maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                                                தூய ஆவி பெருவிழா


தூய ஆவி ஞாயிறுக்குப் பின் வரும் திங்கள் கிழமையிலும், இன்னும் செவ்வாய்க் கிழமையிலும் கூட, எங்கெல்லாம் இறைமக்கள் திரளாகத் திருப்பலிக்கு வரவேண்டுமோ, அல்லது வருவது வழக்கமோ, அங்கெல்லாம் தூய ஆவி விழாத் திருப்பலி வாசகங்களை மீண்டும் பயன்படுத்தலாம்.

அல்லது உறுதிப்பூசுதல் அளிக்கும் சடங்கு முறையிலுள்ள வாசகங்களைப் பயன்படுத்தலாம்.

முதல் வாசகம்


தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் பேசத் தொடங்கினார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 1-11

பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவதுபோன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள்.

அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூத மக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர். எல்லாரும் மலைத்துப்போய், “இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பது எப்படி?” என வியந்தனர். “பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும் பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும், யூதம் தழுவியோரும், கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே!” என்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 104: 1ab,24ac. 29bc-30. 31,34 (பல்லவி: 30) Mp3

பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

அல்லது: அல்லேலூயா.
1ab
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்!
24ac
ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. - பல்லவி

29bc
நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும்.
30
உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். - பல்லவி

31
ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக!
34
என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். - பல்லவி

இரண்டாம் வாசகம்

தூய ஆவியின் கனிகள்.

திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 5: 16-25

சகோதரர் சகோதரிகளே,

நான் சொல்கிறேன்: தூய ஆவியின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள். ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால் நீங்கள் செய்ய விரும்புவதை உங்களால் செய்ய முடிவதில்லை. நீங்கள் தூய ஆவியால் வழிநடத்தப்பட்டால், திருச்சட்டத்திற்கு உட்பட்டவர்களாய் இருக்கமாட்டீர்கள்.

ஊனியல்பின் செயல்கள் யாவருக்கும் தெளிவாய்த் தெரியும். அவை பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் முதலியவை ஆகும். இத்தகையவற்றில் ஈடுபடுவோர் இறையாட்சியை உரிமைப்பேறாக அடைவதில்லை என்று நான் ஏற்கெனவே சொன்னேன். அதையே இப்போதும் மீண்டும் சொல்கிறேன்.

ஆனால் தூய ஆவியின் கனியோ அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும். இவையுள்ள இடத்தில் திருச்சட்டத்திற்கு இடமில்லை. கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்கள் தங்கள் ஊனியல்பை அதன் இழிவுணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்துவிட்டார்கள். தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

தொடர்பாடல்

தூய ஆவியே, எழுந்தருள்வீர்
வானினின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்,
இதய ஒளியே, வந்தருள்வீர்.

உன்னத ஆறுதலானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தண்மையும் தருபவரே.

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதலானவரே.

உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.

மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வறட்சியுற்றதை நனைத்திடுவீர்,
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப்போனதை ஆண்டருள்வீர்.

இறைவா உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

தூய ஆவியார் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 15: 26-27; 16: 12-15

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: “தந்தையிடமிருந்து நான் உங்களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில் நீங்கள் தொடக்கமுதல் என்னோடு இருந்து வருகிறீர்கள்.

நான் உங்களிடம் சொல்லவேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப் போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவேதான் ‘அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்’ என்றேன்.”

ஆண்டவரின் அருள்வாக்கு.

 
 


I திருத்தூதர் பணிகள் 2: 1-11
II கலாத்தியர் 5: 16-25
III யோவான் 15: 26-27; 16: 12-15

தூய ஆவியாராம் துனையாளர்


நிகழ்வு

ஆப்பிரிக்க மக்கள் நடுவில் அருள்பணியாளர் ஒருவர் மறைப்பணி செய்து வந்தார். இவர் தனக்கு நேரம் கிடைக்கின்றபொழுதெல்லாம் திருவிவிலியத்தை அந்த மக்கள் பேசும் மொழியில் மொழிபெயர்த்து வந்தார். இவ்வாறு இவர் திருவிவிலியத்தை மொழிபெயர்க்கும்போது இவரால் ‘துணையாளர்’ என்ற சொல்லுக்கு அவர்கள் பேசும் மொழியில் சரியான சொல்லைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இது குறித்து இவர் தீர ஆய்வு செய்துகொண்டிருக்கும்பொழுது, ஒருநாள் முரடன் ஒருவன் சாதாரண பெண்மணி ஒருவரைக் கடுமையாகத் தாக்கினான் என்பதற்காக வலிமையான ஒருவர் அந்த முரடனைக் கட்டி வைத்து அடித்தார். அப்பொழுது மக்களெல்லாம், ‘செங்கா–முக்வசி’, செங்கா–முக்வசி’ (Nsenga-Mukwashi) என்று ஒரே குரலில் ஆர்ப்பரித்தார். இவருக்கு ‘செங்கா முக்வசி’ என்ற சொல்லின் பொருள் புரியவில்லை. உடனே இவர் அருகில் இருந்த ஒரு பெரியவரிடம், “இச்சொல்லின் பொருள் என்ன?” என்று கேட்டதற்கு அவர், “ஒருவருக்கு அதிலும் குறிப்பாகப் பாதிக்கப்பட்ட ஒருவருக்குத் துணையாக இருப்பவருக்குப் பெயர்தான் செங்கா – முக்வசி” என்றார்.

இதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த அருள்பணியாளர், ‘இத்தனை நாள்களும் நாம் தேடிக்கொண்டிருந்த சொல் கிடைத்துவிட்டது’ என்று, “உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு ‘செங்கா – முக்வசி’யை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்” (யோவா 14: 26) என்று மொழிபெயர்த்தார்.

ஆம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இவ்வுலகத்தை விட்டுப் போவதற்கு முன்பாகத் தன் சீடர்களிடம் தூய ஆவியராம் ‘செங்கா-முக்வசியை’ அதாவது துணையாளரை அனுப்புவதாகச் சொன்னார். அவர் சொன்னதுபோன்றே அவர்களிடம் அவர் தூய ஆவியாராம் துணையாளரை அனுப்புகின்றார். அதைத்தான் இன்று தூயஆவியார் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றோம். இப்பெருவிழா நமக்கு உணர்த்துகின்ற செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.

சான்று பகரச் செய்வார்

பாஸ்காப் பெருவிழாவிற்கு அடுத்து வருகின்ற ஐம்பதாம் நாளில் கொண்டாடப்படுகின்ற பெருவிழாதான் பெந்தக்கோஸ்துப் பெருவிழா. அறுவடைப் பெருவிழா என அழைக்கப்படும் இப்பெருவிழாவிற்கு எருசலேமைச் சுற்றி இருபது மைல்கள் தொலைவில் உள்ள யூதர்கள் கட்டாயம் வருவார்கள். திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் பதினாறு நாடுகளைச் சார்ந்த யூதர்கள் எருசலேமில் கூடியிருக்கின்றார்கள். இயேசுவின் சீடர்களும் அங்கு ஒன்றாகக் கூடியிருக்கின்றார்கள். அப்பொழுது பிளவுற்ற நாவுகள் இயேசுவின் சீடர்கள்மீது இறங்கி வர, அவர்கள் தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட்டு, வெவ்வேறு மொழிகளில் பேசத் தொடங்குகிறார்கள். இதில் வியப்பு என்னவெனில் இதை அங்குக் கூடியிருந்த மக்கள் யாவரும் திருத்தூதர்கள் பேசியதைத் தத்தம் மொழிகளில் கேட்டார்கள் என்பதுதான்.

பழைய ஏற்பாட்டில் மக்கள் தங்கள் பெயரை நிலைநாட்டுவதற்காகக் கோபுரம் கட்டியபொழுது, ஆண்டவராகிய கடவுள் அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்கியதாக நாம் வாசிக்கின்றோம் (தொநூ 11: 7); ஆனால், பெந்தக்கோஸ்து நாளில் திருத்தூதர்கள பேசியதைத் திரண்டிருந்த மக்கள் யாவரும் தத்தம் மொழிகளில் கேட்கின்றார்கள். இதுவே தூய ஆவியாரின் வருகைக்கு மிகப்பெரிய சான்றாக இருக்கின்றது. ஆண்டவராகிய இயேசு தன் இறுதி இராவுணவின்போது சீடர்களிடம், “தூய ஆவியார் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள்” என்று கூறியிருப்பார். இதை நாம் இன்றைய நற்செய்தி வாசகத்தில் வாசிக்கின்றோம். பெந்தக்கோஸ்து நாளில் திருத்தூதர்கள் அதிலும் குறிப்பாகப் பேதுரு இயேசு கிறிஸ்துவைக் குறித்துச் சான்று பகர்வதும், அதன் மூலம் ஒரே நாளில் மூவாயிரம் பேர் ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கை கொள்வதும் ஆண்டவரின் வார்த்தைகள் உண்மை என்பதை நிரூபித்துக் காட்டுகின்றன.

முழு உண்மையை நோக்கி வழிநடத்துவார்

“தூய ஆவியார் வரும்போது..... நீங்களும் சான்று பகர்வீர்கள்” என்று சொன்ன இயேசு, தொடர்ந்து தன் சீடர்களிடம், “அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார்” என்கின்றார். நாம் வாழும் இவ்வுலகில் நம்மைத் தவறாக வழிநடத்துவதற்குப் பலர் இருக்கின்றார்கள். எத்தனையோ பேர் தவறான நண்பர்களின் வழிநடத்துதலால் சீரழிந்த வரலாறை நாம் அறிவோம். இத்தகைய சூழ்நிலையில் தூய ஆவியார் நம்மை முழு உண்மையை நோக்கி வழிநடத்துவார் என்பது உண்மையில் நாம் பெறும் மிகப்பெரிய பேறு. தூய ஆவியார் நம்மை முழு உண்மையை நோக்கி வழி நடத்துவார் எனில், அவரே உண்மையாக இருக்கின்றார் (1 யோவா 5: 6) என்பதுதான் கூடுதல் சிறப்பாக இருக்கின்றது.

அமெரிக்காவைச் சார்ந்த மிகப்பெரிய கண்டுபிடிப்பாளர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் (George Washington Carver 1864-1943) முன்னூறுக்கும் மேற்பட்ட அரிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துள்ள இவர், சொல்லக்கூடிய ஒரு முக்கியமான செய்தி, “அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் நான் எழுந்து, தூய ஆவியாரிடம் வேண்டுகின்றபொழுது, அவர் எனக்கு என்ன செய்யவேண்டும் என்பதை வெளிப்படுத்துவார். அப்படித்தான் நான் முன்னூறுக்கு மேற்பட்ட கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்தேன்” என்பதாகும்.

ஆம், தூய ஆவியாரிடம் நாம் வேண்டுகின்றபொழுது அவர் நம்மை முழு உண்மையை நோக்கி வழிநடத்துவார் என்பது உறுதி.

தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்வோம்

தூய ஆவியார் வரும்போது இயேசுவைப் பற்றிச் சான்று பகர்வோம்; தூய ஆவியார் நம்மை முழு உண்மையை நோக்கி வழிநடத்துவார் என்ற நம்பிக்கைச் செய்திகளை இன்று நாம் கொண்டாடும் தூய ஆவியார் பெருவிழா நமக்கு எடுத்துக் கூறுகின்ற அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழவேண்டும் என்ற அழைப்பையும் இப்பெருவிழா நமக்குத் தருகின்றது.

புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில், “தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழுங்கள். அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்ற மாட்டீர்கள்” என்கிறார். நாம் ஏன் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழவேண்டும் என்பதற்குப் புனித பவுல் இரண்டு முதன்மையான காரணங்களைக் குறிப்பிடுகின்றார். ஒன்று, நாம் கடவுளின் ஆவியார் குடிகொண்டிருக்கும் கோயில் (1 கொரி 3: 16), இரண்டு, கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர்களாகிய நாம் நமது ஊனியல்பைச் சிலுவையில் அறைந்துவிட்டோம். இத்தகைய காரணங்களால் நாம் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழக் கடைமைப்பட்டிருக்கின்றோம்.

இன்று பலர் தங்களுடைய ஊனியல்புக்கு ஏற்ப வாழும் அவலநிலை தொடர்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் ஒவ்வொருவரும் தூய ஆவியார் தங்கும் கோயில் என்ற உண்மையை உணர்ந்து, தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு பெற வாழ்ந்திட்டால், அதைவிடச் சிறப்பான செயல் வேறு எதுவும் இருக்க முடியாது. நாம் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கு ஏற்ப வாழ்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

‘கிறிஸ்தவ சமூகத்தில் அமைதியைக் கொண்டுவரும் தூய ஆவியார் அதன் உறுப்பினர்கள் தாழ்ச்சியுள்ளவர்களாக, பிறரைப் பற்றித் தவறாகப் பேசாதவர்களாக இருப்பதற்குக் கற்றுத் தருகிறார்’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, நம் நடுவில் அமைதியைக் கொண்டுவரும் தூய ஆவியாரை ஏற்றுக்கொண்டவர்களாய் அவரது தூண்டுதலுக்கேற்ப வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 

 


 
Free Blog Widget
Stats Counter
hit counter