maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                    திருவருகைக்காலம் முதல் வாரம் - ஞாயிறு


முதல் வாசகம்


தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 33: 14-16

இதோ, நாள்கள் வருகின்றன, என்கிறார் ஆண்டவர். அப்பொழுது இஸ்ரயேல் வீட்டாருக்கும் யூதா வீட்டாருக்கும் நான் கொடுத்துள்ள வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.

அந்நாள்களில் — அக்காலத்தில் — நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்டுவார். அந்நாள்களில் யூதா விடுதலை பெறும்; எருசலேம் பாதுகாப்புடன் வாழும். “யாவே சித்கேனூ” என்னும் பெயரால் இந்நகர் அழைக்கப்படும்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 25: 4-5ab. 8-9. 10,14 (பல்லவி: 1) Mp3

பல்லவி: ஆண்டவரே, உம்மை நோக்கி, என் உள்ளத்தை உயர்த்துகிறேன்.
4
ஆண்டவரே, உம் பாதைகளை நான் அறியச்செய்தருளும்; உம் வழிகளை எனக்குக் கற்பித்தருளும்.
5ab
உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்குக் கற்பித்தருளும்; ஏனெனில், நீரே என் மீட்பராம் கடவுள்; - பல்லவி

8
ஆண்டவர் நல்லவர்; நேர்மையுள்ளவர்; ஆகையால், அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார்.
9
எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார்; எளியோருக்குத் தமது வழியைக் கற்பிக்கின்றார். - பல்லவி

10
ஆண்டவரது உடன்படிக்கையையும் ஒழுங்குமுறையையும் கடைப்பிடிப்போர்க்கு, அவருடைய பாதைகளெல்லாம் பேரன்பும் உண்மையும் உள்ளனவாய் விளங்கும்.
14
ஆண்டவரின் அன்புறவு அவருக்கு அஞ்சி நடப்போருக்கே உரித்தாகும்; அவர் அவர்களுக்கு தமது உடன்படிக்கையை வெளிப்படுத்துவார்; - பல்லவி

இரண்டாம் வாசகம்

கிறிஸ்துவின் வருகைக்கென்று ஆண்டவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக.

திருத்தூதர் பவுல் தெசலோனிக்கருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 12- 4: 2

சகோதரர் சகோதரிகளே,

உங்கள் மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவதுபோல, நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும் எல்லாருக்காகவும் கொண்டுள்ள அன்பையும் ஆண்டவர் வளர்த்துப் பெருகச் செய்வாராக! இவ்வாறு நம் ஆண்டவர் இயேசு தம்முடைய தூயோர் அனைவரோடும் வரும்பொழுது, நம் தந்தையாம் கடவுள்முன் நீங்கள் குற்றமின்றித் தூய்மையாக இருக்குமாறு அவர் உங்கள் உள்ளங்களை உறுதிப்படுத்துவாராக!

சகோதர சகோதரிகளே! நீங்கள் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களிடம் கற்றுக் கொண்டீர்கள்; அப்படியே வாழ்ந்தும் வருகிறீர்கள். இதில் இன்னும் முன்னேற வேண்டுமென ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் உங்களிடம் இறுதியாகக் கேட்டுக் கொள்கிறோம். ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் நாங்கள் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளை நீங்கள் அறிவீர்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திபா 85: 7

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21: 25-28, 34-36

அக்காலத்தில்

மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “கதிரவனிலும் நிலாவிலும் விண்மீன்களிலும் அடையாளங்கள் தென்படும். மண்ணுலகில் மக்களினங்கள் கடலின் கொந்தளிப்பின் முழக்கத்தினால் கலங்கி, என்ன செய்வதென்று தெரியாது குழப்பம் அடைவார்கள். உலகிற்கு என்ன நேருமோ என எண்ணி மனிதர் அச்சத்தினால் மயக்கமுறுவர். ஏனெனில், வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதை அவர்கள் காண்பார்கள். இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது.”

மேலும் இயேசு, “உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தாலும் இவ்வுலக வாழ்க்கைக்குரிய கவலையினாலும் மந்தம் அடையாதவாறும் அந்நாள் திடீரென வந்து ஒரு கண்ணியைப்போல் உங்களைச் சிக்க வைக்காதவாறும் எச்சரிக்கையாய் இருங்கள். மண்ணுலகு எங்கும் குடியிருக்கும் எல்லார்மீதும் அந்நாள் வந்தே தீரும். ஆகையால் நிகழப்போகும் அனைத்திலிருந்தும் தப்புவதற்கும் மானிடமகன் முன்னிலையில் நிற்க வல்லவராவதற்கும் எப்பொழுதும் விழிப்பாயிருந்து மன்றாடுங்கள்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு


I எரேமியா 33: 14-16
II 1 தெசலோனிக்கர் 3: 12-4: 2
III லூக்கா 21: 25-28, 34-36

“குடிவெறியினால் மந்தமடைய வேண்டாம்”

நிகழ்வு

முரடர்கள் சிலர் இளைஞன் ஒருவனை ஓர் அறையில் அடைத்து வைத்தனர். அந்த அறையில் ஓர் அழகிய பெண் இருந்தாள். அவளுடைய கையில் அவளது குழந்தை இருந்தது. பக்கத்தில் ஒரு மதுக்குப்பி இருந்தது.

இளைஞனை அறையில் அடைத்துவைத்த முரடர்கள் அவனிடம், “இங்கிருந்து நாங்கள் உன்னை விடுவிக்கவேண்டும் என்றில், இங்குள்ள மதுக்குப்பியிலிருந்து மதுவைப் பருக வேண்டும் அல்லது குழந்தையைச் சுவரில் அடித்துக் கொல்லவேண்டும். அதுவும் இல்லையென்றால், பெண்ணை மானபங்கப்படுத்த வேண்டும். இந்த மூன்றில் ஏதாவது ஒன்றை நீ செய்யாவிட்டால், இங்கிருந்து நாங்கள் உன்னை விடுவிக்க முடியாது” கையில் துப்பாக்கியை வைத்து மிரட்டினார்கள்.

இளைஞன் யோசிக்கத் தொடங்கினான். ‘இருப்பதிலேயே மது அருந்துவதுதான், குறைவான பாதிப்பை ஏற்படுத்தும், அதனால் அதைக் குடித்துவிட்டு, இங்கிருந்து வெளியேறிவிடுவோம்’ என்று முடிவுசெய்து கொண்டு, அவன் மதுக்குப்பியை எடுத்து, மதுவை அருந்தி முடித்தான். அவன் மதுவை அருந்தியதும், போதை தலைக்கேறியது. அதனால் பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சி செய்தான். அதற்கு அப்பெண்ணின் கையில் இருந்த குழந்தை தடையாய் இருந்தது. அதை அவன் சுவரில் தூக்கி அடித்துக்கொன்றான். பின்னர் அவன் அந்தப் பெண்ணையும் மானபங்கப்படுத்தினான். எல்லாம் நடந்தேறிய பின், ‘ஒரு தவற்றிற்கு மூன்று தவறுகளைச் செய்துவிட்ட பெரும் பாவியாகிவிட்டேனே நான்!’ என்று சொல்லி மனம் நொந்து அழுதான் அவன்.

மது ஒருவரைத் தொடர்ந்து தவறு செய்யத்தூண்டும் என்பதற்காகச் சொல்லப்படும் இந்த நிகழ்வு நமது கவனத்திற்குரியது. திருவருகைக்காலத்தின் முதல் ஞாயிறன இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நம் உள்ளம் குடிவெறி, இவ்வுலக வாழ்வுக்குரிய கவலை போற்றவற்றால் மந்தமடையாதவாறு பார்த்துக் கொள்ளவும், வரப்போகிற நீதியின் அரசருக்காக நம்மையே தயாரிக்கவும் அழைப்புத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

குடிவெறியினால் மந்தமடைந்து கிடைக்கும் சமூகம்

ஒருகாலத்தில் பண்டிகைகள், விழாக்கள் என்று எப்போதாவது குடித்துக் கொண்டிருந்தவர்களை, வயது வித்தியாசமில்லாமல் எப்போதும் குடிக்க வைத்த பெருமை இந்த அரசுகளைச் சாரும். இதில் எந்தவொரு மாற்றுக்கருத்தும் கிடையாது. மது விற்பனையினால் நாட்டிற்கு வருமானம் சேர்கின்றது என்று சொல்லும் இந்த அரசுகள், அது வருமானம் அல்ல, நாட்டின் அவமானம் என்பதை உணரவேண்டும்.

மது அல்லது குடியினால் வரும் தீமைகளைக் குறித்துத் தொடக்கம் முதலே பலரும் பல்வேறு கருத்துக்களைக் கூறியிருக்கின்றார்கள். “மது அருந்துதல் ஒரு மனிதனின் பலவீனமாகக் கருதப்படும். அத்தகைய பலவீனத்தைக் கொண்ட மன்னன் எளிதில் வீழ்த்தப்படுவான்” என்கிறார் திருவள்ளுவர். “கடலில் மூழ்கியவர்களை விட மதுவில் மூழ்கியவர்கள் மிகுதி” என்கிறார் தாமஸ் ஃபுல்லர். “சாத்தானால் வீழ்த்த முடியாத ஒருவனை மது வீழ்த்திவிடும்” என்கிறார் லியோ டால்ஸ்டாய். இப்படிப் பலரும் மதுவினால் ஏற்படும் தீமைகளைப் பற்றிச் சொல்லியிருந்தாலும், நாளுக்கு நாள் மதுவிற்கு அடிமையாகி வாழ்வைச் சீரழிப்போரின் எண்ணிக்கை மிகுதியாவதுதான் வேதனை கலந்த உண்மை.

இத்தகைய பின்னணியில் இயேசு இன்றைய நற்செய்தியில் சொல்லக்கூடிய, உங்கள் உள்ளங்கள் குடிவெறி, களியாட்டத்தால் மந்தமடையாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள் என்று சொல்லக்கூடிய வார்த்தைகள் நமது கவனத்திற்குரியவை. ஆண்டவர் இயேசு ஏன் இவ்வாறு சொல்கின்றார் என்று நாம் தொடர்ந்து சிந்திப்போம்.

வரப்போகிறவர் நீதியின் அரசர்

ஒருவேளை நம்முடைய உள்ளம் குடியினாலும் களியாட்டத்தினாலும் மந்தமாகிவிட்டால் நம்மால் வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியாது. அப்பொழுது, ஒரு கண்ணியைப் போன்று வரும் ஆண்டவரின் நாளில் யாவரும் வகையாய்ச் சிக்கிக் கொள்வோம். நோவாவின் காலத்தில் வாழ்ந்தவர்கள் இப்படித்தான் உலகப் போக்கிலான வாழ்க்கை வாழ்ந்ததால் வெள்ளப் பெருகிக்கினால் அழிந்தார்கள். ஆகவே, நம்முடைய உள்ளம் குடிவெறியினால் மந்தமடையாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

இயேசு இவ்வாறு சொல்வதற்கு மற்றொரு காரணம், ஆண்டவரின் நாளை அடுத்து வருகின்ற மானிடமகன் நீதியின் அரசராய், நேர்மையின் அரசராய் இருப்பார் என்பார் என்பதால்தான். இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், “அந்நாள்களில் நான் தாவீதிலிருந்து நீதியின் தளிர் ஒன்று முளைக்கச் செய்வேன். அவர் நாட்டில் நீதியையும் நேர்மையும் நிலைநாட்டுவார்” என்கிறார் ஆண்டவர். இறைவாக்கினர் எரேமியா நூலில் இடம்பெறும் இவ்வார்த்தைகள் இயேசுவின் முதலாம் வருகையை விடவும், அவரது இரண்டாம் வருகைக்கே மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று திருவிவிலிய அறிஞர்கள் கூறுவார்கள். ஆதலால், இயேசு கிறிஸ்து நீதியின் அரசராய், நேர்மையின் அரசராய் வருகின்றபோது, நமது உள்ளத்தைக் குடிவேறியினாலும் களியாட்டத்தினாலும் மந்தமடையாதவாறு பார்த்துக் கொள்வதே நல்லது.

மன்றாடினால் மகிழ்வு வரும்

இயேசு கிறிஸ்து நீதியின் அரசராய், நேர்மையின் அரசராய் வருகின்றார் எனில், அவர்முன் குற்றமற்றவர்களாய் நாம் இருக்கவேண்டும்; அவருக்கு உகந்தவர்களாய் நாம் வாழவேண்டும். இது குறித்துத் தெசலோனிக்கர்களிடம் பேசுகின்ற புனித பவுல், “கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழும் முறையை எங்களிடம் கற்றுக் கொண்டீர்கள்” என்கின்றார். அப்படியெனில், பவுலும் அவரோடு இருந்தவர்களும் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழ்வது பற்றித் தெசலோனிக்கர்களிடம் போதித்து மட்டுமல்லாமல், அதை அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இவ்வாறு பவுலும், அவரோடு இருந்தவர்களும் தங்களுடைய வார்த்தையால் மட்டுமல்ல, தங்களுடைய செயலாலும் தெசலோனிக்க மக்களுக்குக் கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழ்வது பற்றிக் கற்றுக் கொடுத்தது, நம்மையும் அவ்வாறு வாழ அழைக்கின்றது.

நற்செய்தியில் இயேசு நீதியின் அரசருடைய வருகையை எப்படி எதிர்கொள்வது என்பதற்கான ஒருவழியைச் சொல்கின்றார். அதுதான் விழிப்பாய் இருந்து மன்றாடுவது. இறைவனிடம் நாம் மன்றாடிவிடலாம்; ஆனால், விழிப்பாய் இருந்து மன்றாடுவது எப்படி என்ற கேள்வி நமக்கு எழும். விழிப்பாய் இருந்து மன்றாடுவது எனில், ஒருவர் எப்போதும் தன்னை இறைவேண்டலுக்கு, இறைவனைப் பற்றிய சிந்தனைக்கு உட்படுத்திக்கொள்வது என்று சொல்லலாம். எப்பொழுது ஒருவர் இறைச் சிந்தனைக்குத் தன்னை உட்படுத்திக் கொள்கிறாரோ, அப்பொழுது அவர் குடிவெறிக்கும் களியாட்டத்திற்கும், இன்ன பிற தீமைகளுக்கும் தன்னை உட்படுத்தி, தனது உள்ளத்தை மந்தமடைய விடமாட்டார். அதனால் அவர் நீதியின் அரசர் வருகின்றபோது, அவரை தூய்மையோடு எதிர்கொள்வார் என்பது உறுதி.

எனவே, நாம் இறைச்சிந்தனைக்கும் இறைவேண்டலுக்கும் எப்பொழுதும் நம்மை உட்படுத்தி, கடவுளுக்கு உகந்தவர்களாய் வாழ்ந்து, வரப்போகிற நீதியின் அரசரைத் துணிவோடு எதிர்கொள்வோம்.

சிந்தனை

‘மது ஆசையைத் தூண்டுகிறது, செயல்பாட்டைத் துண்டிக்கிறது’ என்பார் ஷேக்ஸ்பியர். ஆகையால், நமது ஆசையைத் தூண்டி, செயல்பாட்டைத் துண்டிக்கின்ற குடிவெறிக்கும் இவ்வுலக வாழ்விற்குரிய கவலைக்கும் அடிமையாகிவிடாமல், நீதியின் அரசராம் ஆண்டவர் இயேசுவில் ஆழமான பற்று வைத்து, அவருக்கு உகந்தவர்களாய் வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 

 


 
Free Blog Widget
Stats Counter
hit counter