maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                                                பொதுக்காலம் 16ஆம் வாரம் - ஞாயிறு


முதல் வாசகம்

ஆடுகளைக் கூட்டிச் சேர்த்து, அவற்றைப் பேணிக்காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 23: 1-6


ஆண்டவர் கூறுவது: என் மேய்ச்சலுக்குட்பட்ட ஆடுகளை அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பர்களுக்கு ஐயோ கேடு!

தம் மக்களை வழிநடத்தும் மேய்ப்பர்களுக்கு எதிராக இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நீங்கள் என் மந்தையைச் சிதறடித்துவிட்டீர்கள்; அதனைத் துரத்தியடித்தீர்கள்; அதனைப் பராமரிக்கவில்லை. இதோ உங்கள் தீச்செயல்களின் காரணமாக உங்களைத் தண்டிக்கப் போகிறேன் என்கிறார் ஆண்டவர்.

என் மந்தையில் எஞ்சியிருக்கும் ஆடுகளை, நான் துரத்தியடித்த அனைத்து நாடுகளிலிருந்தும் கூட்டிச் சேர்த்து அவர்களுக்குரிய ஆட்டுப்பட்டிக்குக் கொண்டுவருவேன். அவையும் பல்கிப் பெருகும். அவற்றைப் பேணிக் காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன். இனி அவை அச்சமுறா; திகிலுறா; காணாமலும் போகா, என்கிறார் ஆண்டவர்.

ஆண்டவர் கூறுவது: இதோ நாள்கள் வருகின்றன. அப்போது நான் தாவீதுக்கு ஒரு நீதியுள்ள ‘தளிர்’ தோன்றச் செய்வேன். அவர் அரசராய் ஆட்சி செலுத்துவார். அவர் ஞானமுடன் செயல்படுவார். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார். அவர்தம் நாள்களில் யூதா விடுதலை பெறும்; இஸ்ரயேல் பாதுகாப்புடன் வாழும். ‘யாவே சித்கேனூ’ - ஆண்டவரே நமது நீதி - என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்


திபா 23: 1-3a. 3b-4. 5. 6 (பல்லவி: 1)Mp3

பல்லவி: ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
1
ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை.
2
பசும் புல்வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார்; அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார்.
3a
அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார். - பல்லவி

3b
தம் பெயர்க்கேற்ப எனை நீதி வழி நடத்திடுவார்;
4
சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்; உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும். - பல்லவி

5
என்னுடைய எதிரிகளின் கண் முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது. - பல்லவி

6
உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம் உம் அருள் நலமும் பேரன்பும் என்னைப் புடைசூழ்ந்து வரும்; நானும் ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்ந்திருப்பேன். - பல்லவி

இரண்டாம் வாசகம்

இயேசுவே நமக்கு அமைதி அருள்பவர்.

திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 13-18

சகோதரர் சகோதரிகளே,

ஒரு காலத்தில் தொலையில் இருந்த நீங்கள் இப்பொழுது இயேசு கிறிஸ்துவோடு இணைந்து, அவரது இரத்தத்தின் மூலம் அருகில் கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்.

ஏனெனில் அவரே நமக்கு அமைதி அருள்பவர். அவரே இரண்டு இனத்தவரையும் பிரித்து நின்ற பகைமை என்னும் சுவரை, தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய்த் தகர்த்தெறிந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார். பல கட்டளைகளையும் விதிகளையும் கொண்ட யூதச் சட்டத்தை அழித்தார். இரு இனத்தவரையும் தம்மோடு இணைந்திருக்கும் புதியதொரு மனித இனமாகப் படைத்து அமைதி ஏற்படுத்தவே இவ்வாறு செய்தார். தாமே துன்புற்றுப் பகைமையை அழித்தார். சிலுவையின் வழியாக இரு இனத்தவரையும் ஓருடலாக்கிக் கடவுளோடு ஒப்புரவாக்க இப்படிச் செய்தார்.

அவர் வந்து, தொலையில் இருந்த உங்களுக்கும், அருகிலிருந்த அவர்களுக்கும் அமைதியை நற்செய்தியாக அறிவித்தார். அவர் வழியாகவே, இரு இனத்தவராகிய நாம் ஒரே தூய ஆவி மூலம் நம் தந்தையை அணுகும் பேறு பெற்றிருக்கிறோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 10: 27

அல்லேலூயா, அல்லேலூயா! என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்


ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்தனர்.

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 30-34

அக்காலத்தில்

திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், “நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்” என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவதுமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.

அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலை நிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர்களை இன்னாரென்று தெரிந்துகொண்டு, எல்லா நகர்களிலிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர்.

அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப்போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

 


பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறு


I எரேமியா 23: 1-6
II எபேசியர் 2: 13-18
III மாற்கு 6: 7-13

“ஓய்வறியா நல்லாயன் இயேசு”

நிகழ்வு

தனது எழுபத்தெட்டாவது வயதில், இருநூற்று அறுபத்தைந்தாவது திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஜோசப் அலோசியஸ் இரட்சிங்கர் எனப்படும் நமது முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள். இவர் ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் பேராயராக இருந்த சமயத்தில் (1977-1982) மக்கள் தன்னை எந்த நேரத்தில் வேண்டுமானா; ஏன், நள்ளிரவிலும்கூடச் சந்திக்கலாம் என்றார். அந்தளவு இவர் தன்னை மக்களில் ஒருவராக இனங்கண்டுகொண்டார். .

இப்படிப்பட்டவரிடம் ஒருமுறை சிறுவன் ஒருவன், “ஓய்வில்லாமல் உழைத்துக்கொண்டு இருக்கின்றீர்களே...! நீங்கள் தூங்குவதே இல்லையா?” என்றான். “நீ நிம்மதியாகத் தூங்கினாலே போதும் மகனே! அது எனக்குப் புத்துணர்ச்சியைத் தந்துவிடும். அந்தப் புத்துணர்ச்சியைக் கொண்டு நான் நீண்டே நேரம் உழைப்பேன்” என்று வாஞ்சையோடு பதிலளித்தார் பின்னாளில் திருத்தந்தை பதினாறாம் பெனடிட்.டாக உயர்ந்த ஜோசப் அலோசியஸ் இரட்சிங்கர் அவர்கள்.

ஆம், கடவுளின் மக்களுக்காக ஓய்வின்று உழைத்த திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் அவர்கள் ஒரு நல்ல ஆயனுக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. பொதுக்காலம் பதினாறாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, இயேசு ஓய்வறியாது உழைத்த நல்லாயன் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மக்களைப் பராமரிக்காத ஆயர்கள் – தலைவர்கள்

இயேசு கிறிஸ்து உயர்த்தெழுந்த பின் பேதுருவோடு பேசுகின்றபொழுது, அவரிடம், “என் ஆட்டுக்குட்டிகளைப் பேணி வளர்” (யோவா 21: 15), “என் ஆடுகளை மேய்” (யோவா 21: 16), “என் ஆடுகளைப் பேணி வளர்” (யோவா 21: 17) என்பார். இயேசு பேதுருவிடம் இவ்வாறு சொல்லக் காரணம், திருஅவையின் தலைவராக இருக்கப் போகிறவர், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை – ஆடுகளைப் பேணிப் பராமரிக்கவேண்டியது அவருடைய முதன்மையான கடமை என்பதாலேயே ஆகும். இயேசு பேதுருவிடம் ஒப்படைத்த இப்பொறுப்பினை அவர் தன் உயிரையே தந்து சிறப்பாகச் செய்தார்.

ஆனால், இறைவாக்கினர் எரேமியாவின் காலத்தில் வாழ்ந்த தலைவர்கள், அதாவது ஆயர்கள் மக்களைப் பராமரிக்கவில்லை. மாறாக, அவர்கள் மக்களை – மந்தையைச் சிதறடித்தார்கள்; துரத்தியடித்தார்கள். மக்களைப் பேணிக் காத்து, நலிவுற்றத்தைத் திடப்படுத்தி, பிணியுற்றத்தை நலப்படுத்தி, காயமுற்றவற்றிற்குக் கட்டு போட்டு, வழி தப்பியவற்றைத் திரும்பக் கூட்டிவந்து, காணாமல் போனவற்றைத் தேடவேண்டிய ஆயர்கள் (எசே 34: 4) அவ்வாறு இல்லாததால், ஆண்டவரின் சினம் அவர்கள்மேல் எழுகின்றது. இதனால் ஆண்டவர் இறைவாக்கினர் எரேமியா வழியாக, “என் ஆடுகளைச் அழித்துச் சிதறடிக்கும் மேய்ப்பர்களுக்கு ஐயோ கேடு!” என்கிறார். அதைவிடவும், “ஆடுகளைப் பேணிக் காக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன்” என்கிறார்.

ஆண்டவர், இறைவாக்கினர் எரேமியா வழியாகச் சொன்ன, ஆயர்களை நியமிப்பேன்... அவர் ஞானமுடன் செயல்படுவார்... நீதியையும் நேர்மையும் நிலைநாட்டுவார் என்ற வாக்குறுதி நிறைவேற்றியதா என்று சிந்தித்துப் பார்ப்போம்.

மக்கள்மீது பரிவுகொண்ட நல்லாயர் இயேசு

வான்ஸ் ஹாவ்னர் (Vance Havner) என்ற எழுத்தாளர் ஒருமுறை குறிப்பிட்ட செய்தி இது: “ஓய்வெடுக்க நேரம் ஒதுக்காதவர், வெகு சீக்கிரம் நிரந்தரமாக ஓய்வெடுத்து விடுவார்.” இக்கூற்று கேட்பதற்குக் கசப்பாக இருந்தாலும். யாராலும் மறுக்க முடியாத உண்மை. இன்றைக்குப் பலர் வேலை வேலை என்று ஓய்வெடுக்க நேரம் ஒதுக்காமல் தொடர்ந்து உழைப்பதைக் காணமுடிகின்றது. இத்தகையோர் தங்களுடைய வாழ்வினை ஆய்வுக்கு உட்படுத்திப் பார்த்து, ஓய்வெடுக்க நேரம் ஒதுக்குவது நல்லது.

நற்செய்தியில், பணித்தளங்களுக்குச் சென்றுவிட்டுத் திரும்வி வருகின்ற தன் சீடர்களிடம் இயேசு மேலும் வேலை கொடுக்காமல், அவர்களிடம், “நீங்கள் பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று, சற்று ஓய்வெடுங்கள்” என்கிறார். இயேசு தன் சீடர்கள் எத்துனை அன்பும் பரிவும் கொண்டிருந்தால், இத்தகைய வார்த்தைகளை அவர் சொல்லியிருப்பார் என்று கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம். இயேசு தன்னுடைய சீடர்கள்மீது உண்மையான அன்பும் பரிவும் கொண்டிருந்தார். அதனால்தான் அவர் அவர்களிடம், “சற்று ஓய்வெடுங்கள்” என்கிறார். இயேசு தன் சீடர்களிடம் மேற்கூறிய வார்த்தைகளைச் சொல்வதற்கு மற்றொரு காரணமும் இருந்தது. அது என்னவெனில், ஏரோது மற்றும் பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரிடமிருந்து கிளம்பிய எதிர்ப்பு. இத்தகைய காரணங்களால் இயேசு சீடர்களிடம் அவ்வாறு சொல்கின்றார்.

இதையடுத்து இயேசு தன்னுடைய சீடர்களோடு பாலை நிலத்திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் செல்கின்றார். இயேசு தன் சீடர்களோடு தனிமையான இடத்திற்குப் போவதைக் கண்ட மக்கள், அவருக்கு முன்பாகவே அங்கு வந்து சேர்கின்றார்கள். ‘ஓய்வெடுக்க வந்த இடத்திற்கு மக்கள் வந்துவிட்டார்களே!’ என்று இயேசு அவர்களைத் துரத்திவிடவில்லை அல்லது அவர்களிடம் பாராமுகமாகவும் இல்லை. மாறாக, அவர் ஆயனில்லா ஆடுகளைப் போன்று இருந்த மக்கள்மீது பரிவு அவர்களுக்குப் பலவற்றைக் கற்பிக்கின்றார். இவ்வாறு ‘மேய்ப்பர்களை நியமிப்பேன்...’ என்று கடவுள் இறைவாக்கினர் எரேமியா வழியாகத் தந்த வாக்குறுதி இயேசுவில் நிறைவேறுகின்றது.

ஆம், நீதியுள்ள தளிரான இயேசு ஞானத்தோடு செயல்பட்டு, நீதியை நிலைநாட்டி, ஆயனில்லா ஆடுகள் போன்று இருந்த மக்கள்மீது பரிவுகொண்டார். இது இயேசுவின் காலத்திற்கு முன்பு யாருமே செய்யாத ஒன்று. அதனால்தான் இயேசு, “எனக்கு முன்பு வந்தவர் அனைவரும் திருடரும் கொள்ளையருமே” (யோவா 10: 8) என்று துணிவோடு சொல்ல முடிந்தது. இயேசு தனக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தையும் மக்களுக்காகப் பயன்படுத்தித் தான் பரிவுள்ள ஓர் என்பதை வெளிப்படுத்துகின்றார். இதைவிடவும் ஒன்றைச் செய்தார். அது என்ன பார்ப்போம்.

தம் இரத்தத்தைச் சிந்திய நல்லாயர் இயேசு

நற்செய்தி வாசகம், இயேசு மக்கள்மீது பரிவு கொண்டதை எடுத்தியம்புகின்ற வேளையில், இன்றைய இரண்டாம் வாசகம், இயேசு மக்கள்மீதுகொண்ட பரிவின் வெளிப்பாடாகச் சிலுவையில் தம் விலை மதிக்கப்பெறாத இரத்தத்தைச் சிந்தி, யூதர், பிறவினத்தார் என்று பிரிந்து கிடந்தவர்களிடையே அமைதியைக் கொண்டுவந்து, அவர்களை ஒன்றுபடுத்தினார் என்று எடுத்தியம்புகின்றது.

யூதர்கள், தாங்கள் கடவுளால் தேர்ந்துகொள்ளப்பட்டவர்கள் என நினைத்தார்கள். மற்றவர்களையோ அவர்கள் விலங்கினும் கீழாகத் ‘தீட்டுப்பட்டவர்களாக’ நினைத்தார்கள். இதனால் யூதர்களுக்கும் யூதரல்லாத பிறவினத்தாருக்கும் இடையே பகைமையும் வெறுப்பும் இருந்துகொண்டே இருந்தன. இந்நிலையில் நல்லாயனாம் இயேசு மக்கள்மீது கொண்ட பேரன்பின், பரிவின் வெளிப்பாடாகச் சிலுவையில் சிந்திய தம் விலை மதிக்கப்பெறாத இரத்தத்தின் வழியாக அவர்களை ஒன்றுபடுத்தினார். எனவேதான் புனித பவுல், “இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்” (கலா 3: 28) என்கிறார்.

ஆதலால், மக்களுக்காக ஓய்வின்றி உழைத்த, மக்கள்மீது பரிவுகொண்டு, அவர்களுக்காகத் தம் உயிரையும் தந்து, இம்மண்ணுலகில் அமைதியைக் கொணர்ந்த நல்லாயர் இயேசுவின் வழியில் நாமும் நடந்து, நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்கு நல்ல ஆயர்களாக இருந்து, அவர்களைப் பேணிப் பராமரிப்போம்.

சிந்தனை

‘மக்களுக்குப் பணிபுரிவது ஒன்றே ஆயர்களுக்கும் அருள்பணியாளர்களும் அளிக்கப்பட்ட முதன்மையான கடமை’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆகையால் நாம் ஒவ்வொருவரும் மக்களுக்குப் பணிபுரிவது ஒன்றே நமது முதன்மையான கடமை என்பதை உணர்ந்து, அதற்கேற்றாற்போல் பணிசெய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 


 
Free Blog Widget
Stats Counter
hit counter