maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                                                பொதுக்காலம் 12ஆம் வாரம் - ஞாயிறு
 



முதல் வாசகம்

உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!

யோபு நூலிலிருந்து வாசகம் 38: 1, 8-11

ஆண்டவர் சூறாவளியினின்று யோபுக்கு அருளிய பதில்:

“கருப்பையினின்று கடல் உடைப்பெடுத்து ஓடிய பொழுது அதனைக் கதவிட்டு அடைத்தவர் யார்? மேகத்தை அதற்கு மேலாடையாக்கி, காரிருளைப் பொதி துணியாக்கி, எல்லைகளை நான் அதற்குக் குறித்து கதவையும் தாழ்ப்பாளையும் பொருத்தி ‘இதுவரை வருவாய், இதற்கு மேல் அல்ல; உன் இறுமாப்பின் அலைகள் இங்கே நிற்க!’ என்று நான் இயம்பியபோது எங்கிருந்தாய் நீ?”

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 107: 23-24. 25-26. 28-29. 30-31 (பல்லவி: 1) Mp3

பல்லவி: ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்; ஏனெனில், அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
23
சிலர் கப்பலேறிக் கடல்வழிச் சென்றனர்; நீர்த்திரள்மீது வாணிகம் செய்தனர்.
24
அவர்களும் ஆண்டவரின் செயல்களைக் கண்டனர்; ஆழ்கடலில் அவர்தம் வியத்தகு செயல்களைப் பார்த்தனர். - பல்லவி

25
அவர் ஒரு வார்த்தை சொல்ல, புயல் காற்று எழுந்தது; அது கடலின் அலைகளைக் கொந்தளிக்கச் செய்தது.
26
அவர்கள் வானமட்டும் மேலே வீசப்பட்டனர்; பாதாளமட்டும் கீழே தள்ளப்பட்டனர்; அவர்கள் உள்ளமோ இக்கட்டால் நிலைகுலைந்தது. - பல்லவி

28
தம் நெருக்கடியில் அவர்கள் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர் அவர்களை விடுவித்தார்.
29
புயல் காற்றை அவர் பூந்தென்றலாக மாற்றினார்; கடல் அலைகளும் ஓய்ந்துவிட்டன. - பல்லவி

30
அமைதி உண்டானதால் அவர்கள் மகிழ்ச்சியுற்றனர்; அவர்கள் விரும்பிய துறைமுகத்திற்கு அவர் அவர்களைக் கொண்டு போய்ச் சேர்த்தார்.
31
ஆண்டவரின் பேரன்பை முன்னிட்டு, மானிடரான அவர்களுக்கு அவர் செய்த வியத்தகு செயல்களை முன்னிட்டு அவர்கள் அவருக்கு நன்றி செலுத்துவார்களாக! - பல்லவி

இரண்டாம் வாசகம்


பழையன கழிந்து புதியன புகுந்தன.


திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 14-17


சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கிறது. ஏனெனில் ஒருவர் அனைவருக்காகவும் இறந்தார். அனைவரும் அவரோடு இறந்தனர். இது நமக்குத் தெரியும். வாழ்வோர் இனித் தங்களுக்கென வாழாமல் தங்களுக்காக இறந்து உயிர்பெற்றெழுந்தவருக்காக வாழ வேண்டும் என்பதற்காகவே அவர் அனைவருக்காகவும் இறந்தார்.

ஆகவே இனிமேல் நாங்கள் எவரையும் மனித முறைப்படி மதிப்பிடுவதில்லை; முன்பு நாங்கள் கிறிஸ்துவையும் மனித முறைப்படிதான் மதிப்பிட்டோம். ஆனால் இப்போது அவ்வாறு செய்வதில்லை. எனவே ஒருவர் கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்போது அவர் புதிதாகப் படைக்கப்பட்டவராய் இருக்கிறார். பழையன கழிந்து புதியன புகுந்தன அன்றோ!

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 7: 16

அல்லேலூயா, அல்லேலூயா! நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?

✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 4: 35-41

ஒரு நாள் மாலை நேரம். இயேசு சீடர்களை நோக்கி, “அக்கரைக்குச் செல்வோம், வாருங்கள்” என்றார். அவர்கள் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிட்டு, படகில் இருந்தவாறே அவரைக் கூட்டிச் சென்றார்கள். வேறு படகுகளும் அவருடன் சென்றன.

அப்பொழுது ஒரு பெரும் புயல் அடித்தது. அலைகள் படகின் மேல் தொடர்ந்து மோத, அது தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. அவரோ படகின் பிற்பகுதியில் தலையணை வைத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். அவர்கள், “போதகரே, சாகப்போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றைக் கடிந்துகொண்டார். கடலை நோக்கி, “இரையாதே, அமைதியாயிரு” என்றார். காற்று அடங்கியது; மிகுந்த அமைதி உண்டாயிற்று.

பின் அவர் அவர்களை நோக்கி, “ஏன் அஞ்சுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டார். அவர்கள் பேரச்சம் கொண்டு, “காற்றும் கடலும் இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.



 
 

I யோபு 38: 1, 8-11
II 2 கொரிந்தியர் 5: 14-17
III மாற்கு 4: 35-41

“கிறிஸ்துவின் பேரன்பு”


நிகழ்வு

1986 ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 26 ஆம் நாம் அப்போதைய சோவியத் ஒன்றியத்தின் கீழ் இருந்த உக்ரேனின் செர்னோபிலில் ஏற்பட்ட அணு உலை விபத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்கமாட்டோம். இங்கு நான்கு அணு உலைகள் இருந்தன. அவற்றில் ஓர் அணு உலையிலிருந்த ‘நீர் குளிர்வுச் சாதனம்’ செயல்படாமல் போனதால், வெப்பம் அதிகரித்து, அணு உலையின் மையம் உருகி வெடிக்கத் தொடங்கியது. இதனால் இருபது வகையான கதிர்வீச்சுப் பொருள்கள் காற்று மண்டலத்தில் கலந்து,, ஈராயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்தார்கள். இந்த அணு உலை விபத்தின் தாக்கம் அண்டை நாடான ஸ்வீடன் வரை இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த அணு உடலையின் பாதிப்பு மேலும் தொடராமல் இருக்க, அணு உலையின் நடுவில் டன் கணக்காக மணலைக் கொட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு வந்தது அங்கிருந்த வல்லுநர் குழு. இதையடுத்து, ஹெலிகாப்டரில் ஒருவர் டன் கணக்காக மணல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு அவற்றை அணு உலையில் நடுவில் கொட்டினார். இதனால் விபத்தின் தாக்கம் படிப்படியாகக் குறைந்தது. அதே நேரத்தில் மணல் மூட்டைகளை ஹெலிகாப்டரிலிருந்து அணு உலையின் நடுவில் கொட்டிக்கொண்டிருந்தவர், கதிர்வீச்சின் காரணமாக இறந்தார். அணு உலையின் நடுவில் மணலைக் கொட்டுகின்றபொழுது கதிர்வீச்சினால் தான் இறப்போம் என்பது ஹெலிகாப்டரை ஓட்டிச் சென்றவருக்குக் நன்றாகவே தெரிந்திருந்தது. ஆனாலும், அவர் அணு உலை விபத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தன்னுயிரையே தியாகமாகத் தந்தார்.

ஆம், இந்த நிகழ்வில் வரும் மனிதர் அணு உலை விபத்திலிருந்து மக்களைக் காக்கத் தன்னுயிரையே தந்தார். ஆண்டவர் இயேசு நாம் அனைவரும் வாழ்வு பெறுவதற்காக, நமக்காக இறந்து, நம்மீதுகொண்ட பேரன்பை வெளிப்படுத்தினார். பொதுக்காலத்தின் பன்னிரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை கிறிஸ்துவின் பேரன்பை நமக்கு உணர்த்துவதாக இருக்கின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

அனைவருக்காகவும் இறந்த கிறிஸ்து

புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், “கிறிஸ்துவின் பேரன்பே எங்களை ஆட்கொள்கின்றது. ஏனெனில் ஒருவர் அனைவருக்காகவும் இறந்தார்” என்கிறார்.

கிறிஸ்துவின் பேரன்பை வார்த்தைகளால் விவரித்துச் சொல்லமுடியாது. காரணம், புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமடலில் கூறுவதுபோல், நேர்மையாளர் ஒருவருக்காக அல்லது நல்லவர் ஒருவருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுப்பதே அரிதாக இருக்கின்றபொழுது, நாம் பாவிகளாக இருக்கும்பொழுதே கிறிஸ்து நமக்காகத் தன் இன்னுயிரைத் தந்தார் (உரோ 5: 6-8) இதன்மூலம் அவர் நம்மீது கொண்டிருக்கும் பேரன்பை உணர்த்தினார்.

முதல் பெற்றோர் செய்த தவற்றினால் பாவம் இவ்வுலகில் நுழைந்தது. அப்பாவத்தைப் போக்க செம்மறியாய் வந்த இயேசு (யோவா 1: 29), சிலுவையில் தன்னையே தந்தார். இவ்வாறு அவர் நம் அனைவருக்காகவும் இறந்து அவர் தம் பேரன்பை வெளிப்படுத்தினார்.

அலைகளை அடக்கிய கிறிஸ்து

கிறிஸ்து நம்மீது பேரன்புகொண்டிருக்கின்றார் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் கூறுகின்றார் எனில், அதற்கு அர்த்தம் தருவதாய் இருக்கின்றது இன்றைய நற்செய்திவாசகம். அது எப்படி என்று நாம் சிந்திப்போம்.

இயேசு தன் சீடர்களுடன் கலிலேயாக் கடலில் மேற்குப் பக்கமாய் இருந்தார். மக்கள் அவரிடம் வருவதும் போவதுமாய் இருந்ததால், அவர் தன் சீடர்களிடம், “அக்கரைக்குச் செல்வோம் வாருங்கள்” என்கிறார். கலிலேயாக் கடலானது மலைகள் சூழ இருந்ததாலும், 690 அடி ஆழமானதான இருந்ததாலும் அதில் அடிக்கடி புயல் ஏற்படுவதுண்டு. இன்றைய நற்செய்தியிலும் இயேசு தன் சீடர்களுடன் கடலில் பயணம் செய்கின்றபொழுது புயல் ஏற்பட்டு, அலைகள் படகின்மீது மோதி, அது தண்ணீரால் நிரம்பிக்கொண்டிருந்தது. இதைப் பார்த்துவிட்டு, இயேசுவின் சீடர்கள், “போதகரே, சாகப் போகிறோமே! உமக்குக் கவலையில்லையா?” என்கிறார்கள்.

கடலில் புயல் ஏற்பட்டு, அதனால் அலைகள் உண்டாகி, படகு தண்ணீரால் நிரம்பிக் கொண்டிருந்தபொழுதும், இயேசு படகின் பிற்பகுதியில் தூங்கிக்கொண்டிருந்தார் எனில், அவர் தொடர்ந்து இறையாட்சிப் பணிசெய்ததால், எவ்வளவு சோர்வாக இருந்திருப்பார் என்பதை நாம் கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம். ஆனாலும் இயேசுவை அவரது சீடர்கள் எழுப்பியதும், அவர் காற்றையும் கடலையும் கடிந்துகொண்டு அவற்றை அமைதியாக இருக்கச் செய்கின்றார். இதன்மூலம் நாம் இரண்டு உண்மைகளை அறிந்துகொள்ளலாம். ஒன்று, இயேசு தன் சீடர்கள்மீது பேரன்பு கொண்டிருந்தார். அதனால் அவர் அவர்களை எந்தத் துன்பமும் இல்லாமல் பார்த்துகொண்டார். இரண்டு. இயேசுவுக்குக் காற்றின் மீதும் கடலின் மீதும் இன்னும் எல்லாவற்றின்மீதும் அதிகாரம் இருந்தது.

யோபு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில் கடவுளுக்கு மேகமும் கடலும் கட்டுப்பட்டன என்று வாசிக்கின்றோம். இயேசுவுக்கும் எல்லா அதிகாரமும் இருந்ததால், (மத் 28: 18) அவர் காற்றையும் கடலையும் அடக்கித் தன் சீடர்களைக் காக்கின்றார். இதன்மூலம் இயேசு தன் சீடர்கள்மீது கொண்ட பேரன்பை வெளிப்படுத்துகின்றார்.

நமக்காக இறந்த கிறிஸ்துவுக்காக வாழத் தயாரா?

இயேசு தன் பேரன்பினால் சீடர்களைப் புயலிலிருந்து காப்பாற்றினார் என்று நற்செய்தியில் நாம் வாசித்துத் தியானித்தார். இவ்வாறு இயேசு தம் பேரன்பினால் அன்று தம் சீடர்களையும், இன்று நம்மையும் புயல் போன்ற பலவிதமான ஆபத்துகளிலிருந்து காத்து வருவதால், இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் சொல்வது போல், வாழ்வோர் இனித் தங்களுக்கென வாழாமல், தங்களுக்காக இறந்து உயித்தெழுந்தவருக்காக வாழ வேண்டும்.

நாம் அனைவருக்காகவும் நமக்காக வாழ்ந்து இறந்த கிறிஸ்துவுக்காக வாழவேண்டும் என்றால், அவரிடம் இருந்த அன்பு நம்மிடமும் இருக்கவேண்டும். அவர் எப்படி மக்களை அன்பு செய்தாரோ, அப்படி நாமும் மக்களை அன்பு செய்யவேண்டும். இன்றைக்குப் பலர் தானுண்டு, தன் குடும்பம் உண்டு என்று தன்னலத்தோடு வாழ்வதைக் காண முடிகின்றது. “மனிதன் இறப்பதற்குத் தகுந்த இடம், மனிதனுக்காக மனிதன் இறக்குமிடமே” என்பார் எம். ஜே. பாரி என்ற எழுத்தாளர். எனவே, நாம் நம்மிடம் இருக்கும் தன்னலத்தைத் தவிர்த்து, கிறிஸ்துவுககாகவும், அவரது மக்களுக்காகவும் வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை:

‘உண்மையான அன்பின் வடிவம், ஒருவர் தான் மிகவும் அன்புசெய்யும் ஒருவரின் கையில் அணிகின்ற வைரம் அல்ல. மாறாகச் சிலுவை” என்பார் ஆலிசியா என்ற எழுத்தாளர். ஆம், சிலுவையில் தன்னையே தந்ததன் மூலம், இயேசு கிறிஸ்து இவ்வுலகை எவ்வளவு அன்பு செய்கின்றேன் என்பதை நமக்கு உணர்த்தினார். எனவே, நாமும் இயேசு கிறிஸ்துவின் பேரன்பை உணர்ந்தவர்களாய் அவருக்காகவும் அவரது மக்களுக்காகவும் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 

 


 
Free Blog Widget
Stats Counter
hit counter