maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                                          இயேசுவின் திருவுடல் திருஇரத்தம்

முதல் வாசகம்

ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 24: 3-8

அக்காலத்தில்,

மோசே மக்களிடம் வந்து ஆண்டவர் சொன்ன அனைத்து வார்த்தைகளையும் விதிமுறைகளையும் அறிவித்தார். மக்கள் அனைவரும் ஒரே குரலாக; “ஆண்டவர் கூறிய வார்த்தைகள் அனைத்தையும் நாங்கள் செயல்படுத்துவோம்” என்று விடையளித்தனர்.

மோசே ஆண்டவரின் வாக்குகள் அனைத்தையும் எழுதி வைத்தார். அதிகாலையில் அவர் எழுந்து மலையடிவாரத்தில் ஒரு பலிபீடத்தையும், இஸ்ரயேலின் பன்னிரண்டு குலங்களுக்காகப் பன்னிரண்டு தூண்களையும் எழுப்பினார். அவர் இஸ்ரயேல் மக்களின் இளைஞர்களை அனுப்பி வைக்க, அவர்களும் ஆண்டவருக்கு எரிபலிகள் செலுத்தினர். மாடுகளை நல்லுறவுப் பலிகளாகவும் ஆண்டவருக்குப் பலியிட்டனர்.

மோசே இரத்தத்தில் ஒரு பாதியை எடுத்துக் கலங்களில் விட்டு வைத்தார். மறு பாதியைப் பலிபீடத்தின் மேல் தெளித்தார். அவர் உடன்படிக்கையின் ஏட்டைஎடுத்து மக்கள் காதுகளில் கேட்கும்படி வாசித்தார். அவர்கள், “ஆண்டவர் கூறிய அனைத்தையும் நாங்கள் செயல்படுத்திக் கீழ்ப்படிந்திருப்போம்” என்றனர்.

அப்போது மோசே இரத்தத்தை எடுத்து மக்கள்மேல் தெளித்து, “இவ்வனைத்து வார்த்தைக்குமிணங்க, ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம் இதோ” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 116: 12-13. 15-16. 17-18 (பல்லவி: 13) Mp3

பல்லவி: மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவர் பெயரைத் தொழுதிடுவேன்.

12
ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்?
13
மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். - பல்லவி

 
15
ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது.
16
ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். - பல்லவி

 
17
நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்;
18
இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். - பல்லவி

 

இரண்டாம் வாசகம்

கிறிஸ்துவின் இரத்தம் நம் மனச்சான்றை தூய்மைப்படுத்துகிறது!

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 9: 11-15

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்து தலைமைக் குருவாக வந்துள்ளார். அவர் அருளும் நலன்கள் இப்போது நமக்குக் கிடைத்துள்ளன. அவர் திருப்பணி செய்யும் கூடாரம் முன்னதை விட மேலானது, நிறைவு மிக்கது. அது மனிதர் கையால் அமைக்கப்பட்டது அல்ல; அதாவது, படைக்கப்பட்ட இவ்வுலகைச் சார்ந்தது அல்ல. அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தம் அல்ல, அவரது சொந்த இரத்தமே. அவர் ஒரே ஒருமுறை தூயகத்திற்குள் சென்று எக்காலத்திற்குமென அதைப் படைத்து நமக்கு என்றுமுள்ள மீட்பு கிடைக்கும்படி செய்தார்.

வெள்ளாட்டுக்கிடாய்கள், காளைகள் இவற்றின் இரத்தமும் கிடாரியின் சாம்பலும் தீட்டுப்பட்டவர்கள்மீது தெளிக்கப்படும்போது, சடங்கு முறைப்படி அவர்கள் தூய்மை பெறுகிறார்கள். ஆனால் கிறிஸ்துவின் இரத்தம், வாழும் கடவுளுக்கு நாம் வழிபாடு செய்யுமாறு, சாவுக்கு அழைத்துச் செல்லும் செயல்களிலிருந்து நம் மனச்சான்றை எத்துணை மிகுதியாய்த் தூய்மைப்படுத்துகிறது!

ஏனெனில் என்றுமுள்ள தூய ஆவியினால் தம்மைத்தாமே கடவுளுக்கு மாசற்ற பலியாகக் கொடுத்தவர் அவரே. இவ்வாறு அவர் புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராயிருக்கிறார். கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் அவரால் வாக்களிக்கப்பட்ட என்றும் நிலைக்கும் உரிமைப்பேற்றைப் பெறுவதற்கென்று இந்த உடன்படிக்கை உண்டானது. இது ஒரு சாவின் மூலம் ஏற்படுத்தப்பட்டது. இந்தச் சாவு முந்திய உடன்படிக்கையை மீறிச் செய்த குற்றங்களிலிருந்து மீட்பளிக்கிறது.

ஆண்டவரின் அருள்வாக்கு.
 

தொடர்பாடல்

இத்தொடர் பாடலை விருப்பம் போல் பயன்படுத்தலாம்: இதை முழுமையாக அல்லது குறுகிய பாடமாக “வானவர் உணவிதோ” என்ற (21ஆம்) அடியிலிருந்தும் சொல்லலாம் அல்லது பாடலாம்.
  1. சீயோனே, உன் மீட்பரைப் புகழ்வாய்,
    கீதமும் பாடலும் இசைத்தே உந்தன்
    ஆயரை, தலைவரைப் புகழ்வாயே.
  2. எல்லாப் புகழும் கடந்தவர் அவரே;
    இயலாது உன்னால் அவரைப் புகழ,
    இயன்ற மட்டும் துணிந்திடுவாயே.
  3. உயிர்மிகு அப்பம் உயிர்தரும் உணவாம்
    போற்றுதற்குரிய இப்பேருண்மை
    இன்று சிந்தனைக்கு ஏற்ற பொருளே.
  4. தூய விருந்தின் பந்தியில் அன்று
    பன்னிரு சோதரர் கூட்ட மதற்கே
    கிடைத்த உணவிது; ஐயமே யில்லை.
  5. ஆர்ப்பரிப் புடனே இனிமையும் கலந்த
    நிறைபுகழ்க் கீதம் ஒலிப்பதோ டன்றி
    மகிழ்வும் மனதில் பெருகிடல் தகுமே.
  6. பெருஞ்சிறப்பான திருவிழா இன்றே
    இத்திரு விருந்தை முதன் முதலாக
    நிறுவிய நாளை நினைவுகூர்கின்றோம்.
  7. புதிய பேரரசரின் இத்திருப் பந்தியில்
    புதிய ஏற்பாட்டின் புதுத்தனிப் பாஸ்கா
    பழைய பாஸ்காவை முடிவுறச் செய்யும்.
  8. புதுமை பழமையைப் போக்குதல் காணீர்,
    உண்மை நிழலை ஓட்டுதல் காணீர்,
    ஒளியோ இரவை ஒழித்தல் காணீர்.
  9. திருவிருந்ததனில் நிறைவேற்றியதைத்
    தம் நினைவாகச் சீடரும் செய்யக்
    கட்டளை தந்தார் கிறிஸ்து பெருமான்.
  10. திருக் கட்டளையால் அறிவுரை பெற்று
    அப்பமும் இரசமும் மீட்புக்குரிய
    பலிப் பொருளாக அர்ச்சிக்கின்றோம்.
  11. அப்பம் மாறி அவர் ஊன் ஆவதும்,
    இரசமது மாறி இரத்தமாவதும்
    கிறிஸ்துவர்க் கருளிய உண்மையாமே.
  12. புலனையும் அறிவையும் முற்றும் கடந்து,
    இயற்கை முறைமைக் கப்பால்,
    உள்ளத்தை உறுதியோ டேற்கும் உயிர்விசு வாசம்.
  13. அப்பமும் இரசமும் குணங்களில் வேறாய்
    அவற்றின் தோற்றம் மட்டுமே யிருக்க
    அற்புத உட்பொருள் மறைவாய் உள்ளதே.
  14. ஊனே உணவு, இரத்தமே பானம்
    இருவித குணங்கள் ஒவ்வொன் றுள்ளும்
    கிறிஸ்து முழுவதும் உண்டெனக் கொள்வீர்.
  15. உண்பவர் அவரைப் பிய்ப்பதுமில்லை.
    உடைப்பதுமில்லை, பிரிப்பதுமில்லை.
    அவரை முழுதாய் உண்கின் றனரே.
  16. உண்பவர் ஒருவரோ, ஆயிரம் பேரோ,
    ஒருவர் உண்பதையே அனைவரும் உண்பர்;
    உண்பதால் என்றுமே தீர்வதுமில்லை.
  17. நல்லவர் உண்பர், தீயரும் உண்பர்
    அதனால் அவர் பெறும் பயன் வெவ்வேறாம்
    முன்னவர் வாழ்வார், பின்னவர் அழிவார்.
  18. நல்லோர் வாழ்வார், தீயோர் அழிவார்:
    உணவொன்றாயினும் எத்துணை வேறாம்
    பயன்விளைத் திடுமெனப் பகுத்துணர் வாயே.
  19. அப்ப மதனைப் பிட்ட பின்னரும்
    முழுமையில் எதுவோ அதுவே பகுதியில்
    உளதாம், அறிந்திடு, ஐயமே வேண்டா.
  20. உட்பொருள் பிளவு படுவதே யில்லை;
    குணத்தில் மட்டும் பிடப்படுமே
    அவரது நிலையும் உருவும் குறையா.
  21. வானவர் உணவிதோ வழிநடப் போர்க்கும்
    உணவா யிற்றே; மக்களின் உணவை
    நாய்கட் கெறிதல் நலமா காதே.
  22. ஈசாக் பலியிலும் பாஸ்கா மறியிலும்
    நம் முன்னோர்க்குத் தந்த மன்னாவிலும்
    இந்தப் பலியின் முன்குறி காண்பீர்.
  23. நல்ல ஆயனே, உண்மை உணவே,
    யேசுவே, எம்மேல் இரங்கிடு வீரே,
    எமக்குநல் அமுதே ஊட்டிடுவீரே.
  24. நும்திரு மந்தை எம்மைக் காத்து,
    நித்திய வாழ்வினர் வாழும் நாட்டில்
    நலன்கள் அனைத்தும் காணச் செய்வீர்.
  25. அனைத்தும் அறிவோய், அனைத்தும் வல்லோய்,
    மாந்தர்க் கிங்கு உணவினைத் தருவோய்,
    அங்கும் பந்தியில் அமரச் செய்வாய்.
  26. அமர்ந்து நும்முடன் பங்கினைக் கொள்ளவும்,
    வான்திருக் கூட்டத்தின் நட்பினராகவும், அருள்வீர்,
    ஆமென், அல்லேலூயா.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

யோவா 6: 51-52

அல்லேலூயா, அல்லேலூயா! விண்ணகத்திலிருந்து இறங்கி வந்த வாழ்வு தரும் உணவு நானே. இந்த உணவை எவராவது உண்டால் அவர் என்றுமே வாழ்வார், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இது எனது உடல்; இது எனது உடன்படிக்கையின் இரத்தம்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 12-16, 22-26

புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர், “நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.

அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்; “நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில் தண்ணீர் சுமந்துகொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார். அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்குச் செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம்,  ‘நான் என் சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?’ என்று போதகர் கேட்கச் சொன்னார்” எனக் கூறுங்கள். அவர் மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்.” சீடர்கள் சென்று, நகரை அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.

அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து, கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, “இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்” என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம், “இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல் இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக் குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

அவர்கள் புகழ்ப்பாடல் பாடிவிட்டு ஒலிவமலைக்குச் சென்றார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 

 

I விடுதலைப் பயணம் 24: 3-8
II எபிரேயர் 9: 11-15
III மாற்கு 14: 12-16, 22-26

“கிறிஸ்துவ வாழ்வின் ஊற்றும் உச்சமுமான நற்கருணை”


நிகழ்வு

இங்கிலாந்தைச் சார்ந்த பிரபல புகைப்படக் கலைஞர் மால்கம் மக்கரிட்ஜ். நாத்திகரான இவருக்கு ஒருநாள் ஒரு வினோதமான ஆசை வந்தது. கொல்கொத்தா நகர் அன்னைத் தெரசாவின் ஒருநாள் வாழ்வைப் படம்பிடித்து, அதைக் குரும்படமாக வெளியிடுவதே அந்த ஆசை. இது குறித்து இவர் தெரசாவிடம் கேட்டதற்கு, அவர் முழுமனச் சம்மதம் தெரிவித்தார்.

இதற்குப் பின் ஒருநாள் காலையில் மால்கம் மக்கரிட்ஜ் புகைப்படக் கருவிகளுடன் தெரசா இறைவழிபாடு செய்யும் கோயிலுக்கு முன்பு நின்றிருந்தார். தெரசா கோயிலுக்குள் நுழைந்ததும், பளீர் வெளிச்சத்துடன் அவரைப் புகைப்படம் எடுத்தார். இத்தகைய வெளிச்சம் தான் வழிபாடு செய்தவதற்கு இடையூறாக இருப்பதை உணர்ந்த தெரசா இவரிடம், “வழிபாடு செய்வதற்கு பளீர் வெளிச்சம் தடையாக இருக்கின்றது. அதைக் குறைத்துக் கொள்ளலாமா?” என்று சொல்ல, இவர் “வெளிச்சத்தைக் குறைத்துக் கொண்டால், உங்களுடைய முகம் தெளிவாகத் தெரியாதே!” என்றார். உடனே தெரசா, “என்னுடைய முகம் தெளிவாகத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. பளீர் வெளிச்சம் நான் வழிபாடு செய்வதற்குத் தொந்தரவு இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றார்.

பின்னர் இவர் தெரசா காலைவழிபாடு செய்வதையும் திருப்பலியில் கலந்து கொள்வதையும், தியானம் செய்வதையும் குறைந்த வெளிச்சத்தில் தன் புகைப்படக் கருவியில் பதிவு செய்தார். தெரசா காலை வழிபாட்டை முடித்துக்கொண்டு, மற்ற பணிகளை மேற்கொள்ளும்பொழுது இவர் பளீர் வெளிச்சத்தில் எல்லாவற்றையும் படம்பிடித்து முடித்தார். மாலை வேளையில் தான் பிடித்த புகைப்படங்கள் எப்படி வந்திருக்கின்றன என்று இவர் பார்த்தபொழுது இவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. ஆம், குறைந்த வெளிச்சத்தில் இவர் தெரசாவைப் புகைப்படம் எடுத்தவற்றிலெல்லாம் அவரது முகம் மிகவும் பிரகாசமாக இருந்தது. இது தொடர்பாக இவர் தெரசாவிடம் கேட்டபொழுது அவர், “நான் நாள்தோறும் மாத்திரைகள் சாப்பிடுகிறேன், அதனால்தான் என் முகம் குறைந்த வெளிச்சத்திலும் பிரகாசமாக இருக்கினறது?” என்றார். “என்ன நீங்கள் மாத்திரைகளை சாப்பிடுகிறீர்களா? அந்த மாத்திரைகள் எங்கு கிடைக்கும்?” என்று இவர் தெரசாவிடம் கேட்டபொழுது தெரசா, நற்கருணைப் பேழையைச் சுட்டிக்காட்டினார். அப்பொழுதுதான் இவருக்கு உண்மை புரிந்தது. இதன்பிறகு இவர் கத்தோலிக்கராக மாறினார்.

ஆம், இறைப்பணியையும் மக்கள் பணியையும் ஒரு சேரச் செய்துவந்த கொல்கொத்தா நகர்ப் புனித தெரசா அந்தப் பணிகளுக்கான ஆற்றலை கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும் உச்சமுமான நற்கருனையிலிருந்தே பெற்றார். இன்று நாம் இயேசுவின் தூய்மைமிகு திரு உடல், திருஇரத்தப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இப்பெருவிழாவும் இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் நமக்கு என்ன செய்தியைக் கூறுகின்றன என்று சிந்திப்போம்.

நற்கருணை: புதிய உடன்படிக்கையின் அடையாளம்

“நற்கருணை என்பது நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்து திருஅவை பெற்றுள்ள பல சிறப்பான கொடைகளில் ஒன்று மட்டுமல்ல; அது ஓர் ஈடு இணையற்ற கொடையாகும். ஏனெனில், அது அவரையே அளிக்கின்ற கொடையாகும்” என்பார் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்.

இன்று நாம் கொண்டாடுகின்ற இயேசுவின் திரு உடல், திரு இரத்தத்தைப் பெருவிழாவானது 1246 ஆம் ஆண்டு திருத்தந்தை நான்காம் அர்பனால் திருஅவை முழுவதும் கொண்டாடப் பணிக்கப்பட்டது. அதன்படி இப்பெருவிழா அன்றுமுதல் இன்றுவரை கொண்டாடப்பட்டு வருகின்றது. திரெந்து திருச்சங்கம், “நற்கருணையில் உள்ள ஆண்டவர் இயேசுவுக்கு நாம் ஆராதனை செலுத்துவேண்டும். அவ்வாறு நாம் செலுத்தும் ஆராதனை மற்றவரையும் நற்கருணை ஆண்டவர்பால் ஈர்க்கவேண்டும்” என்கிறது. இவ்வாறு நாம் நற்கருணையில் உள்ள ஆண்டவருக்குச் செலுத்தும் ஆராதனை பலரையும் அவர்பால் ஈர்க்கவேண்டும் என்கிற உயரிய நோக்கத்திற்கு ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படுகின்ற இயேசுவின் தூய்மைமிகு திரு உடல், திரு இரத்தப் பெருவிழா நமக்குத் தரும் முதன்மையான செய்தி, நற்கருணை புதிய உடன்படிக்கையின் அடையாளம் என்பதாகும்.

பழைய ஏற்பட்டுக் காலத்தில் இரத்தம் உடன்படிக்கையின் அடையாளமாகக் கருதப்பட்டது. இதற்குச் சான்றாக இருப்பது இன்றைய முதல்வாசகம். முதல்வாசகத்தில், மோசே வெள்ளாட்டுக் கிடாயின் இரத்தத்தை எடுத்து, மக்கள் மேல் தெளித்து, “ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையின் இரத்தம்” என்கிறார்; ஆனால், நற்செய்தியில் இயேசு, கிண்ணத்தைக் கையிலெடுத்து, “இது எனது உடன்படிக்கையின் இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம்” என்கிறார். இது குறித்து எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் கூறும்பொழுது, “அவர் பலியாகப் படைத்த இரத்தம் வெள்ளாட்டுக் கிடாய்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றின் இரத்தமல்ல, அவரது சொந்த இரத்தமே!” என்பார். ஆகையால், இயேசுவின் திரு உடலும் திருஇரத்தமுமான நற்கருணை புதிய உடன்படிக்கையின் அடையாளம் என்று சொல்லலாம்.

நற்கருணை: ஒற்றுமையின் அடையாளம்

நற்கருணையைக் குறித்துக் கூறும்பொழுது சலேசு நகர்ப் புனித பிரான்சிஸ் இவ்வாறு கூறுவார்: “நற்கருணை அன்பின் அருளடையாளம்; நற்செயல்களின் உறைவிடம். எல்லாவற்றிற்கும் மேலாக ஒற்றுமையின் அடையாளம்.” நற்கருணை எப்படி ஒற்றுமை அடையாளமாக இருக்கின்றது என்று நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நற்கருணை என்பது அடிப்படையில் இயேசுவின் திரு உடல் மற்றும் திரு இரத்தம். இத்திருவுடலின் உறுப்புகளாக நாம் ஒவ்வொருவரும் இருக்கின்றோம். இதையே புனித பவுல், “உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல் கிறிஸ்துவும் இருக்கின்றார்” (1 கொரி 12: 12) என்பார். அப்படியெனில், கிறிஸ்துவின் உறுப்புகளாய் இருக்கின்ற நாம் ஒவ்வொருவரும் நம்மிடம் இருக்கின்ற ஏழை பணக்காரன், உயர்ந்தவன் தாழ்ந்தவன், படித்தவன் என்ற வேறுபாடுகளின்றி கிறிஸ்துவில் ஒன்றாய் இருக்க வேண்டும் (கலா 3: 28).

நற்கருணை: மறுகிறிஸ்துவாக வாழ்வதற்கு விடுக்கும் அழைப்பு

நற்கருணை புதிய உடன்படிக்கையின் அடையாளம், ஒற்றுமையின் அடையாளம் என்று சிந்தித்துப் பார்த்த நாம், நிறைவாக நற்கருணை நமக்கு விடுக்கும் அழைப்பு என்ன என்று சிந்திப்போம்.

1916 ஆம் ஆண்டு, போர்த்துக்கல் நாட்டில் உள்ள பாத்திமா நகரில் புனித கன்னி மரியா மூன்று சிறுவர்களுக்குக் காட்சியளித்தார். அம்மூவர்களில் ஒருவர்தான் புனித ஜெசிந்தா. இவர் நற்கருனையைக் குறித்துச் சொல்லக்கூடிய ஒரு செய்தி மிகவும் கவனத்திற்கு உரியது. இவர் சொல்லும் செய்தி இதுதான்: “நற்கருணை வழியாக இயேசு கிறிஸ்துவை இதயத்தில் சுமந்து செல்வோம்.” ஆம், ஒவ்வொரு நாளும் நற்கருணையை உள்கொள்ளும் நாம், இயேசுவை இதயத்தில் சுமந்து, மறு கிறிஸ்துவாக வாழவேண்டும். இவ்வாறு நாம் மறு கிறிஸ்து கிறிஸ்துவாக வாழ்கின்றபொழுது, மற்றவர்கள் நம்மைப் பார்த்துவிட்டு இவரல்லவா கிறிஸ்தவர், இவளல்லவா கிறிஸ்தவள் என்று விண்ணகத்தில் உள்ள தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள் (மத் 5: 16). எனவே, நாம் புனித உடன்படிக்கையின் அடையாளமாக, ஒற்றுமையின் அடையாளமாக இருக்கும் நற்கருணையைத் தகுதியான உள்ளத்தோடு உள்கொண்டு, மறு கிறிஸ்துவாக வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை:

‘’நமது கண்கள் எப்போதும் நற்கருணை ஆண்டவரையே நோக்கியிருக்க வேண்டும். நற்கருணையில் உள்ள கிறிஸ்துவின் உடனிருப்புதான் நம் வாழ்வை வளமாக்கும்’ என்பார் புனித பெர்னார்ந்து. எனவே, நாம் நற்கருணை ஆண்டவரை உற்றுநோக்கி, நற்கருணை ஆண்டவர் உணர்த்தும் தியாகம், ஒன்றிப்பு, பேரன்பு ஆகியவற்றை நமதாக்கி இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 

 


 
Free Blog Widget
Stats Counter
hit counter