maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                                                தவக்காலம் 5ஆம் வாரம் - ஞாயிறு



முதல் வாசகம்

புதிய உடன்படிக்கை செய்துகொள்வேன்; பாவங்களை நினைவுகூரமாட்டேன்.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து வாசகம் 31: 31-34

இதோ, நாள்கள் வருகின்றன. அப்பொழுது நான் இஸ்ரயேல் வீட்டாரோடும் யூதாவின் வீட்டாரோடும் புதிய உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வேன், என்கிறார் ஆண்டவர். அவர்களுடைய மூதாதையரை எகிப்து நாட்டினின்று விடுவிப்பதற்காக, அவர்களை நான் கைப்பிடித்து நடத்தி வந்தபொழுது அவர்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையைப் போன்று இது இராது. நான் அவர்களின் தலைவராய் இருந்தும், என் உடன்படிக்கையை அவர்கள் மீறிவிட்டார்கள், என்கிறார் ஆண்டவர்.

அந்நாள்களுக்குப் பிறகு, இஸ்ரயேல் வீட்டாரோடு நான் செய்யவிருக்கும் உடன்படிக்கை இதுவே: என் சட்டத்தை அவர்கள் உள்ளத்தில் பதிப்பேன்; அதை அவர்களது இதயத்தில் எழுதிவைப்பேன். நான் அவர்களின் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள், என்கிறார் ஆண்டவர். இனிமேல் எவரும் ‘ஆண்டவரை அறிந்துகொள்ளும்’ எனத் தமக்கு அடுத்திருப்பவருக்கோ சகோதரருக்கோ கற்றுத்தரமாட்டார். ஏனெனில் அவர்களுள் பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் என்னை அறிந்துகொள்வர், என்கிறார் ஆண்டவர். அவர்களது தீச்செயலை நான் மன்னித்துவிடுவேன்; அவர்களுடைய பாவங்களை இனிமேல் நினைவுகூரமாட்டேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 51: 1-2. 10-11. 12-13 (பல்லவி: 10a) Mp3

பல்லவி: கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்.
1
கடவுளே! உமது பேரன்புக்கேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும்.
2
என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும். - பல்லவி

10
கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும்.
11
உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். - பல்லவி

12
உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும்.
13
அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். - பல்லவி

இரண்டாம் வாசகம்

கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்; அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 5: 7-9

சகோதரர் சகோதரிகளே,

கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில், தம்மைச் சாவிலிருந்து காப்பாற்ற வல்லவரை நோக்கி உரத்த குரல் எழுப்பி, கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார். அவர் கொண்டிருந்த இறைப்பற்று கலந்த அச்சத்தை முன்னிட்டு, கடவுள் அவருக்குச் செவிசாய்த்தார். அவர் இறை மகனாயிருந்தும், துன்பங்கள் வழியே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். அவர் நிறைவுள்ளவராகி, தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம்
யோவா 12: 26

‘எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர்,’ என்கிறார் ஆண்டவர்.

நற்செய்தி வாசகம்

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 20-33

அக்காலத்தில்

வழிபாட்டுக்காகத் திருவிழாவுக்கு வந்தோருள் கிரேக்கர் சிலரும் இருந்தனர். இவர்கள் கலிலேயாவிலுள்ள பெத்சாய்தா ஊரைச் சேர்ந்த பிலிப்பிடம் வந்து, “ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம்” என்று கேட்டுக்கொண்டார்கள். பிலிப்பு அந்திரேயாவிடம் வந்து அது பற்றிச் சொன்னார்; அந்திரேயாவும் பிலிப்பும் இயேசுவிடம் சென்று அதைத் தெரிவித்தனர்.

இயேசு அவர்களைப் பார்த்து, “மானிடமகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்” என்றார். மேலும் இயேசு, “இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன சொல்வேன்? ‘தந்தையே, இந்த நேரத்திலிருந்து என்னைக் காப்பாற்றும்’ என்பேனோ? இல்லை! இதற்காகத்தானே இந்நேரம்வரை வாழ்ந்திருக்கிறேன். தந்தையே, உம் பெயரை மாட்சிப்படுத்தும்” என்றார்.

அப்போது வானிலிருந்து ஒரு குரல், “மாட்சிப்படுத்தினேன்; மீண்டும் மாட்சிப்படுத்துவேன்” என்று ஒலித்தது. அங்குக் கூட்டமாய் நின்றுகொண்டிருந்த மக்கள் அதைக் கேட்டு, “அது இடிமுழக்கம்” என்றனர். வேறு சிலர், “அது வானதூதர் ஒருவர் அவரோடு பேசிய பேச்சு” என்றனர். இயேசு அவர்களைப் பார்த்து, “இக்குரல் என் பொருட்டு அல்ல, உங்கள் பொருட்டே ஒலித்தது. இப்போதே இவ்வுலகு தீர்ப்புக்குள்ளாகிறது; இவ்வுலகின் தலைவன் வெளியே துரத்தப்படுவான். நான் மண்ணிலிருந்து உயர்த்தப்படும்போது அனைவரையும் என்பால் ஈர்த்துக்கொள்வேன்” என்றார்.

தாம் எவ்வாறு இறக்கப் போகிறார் என்பதைக் குறிப்பிட்டே இப்படிச் சொன்னார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.



 
 


I எரேமியா 31: 31-34
II எபிரேயர் 5: 7-9
III யோவான் 12: 20-33

தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோரும், தமக்கென்றே வாழ்வோரும்

நிகழ்வு

அமெரிக்காவைச் சார்ந்த மிகப்பெரிய தொழிலதிபர் மற்றும் சமூக சேவர் ஜான் டி ராக்பெல்லர் (John D Rockefeller 1839-1937). ஒரு காலத்தில் இவர் பணமீட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு கடுமையாக உழைத்தார்; அதற்காக இவர் தன்னிடம் வேலை பார்த்த பணியாளர்களைக் கசக்கிப் பிழித்தார். இதனால் இவர் தனது 33 வது வயதில் மில்லியனராகவும், 43 வது பில்லியனராகவும் ஆனார். தனக்குக் கீழ் வேலைசெய்து வந்த பணியாளர்களை இவர் தொடர்ந்து கசக்கிப் பிழிந்ததால் அவர்கள், “யாருக்கெல்லாமோ சாவு வருகின்றது... இவருக்குச் சாவு வராதா?” என்று சாடைமாடையாகப் பேசத் தொடங்கினார்கள். இதனாலோ என்னவோ இவருக்கு 53 வது நடக்கும்பொழுது அலோபேசியா (Alopecia) என்ற நோய் வந்தது. இந்த நோயின் காரணமாக இவருடைய இமைகளில் இருந்த முடியும், தலையில் இருந்த முடியும் கொட்டத் தொடங்கியது; இவர் நாளுக்கு நாள் மெலிந்துகொண்டே போனார். இதைப் பார்த்துவிட்டுச் செய்தியாளர்கள் இவருடைய இறப்புச் செய்தியைத் தயார் செய்துவிட்டார்கள்.

இதையெல்லாம் அறிந்த இவர், தன்னுடைய வாழ்வை ஆய்வுக்கு உட்படுத்தினார். ‘இத்தனை ஆண்டுகளும் நான் எனக்காக வாழ்ந்துவிட்டேன்; இனிமேல் நான் ஏன் மற்றவருக்காக வாழக்கூடாது’ என்று முடிவுசெய்தார். இதற்குப் பிறகு ராக்பெல்லர் பவுண்டேஷன் என்றோர் அமைப்பை இவர் தொடங்கி, பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் கோயில்கள், ஆகியவற்றிற்கு கோடிக்கணக்கில் உதவி செய்தார். மட்டுமல்லாமல் மலேரியா, காச நோய், டிப்திரியா ஆகிய நோய்களுக்கு இவர் தந்த உதவியினால் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவ்வாறு இவர் தனக்காக வாழாமல், பிறருக்காக வாழத் தொடங்கியதால் இவரது உடல்நலம் தேறி, 98 வயது வரை வாழ்ந்தார்.

ஆம், ராக்பெல்லர் தனக்காக வாழ்ந்தபொழுது சாவின் விளிம்புவரை சென்றார். எப்பொழுது அவர் பிறருக்காக வாழ்ந்தாரோ, அப்பொழுது அவர் நீண்ட நாள்கள் உயிர் வாழ்ந்தார். தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையானது, நமக்காக அல்ல, இயேசுவைப் போன்று பிறருக்காக வாழவேண்டும் என்ற சிந்தினையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.

கோதுமை மணியாய் மண்ணில் மடிந்த இயேசு

யோவான் நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகம், கிரேக்கர் சிலர் இயேசுவைக் காண விரும்புவதோடு தொடங்குகின்றது. இயேசுவைக் காண விரும்பும் கிரேக்கர் பிலிப்பிடம் வருகின்றார்கள். ஒருவேளை பிலிப்பு பிறவினத்தார் மிகுதியாக வாழ்ந்த கலிலேயாவில் உள்ள பெத்சாய்தாவைச் சார்ந்தவர் என்பதால், அவர்கள் இயேசுவைக் காண விரும்பிப் பிலிப்பிடம் வந்திருக்கலாம். பிலிப்போ தன்னிடம் வந்த கிரேக்கர்களை அந்திரேயாவிடம் அழைத்துச் செல்ல, மக்களை இயேசுவிடம் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்த அந்திரேயா (யோவா 1: 42; 6:9) அவர்களை இயேசுவிடம் அழைத்துச் செல்கின்றார். இவ்வாறு தன்னிடம் வந்த கிரேக்கர்களிடம் இயேசு பேசுகின்ற வார்த்தைகள்தான், “மானிடமகன் மாட்சிபெற வேண்டிய நேரம் வந்துவிட்டது.....கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்” என்பதாகும்.

இயேசு தன்னிடம் வந்த கிரேக்கர்களிடம் சொல்லும் இவ்வார்த்தைகளின்மூலம், அவர் தான் பாடுபட்டு இறந்து உயிர்த்தெழுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறுகின்றார். இயேசு இந்த மண்ணுலகில் வாழ்ந்தபொழுது, இன்றைக்கு இவ்வுலகில் வாழும் பலரைப் போன்று தனக்காக வாழவில்லை; மாறாக, அவர் தான் சென்ற இடங்களிலெல்லாம் நன்மையே செய்து (திபா 10: 38), பிறருக்காக வாழ்ந்தார். இதைவிடவும் அவர் தன் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றினார் (யோவா 4: 34). இப்பொழுது தன் பாடுகளின் வழியாக தந்தையை மாட்சியைப்படுத்தவேண்டிய நேரம் வந்ததும்தான், அவர் தன்னைக் கோதுமை மணிக்கு உருவகப்படுத்தி, “கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்” என்கின்றார்.

தன்னைப் பின்பற்றுவோர் தன்னைப் போன்று வாழ அழைக்கும் இயேசு

கவிக்கோ அப்துல் இரகுமான் எழுதி, சாகித்ய அகாடமி விருதுபெற்ற ஆலாபனை என்ற கவிதைத் தொகுப்பு நூலில் இடம்பெறும் இருவரிக் கவிதை இது: “மனிதர்கள் இந்த உலகிற்குப் பிச்சைக்காரர்களாக வருகின்றார்கள்; ஆனால் கடன்காரர்களாகச் செல்கின்றார்கள.” எவ்வளவு வேதனை மிகுந்த வரிகள் இவை. இந்த உலகத்திற்கு எதையுமே கொண்டு வராத மனிதர்கள், இங்குள்ள எல்லா வசதிகளையும் ஆண்டு அனுபவித்துவிட்டு, இந்த உலகத்திற்கு எதையுமே கொடுக்காமல் போனால், அவர்கள் கடன்காரர்கள்தானே!

நற்செய்தியில் இயேசு, இந்த உலகம் வாழ்வு பெறுவதற்காய்த் தான் கோதுமைமணியாய் மடியப்போவதைச் சுட்டிக்காட்டிவிட்டு, “தமக்கென வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும்” என்கின்றார். அவ்வாறெனில், இயேசுவுக்குத் தொண்டுவோர், அவர் வழியில் நடப்போர் அவரைப் போன்று, தன்னையே இவ்வுலகம் வாழ்வு பெறத் தந்து, அவரைப் பின்பற்றவேண்டும். இது சீடர்கள் செய்யவேண்டிய தலையாய கடமையாக இருக்கின்றது.

இறைவாக்கினர் எரேமியா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மற்றும் யூதா வீட்டாரோடு புதிய உடன்படிக்கை செய்துகொள்ளப்போவதாகச் சொல்கின்றார். இப்புதிய உடன்படிக்கையின் மூலம், தான் அவர்களுக்குக் கடவுளாகவும், அவர்கள் தன் மக்களாகவும் இருப்பார்கள் இருப்பார்கள் என்கின்றார். நாம் கடவுளின் மக்களெனில், அவரது திருமகன் இயேசுவைப் போன்று நாமும் இவ்வுலகம் வாழ்வு பெற நம்மையே தரவேண்டும்.

தமக்குக் கீழ்ப்படிவோர் மீட்படையக் காரணமாகும் இயேசு

ஒத்தமை நற்செய்தி நூல்களில் இடம்பெறுகின்ற, இயேசு கெத்சமனித் தோட்டத்தில் இரத்தவியர்வை வியர்த்த நிகழ்வு (மத் 26: 36-46; மாற் 14: 32-42; லூக் 22: 38-45), யோவான் நற்செய்தியில் இடம்பெறாவிட்டாலும், அதையொத்த நிகழ்வு இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் இடம்பெறுவதாகத் திருவிவிலிய அறிஞர்கள் சொல்வர்கள்.

இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் இயேசு, “இப்போது என் உள்ளம் கலக்கமுற்றுள்ளது. நான் என்ன செய்வேன்?” என்கின்றார். இது குறித்து இன்றைய இரண்டாம் வாசகத்தில் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் கூறும்பொழுது, “கிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில்..... கண்ணீர் சிந்தி, மன்றாடி வேண்டினார்” என்பார். இயேசு இவ்வாறு துன்பக் கிண்ணம் தன்னைவிட்டு அகலவேண்டும் என்று கண்ணீர் சிந்தி, மன்றாடினாலும், பின்னர் கடவுளுக்குச் செவிசாய்த்து, துன்பங்களின் வழியாகக் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். மேலும் அவர் தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார். ஆகவே, இயேசு இறைமகனாக இருந்தபொழுதும், துன்பங்களின் வழியாகக் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டதுபோன்று, நாம் ஒவ்வொருவரும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து அவர் நம்மோடு செய்துகொண்ட புதிய உடன்படிக்கைக்கேற்ப வாழவேண்டும். “கீழ்ப்படிதல் பலியை விடச் சிறந்தது” (1 சாமு 15: 22) என்கிறது இறைவார்த்தை. ஆகவே, நாம் இயேசு எப்படித் தந்தைக் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, அவரது திருவுளம் நிறைவேற்றினாரோ அப்படி நாமும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து, அவரது திருவுளம் நிறைவேற்றி வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை

‘அரைகுறைக் கிறிஸ்தவர்களாக வாழ்வதில் திருப்தியடைந்து விடாதீர்கள். புனிதப் பாதையில் விடாமுயற்சியோடு நடங்கள்’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, நாம் நமக்காக மட்டுமே வாழ்வதில் திருப்தியடைந்து விடாமல், கடவுளோடு நாம் செய்துகொண்ட புதிய உடன்படிக்கைக்கேற்ப, இயேசுவைப் போன்று கடவுளுக்குக் கீழ்ந்ப்படிந்து பிறருக்காக வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 


 
Free Blog Widget
Stats Counter
hit counter