தையை எவராவது கண்டுள்ளார் என்று பொருள் கொள்ளக் கூடாது. கடவுளிடமிருந்து வந்துள்ளவர் மட்டுமே கடவுளைக் கண்டுள்ளார். உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என்னை நம்புவோர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்.

வாழ்வு தரும் உணவு நானே. உங்கள் முன்னோர் பாலை நிலத்தில் மன்னாவை உண்டபோதிலும் இறந்தனர். உண்பவரை இறவாமல் இருக்கச் செய்யும் உணவு விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த இந்த உணவே.

விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார். எனது சதையை உணவாகக் கொடுக்கிறேன். அதை உலகு வாழ்வதற்காகவே கொடுக்கிறேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

I 1 அரசர்கள் 19: 4-8
II எபேசியர் 4: 30–5: 2
III யோவான் 6: 41-51

“கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்”


நிகழ்வு

இங்கிலாந்தைச் சார்ந்த மிகப்பெரிய நற்செய்திப் பணியாளர் ஜீ.சி. மோர்கன் (G.C. Morgan 1863-1945). கடவுளின் வார்த்தையை சிறந்த விதமாய்க் கற்பித்த இவருக்கு நான்கு மகன்கள் இருந்தார்கள். இந்த நான்கு பேருமே தங்கள் தந்தையைப் போன்று கடவுளின் வார்த்தையை மிகுந்த வல்லமையோடு மக்களுக்குக் கற்பித்து வந்தார்கள்.

ஒருநாள் செய்தியாளர் ஒருவர் மோர்கனின் நான்காவது மகனான ஹார்வரிடம், “உங்களுடைய தந்தையோடு சேர்த்து உங்களது குடும்பத்தில் ஐந்து பேர் கடவுளின் வார்த்தையைக் கற்பித்து வருகின்றீர்கள். இதில் யார் சிறந்த முறையில் கடவுளின் வார்த்தையைக் கற்பித்து வருகின்றார் அல்லது உங்களில் யார் சிறந்த போதகர் என்று நினைக்கிறீர்கள்?” என்றார். இதற்கு ஹார்வர்ட் மிகவும் உறுதியான குரலில், “என்னைப் பொறுத்தவரையில், கடவுளின் வார்த்தையை எங்கள் ஐந்து பேரையும்விட, என் தாய்தான் சிறந்த விதமாய்க் கற்பித்து வருகின்றார் என்று சொல்வேன். ஏனெனில், அவர்தான் எங்கள் அனைவர்மீதும் அன்பையும் பாசத்தையும் பொழிந்து வருகின்றார். எங்களுக்குத் தேவையானதை அவர் தருகின்றார். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் தன் வாழ்வால் எங்களுக்குக் கடவுளின் வார்த்தையைக் கற்பிக்கின்றார். அதனால் அவரே எங்கள் எல்லாரையும் விட சிறந்த போதகர்” என்றார்.

(தன்) தாய்தான் சிறந்த போதகர், ஆசிரியர். அவரே கடவுளின் வார்த்தையை மிகச் சிறந்த விதமாய்க் கற்பிக்கின்றவர் என்று ஹார்வர்ட் சொன்ன வார்த்தைகள் கவனிக்கத் தக்கவை. பொதுக்காலத்தின் பத்தொன்பதாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, “கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத்தருவார்” என்ற செய்தியை நமக்குத் தருகின்றது. கடவுள் நமக்குக் கற்றுத் தருகின்றபொழுது, அதைக் கேட்கின்ற நமது வாழ்க்கை எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்து நாம் சிந்திப்போம்.

கற்றுத் தருகின்ற கடவுள்

எல்லாராலும் கற்றுத்தர முடியாது. கற்றுத் தருகின்ற எல்லாராலும் போதகராக, ஆசிரியராகிவிட முடியாது. கடைப்பிடித்துக் கற்பிக்க வேண்டும் அவரே சிறந்த போதகர், ஆசிரியர். அப்படிப்பட்டவரே விண்ணரசில் மிகப்பெரியவர் (மத் 5: 19). யூதர்கள் நடுவில் “கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்” (எசா 54: 13) என்ற நம்பிக்கை இருந்தது. நற்செய்தியில் இயேசு கிறிஸ்து, “விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு நானே!” என்று சொன்னபிறகு, ‘அது எப்படி நம்மோடு இருக்கின்ற ஒருவர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவாக உணவாக முடியும்... இவன் கடவுளைப் பழிக்கின்றான்’ என்று யூதர்கள் இயேசுவுக்கு எதிராக முணுமுணுத்தபோதுதான், இயேசு இறைவாக்கினர் எசாயா நூலில் இடம்பெறும், “கடவுள்தாமே அனைவருக்கும் கற்றுத் தருவார்” என்ற இறைவார்த்தையை மேற்கோள் காட்டிப் பேசுகின்றார்.

கடவுளைவிடவும் சிறந்த ஆசிரியர் இருக்க முடியாது. ஏனெனில், மனிதர்கள் கற்பிப்பது ஒன்றும், கடைப்பிடிப்பது வேறொன்றுமாக இருக்கும். ஆனால், கடவுள் சொல்லிலும் செயலிலும் வல்லவர் (லூக் 24: 19) நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகளைக் கொண்டிருப்பவர் (யோவா 6: 68). அப்படிப்பட்டவர் அனைவருக்கும் கற்றுத் தருகின்றவர். ஆதலால், அவர் கற்றுத் தருவதற்கு அல்லது அவரது வார்த்தைக்குச் செவிசாய்க்கின்ற ஒருவர் இயேசுவை இறைமகன் என்றும், அவர் விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு என்றும் ஏற்றுக்கொள்வார். யூதர்கள் இயேசுவை விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவாக ஏற்றுக்கொள்ளாததை வைத்துப் பார்க்கும்பொழுது, அவர்கள் கடவுள் கற்றுத்தந்ததற்குச் செவிசாய்க்க வில்லை என்று எண்ணத் தோன்றுகின்றது.

கடவுளிடமிருந்து கற்றுக்கொண்டவர் தீமை செய்வதில்லை

கடவுளிடமிருந்து கற்றுக்கொண்ட ஒருவர் இயேசுவை விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவு என்று நம்பி ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லது ஏற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்று பார்த்தோம். அடுத்ததாக, கடவுளிடமிருந்து கற்றுக்கொண்ட ஒருவர் தீமையை விட்டுவிடுவேண்டும் என்பதைக் குறித்துச் சிந்திப்போம்.

எபேசியருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், “கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிக்காதீர்கள்” என்று சொல்லிவிட்டு, “தீமை அனைத்தையும் உங்களைவிட்டு நீக்குங்கள்” என்கிறார். நம்மிடமிருந்து தீமை அனைத்தையும் விட்டு நீக்குவதற்கும், கடவுளின் தூய ஆவியார்க்குத் துயரம் வருவிப்பதற்கும் என்ன தொடர்பிருக்கின்றது என்று தெரிந்துகொள்வது நல்லது. யோவான் நற்செய்தியில் இயேசு தூய ஆவியரைக் குறித்துப் பேசுகின்றபொழுது, தூய ஆவியாரே உண்மையை வெளிப்படுத்துபவர் (யோவா 14: 17) என்பார். கடவுளின் தூய ஆவியார் உண்மையை வெளிப்படுத்துவர் எனில், அல்லது கற்றுத்தருபவர் எனில், அவரிடமிருந்து கற்றுக்கொண்ட ஒருவர் தீமையை ஒருபோதும் செய்யமாட்டார். அதன்மூலம் அவருக்குத் துயரமும் வருவிக்கமாட்டார்.

அரசர்கள் முதல்நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில், இறைவாக்கினர் எலியா பாலைநிலத்தில் பயணம் செய்வதைக் குறித்துப் படிக்கின்றோம். அவர் ஏன் பாலைநிலத்தில் பயணிக்க வேண்டும் எனில், ஆகாபு மன்னனும் அவனுடைய மனைவி ஈசபேலும் பாகால் தெய்வ வழிபாட்டை ஊக்கப்படுத்தியதற்காக, எலியா அவர்களைச் சாடியதைத் தொடர்ந்து, அவர்கள் அவரைக் கொல்லத் துணிகிறார்கள். இதனால் அவர் பாலைநிலத்தில் பயணிக்க வேண்டியதாயிற்று. ஒருவேளை ஆகாபு மன்னன் ஆண்டவர் கற்றுக்கொடுத்ததற்குச் செவிசாய்த்திருந்தால், அவன் எலியாவைக் கொல்லத் துணிந்திருக்கமாட்டேன். இன்னும் பல தீமைகளை அவன் செய்திருக்க மாட்டான். அவன் கடவுள் கற்றுக்கொடுத்ததற்குச் செவிசாய்க்காததாலேயே இப்படியெல்லாம் நடந்துகொண்டான். ஆதலால், ஆண்டவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொண்டார் எனில், அவர் தீமையை விட்டுவிடவேண்டும்.

கடவுளிடமிருந்து கற்றுக்கொண்ட ஒருவர் அன்புசெய்து வாழவேண்டும்

கடவுளிடமிருந்து கற்றுக்கொண்ட ஒருவர் தீமையைத் தன்னிடமிருந்து விட்டொழிப்பது மட்டும் போதுமா என்றால் நிச்சயமாக இல்லை. மாறாக, அவர் நன்மை செய்து பரிவு அடுத்தவரிடம் காட்டவேண்டும். இவையெல்லாவற்றையும் விட ஆண்டவர் இயேசு நம்மீது அன்பு கூர்ந்துபோல, ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டு வாழவேண்டும். இதைப் புனித பவுல், இன்றைய இரண்டாம் வாசகத்தின், இரண்டாவது பகுதியில் மிக அழகாக விளக்குகின்றார்.

இன்றைக்குப் பலர் கடவுள் தன் அடியார்கள் வழியாகக் கற்றுத்தருவதைக் கேட்பதற்குத் தயாராக இல்லை. கற்றுத்தருவதைக் கேட்டாலும், அதன்படி வாழத் தயாராக இல்லை. எவர் ஒருவர் கடவுள் கற்றுத்தருவதற்குச் செவி சாய்க்கின்றாரோ, அவர் இயேசுவை விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த உணவாகவும், இறைமகனாகவும் ஏற்றுக்கொள்வார். மட்டுமல்லாமல், அவர் தன்னிடம் இருக்கின்ற தீமைகள் அனைத்தையும் விட்டொழித்து, ஒருவர் மற்றவரை அன்பு செய்வார். எனவே, நாம் கடவுள் கற்றுத்தருவதற்குச் செவிசாய்த்து, இயேசுவை விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வளிக்கும் உணவாக ஏற்று, தீமையை விட்டொழித்து, நன்மை செய்வோம்; ஆண்டவர் நம்மை அன்பு செய்தது போன்று ஒருவர் மற்றவரை அன்புசெய்து, அவரது அன்பிற்குச் சாட்சிகளாத் திகழ்வோம்.

சிந்தனை:

‘உமது திருச்சட்டத்தை எனக்குக் கற்றுத் தாரும்’ (திபா 119: 29) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் கடவுளிடம் அவரது திருச்சட்டத்தை நமக்குக் கற்றுத் தரக்கேட்போம்; அவர் கற்றுத் தந்ததன்படி, நாம் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 

 


 
Free Blog Widget
Stats Counter
hit counter