maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                                                தவக்காலம் 1ஆம் வாரம் - ஞாயிறு


முதல் வாசகம்

திருச்சட்டம் மோசே வழியாக அளிக்கப்பெற்றது.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 20: 1-17

மோசே மக்களிடம் கூறியது:

கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே: நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது. மேலே விண்வெளியில், கீழே மண்ணுலகில், பூமிக்கடியே நீர்த்திரளில் உள்ள யாதொன்றின் சிலையையோ ஓவியத்தையோ நீ உருவாக்க வேண்டாம். நீ அவைகளை வழிபடவோ அவற்றிற்குப் பணிவிடை புரியவோ வேண்டாம். ஏனெனில் உன் கடவுளும் ஆண்டவருமாகிய நான் இதைச் சகித்துக் கொள்ளமாட்டேன்; என்னைப் புறக்கணிக்கும் மூதாதையரின் பாவங்களைப் பிள்ளைகள் மேல் மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் தண்டித்துத் தீர்ப்பேன். மாறாக என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்.

உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே; ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார்.

ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. ஆறு நாள்கள் நீ உழைத்து உன் அனைத்து வேலையையும் செய்வாய். ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வு நாள். எனவே அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப் பெண்ணும் உன் கால்நடைகளும் உன் நகர்களுக்குள் இருக்கும் அன்னியனும் யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். ஏனெனில், ஆண்டவர் ஆறு நாள்களில் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும், அவற்றிலுள்ள அனைத்தையும் படைத்து ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். இவ்வாறு ஆண்டவர் ஓய்வுநாளுக்கு ஆசிவழங்கி அதனைப் புனிதப்படுத்தினார்.

உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட. கொலை செய்யாதே. விபசாரம் செய்யாதே. களவு செய்யாதே. பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே. பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே; பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

திருச்சட்டம் மோசே வழியாக அளிக்கப்பெற்றது.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 20: 1-3, 7-8, 12-17

மோசே மக்களிடம் கூறியது:

கடவுள் அருளிய வார்த்தைகள் இவையே: நானே உன் கடவுளாகிய ஆண்டவர்; அடிமை வீடாகிய எகிப்து நாட்டினின்று உன்னை வெளியேறச் செய்தவர். என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது.

உன் கடவுளாகிய ஆண்டவரின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதே; ஏனெனில், தம் பெயரை வீணாகப் பயன்படுத்துபவரை ஆண்டவர் தண்டியாது விடார். ஓய்வு நாளைத் தூயதாகக் கடைப்பிடிப்பதில் கருத்தாயிரு. உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி, உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட. கொலை செய்யாதே. விபசாரம் செய்யாதே. களவு செய்யாதே. பிறருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொல்லாதே. பிறர் வீட்டைக் கவர்ந்திட விரும்பாதே; பிறர் மனைவி, அடிமை, அடிமைப்பெண், மாடு, கழுதை, அல்லது பிறர்க்குரியது எதையுமே கவர்ந்திட விரும்பாதே.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்

திபா 19: 7. 8. 9. 10 (பல்லவி: யோவா 6: 68) Mp3

பல்லவி: ஆண்டவரே, நிலைவாழ்வு அளிக்கும் வார்த்தைகள் உம்மிடமே உள்ளன.

7
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர்அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. - பல்லவி

 
8
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளி மயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. - பல்லவி

 
9
ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. - பல்லவி

 
10
அவை பொன்னினும், பசும் பொன்னினும் மேலாக விலைமிக்கவை; தேனினும், தேனைடையினின்று சிந்தும் தெளி தேனினும் இனிமையானவை. - பல்லவி

 

இரண்டாம் வாசகம்

சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவையே பறைசாற்றுகிறோம். அவரது சிலுவை யூதருக்குத் தடைக்கல்; அழைக்கப்பட்டவருக்கோ கடவுளின் ஞானம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 22-25

சகோதரர் சகோதரிகளே,

யூதர்கள் அரும் அடையாளங்கள் வேண்டும் என்று கேட்கிறார்கள்; கிரேக்கர் ஞானத்தை நாடுகிறார்கள். ஆனால் நாங்கள் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப்பற்றிப் பறைசாற்றுகிறோம். அச்சிலுவை யூதருக்குத் தடைக் கல்லாகவும் பிற இனத்தாருக்கு மடமையாயும் இருக்கிறது. ஆனால் அழைக்கப்பட்டவர்கள், யூதரானாலும் கிரேக்கரானாலும், அவர்களுக்குக் கிறிஸ்து கடவுளின் வல்லமையும் ஞானமுமாய் இருக்கிறார். ஏனெனில் மனித ஞானத்தை விடக் கடவுளின் மடமை ஞானம் மிக்கது; மனித வலிமையைவிட அவருடைய வலுவின்மை வலிமை மிக்கது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வசனம்

யோவா 3: 16

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்கு கடவுள் உலகின் மேல் அன்புகூர்ந்தார்.

நற்செய்தி வாசகம்

இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்.

யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 13-25

அக்காலத்தில்

யூதர்களுடைய பாஸ்கா விழா விரைவில் வரவிருந்ததால் இயேசு எருசலேமுக்குச் சென்றார்; கோவிலில் ஆடு, மாடு, புறா விற்போரையும் அங்கே உட்கார்ந்திருந்த நாணயம் மாற்றுவோரையும் கண்டார்; அப்போது கயிறுகளால் ஒரு சாட்டை பின்னி, அவர்கள் எல்லாரையும் கோவிலிலிருந்து துரத்தினார்; ஆடு மாடுகளையும் விரட்டினார்; நாணயம் மாற்றுவோரின் சில்லறைக் காசுகளைக் கொட்டிவிட்டு மேசைகளையும் கவிழ்த்துப் போட்டார். அவர் புறா விற்பவர்களிடம், “இவற்றை இங்கிருந்து எடுத் துச் செல்லுங்கள்; என் தந்தையின் இல்லத்தைச் சந்தை ஆக்காதீர்கள்” என்று கூறினார். அப்போது அவருடைய சீடர்கள், “உம் இல்லத்தின்மீதுள்ள ஆர்வம் என்னை எரித்துவிடும்” என்று மறைநூலில் எழுதியுள்ளதை நினைவு கூர்ந்தார்கள்.

யூதர்கள் அவரைப் பார்த்து, “இவற்றையெல்லாம் செய்ய உமக்கு உரிமை உண்டு என்பதற்கு நீர் காட்டும் அடையாளம் என்ன?” என்று கேட்டார்கள். இயேசு மறுமொழியாக அவர்களிடம், “இக்கோவிலை இடித்துவிடுங்கள். நான் மூன்று நாளில் இதைக் கட்டி எழுப்புவேன்” என்றார். அப்போது யூதர்கள், “இந்தக் கோவிலைக் கட்ட நாற்பத்தாறு ஆண்டுகள் ஆயிற்றே! நீர் மூன்றே நாளில் இதைக் கட்டி எழுப்பிவிடுவீரோ?” என்று கேட்டார்கள். ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார். அவர் இறந்து உயிருடன் எழுப்பப்பட்டபோது அவருடைய சீடர் அவர் இவ்வாறு சொல்லியிருந்ததை நினைவுகூர்ந்து மறைநூலையும் இயேசுவின் கூற்றையும் நம்பினர்.

பாஸ்கா விழாவின்போது இயேசு எருசலேமில் இருந்த வேளையில் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டு பலர் அவரது பெயரில் நம்பிக்கை வைத்தனர். ஆனால் இயேசு அவர்களை நம்பிவிடவில்லை; ஏனெனில் அவருக்கு அனைவரைப்பற்றியும் தெரியும். மனிதரைப் பற்றி அவருக்கு யாரும் எடுத்துச்சொல்லத் தேவையில்லை. ஏனெனில் மனித உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 

 

I விடுதலைப் பயணம் 20: 1-17
II 1 கொரிந்தியர் 1: 22-25
III யோவான் 2: 13-25

இறையன்பு – பிறரன்பு

நிகழ்வு

ஓர் ஊரில் மாதா பக்தர் ஒருவர் இருந்தார். இவர் நாள்தவறாமல் கோயிலுக்குச் சென்று, மாதாவின் திருவுருவத்திற்கு முன்பாக மெழுகுதிரி ஏற்றி, வேண்டிவிட்டு வருவார். இதைக் கவனித்த பங்குப்பணியாளர் அவரிடம், “உங்களுக்கு மாதாவின்மீது அவ்வளவு நம்பிக்கையா...? நாள்தவறாமல் கோயிலுக்கு வருவதும், மாதாவின் திருவுருவத்திற்கு முன்பாக மெழுகுதிரி ஏற்றுவதுமாக இருக்கின்றீர்களே!” என்றார். அதற்கு அந்த மாதா பக்தர், “ஆமாம், எனக்கு மாதாவின்மீது மிகுந்த நம்பிக்கை உண்டு... அடிப்படையில் நான் ஒரு விவசாயி. எனது நிலத்திற்குப் பக்கத்தில் ஒரு காலி இடம் இருந்தது. அதைப் பத்திரப் பதிவாளருக்கு இலஞ்சம் கொடுத்து, என்னுடைய பெயருக்கு மாற்றிவிட்டேன். இப்பொழுது அந்தக் காலி இடத்திற்குச் சொந்தக்காரர் எல்லாவற்றையும் அறிந்து, என்மீது வழக்குத் தொடுத்திருக்கின்றார். நீதி மன்றத்தில் தீர்ப்பு என் சார்பாக வரவேண்டும். அதற்காகத்தான் நான் நாள் தவறாமல், கோயிலுக்கு வந்து, மாதாவின் திருவுருவத்தின் முன்பாக மெழுகுதிரி ஏற்றிவிட்டுச் செல்கின்றேன்” என்றார். அந்த மனிதர் இவ்வாறு சொன்னதைக் கேட்ட பங்குப் பணியாளர் அதிர்ந்துபோனார்.

பலரும் இந்த நிகழ்வில் வருகின்ற மாதா பக்தரைப் போன்றுதான் கடவுள்மீது அன்பு அல்லது நம்பிக்கை இருப்பதாகக் காட்டிக்கொண்டு, தங்களோடு வாழும் சகோதரர் சகோதரிகளைப் பகைத்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இத்தகைய சூழ்நிலையில் இன்று நாம் இறையன்பு, பிறரன்பு என்றால் என்ன, இவற்றிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர் யார் போன்ற கேள்விகளுக்குப் பதிலாய் இருக்கின்றது. இது குறித்து நாம் சிந்திப்போம்.

கடவுள் கொடுத்த பத்துக்கட்டளைகள்

விடுதலைப் பயண நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவராகிய கடவுள், பத்துக்கட்டளைத் தருவதைக் குறித்து வாசிக்கின்றோம். இந்தப் பத்துக் கட்டளைகளில் முதலில் வருகின்ற நான்கு கட்டள்கள் கடவுளை அன்பு செய்வதைக் குறித்தும், அடுத்து வருகின்ற ஆறு கட்டளைகள் அடுத்திருப்பவரை அன்பு செய்வதைக் குறித்தும் இருக்கின்றன.

ஆண்டவராகிய கடவுள் இந்தப் பத்துக் கட்டளைகளையும் இஸ்ரயேல் மக்களுக்குத் தருவதற்கு முன்பாக மோசேயிடம் பேசுகின்ற வார்த்தைகள் மிகவும் கவனிக்கத்தக்கவை. “நீங்கள் என் வார்த்தைக்குச் செவிசாய்த்து, என் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால்..... நீங்களே எல்லா மக்கள் இனங்களிலும் என் தனிச் சொத்தாவீர்கள்” (விப 19: 5). இதுதான் கடவுள் மோசேயிடம் பேசிய வார்த்தைகளாகும். இதன்படி இஸ்ரயேல் மக்கள் கடவுளின் வார்த்தைகளைக் – பத்துக் கட்டளைகளைக் - கடைப்பிடித்து, அவர் தங்களோடு செய்துகொண்ட உடன்படிக்கைக்கு உண்மையாய் இருந்திருக்கவேண்டும்; ஆனால், அவர்கள் கடவுளின் வார்த்தைகளைக் கடைப்பிடியாமல், அவர் தங்களோடு செய்துகொண்ட உடன்படிக்கையை மீறி, வேற்று தெய்வங்களை வழிபட்டார்கள்; மட்டுமல்லாமல், அவர்கள் தங்களோடு இருந்த வறியவர்களை ஒடுக்கினார்கள். இதனால் “அனைத்திற்கும் மேலாகக் கடவுளை அன்பு செய்வது, தன்னை அன்புசெய்வது போல பிறரையும் அன்பு செய்வது” என்ற இரண்டு கட்டளைகளில் அடங்கும் பத்துக்கட்டளைகளைக் கடைப்பிடிக்காமல், கடவுள் தங்களோடு செய்த உடன்படிக்கையை அவர்கள் மீறினார்கள்.

எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்திய இயேசு

இறையன்பையும் பிறரன்பையும் வலியுறுத்தும் பத்துக்கட்டளைகளைக் கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்திருக்க, அவர்களோ அவற்றைக் கடைப்பிடிக்காமல் வாழ்ந்தார்கள் என்று சிந்தித்தோம். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்துகின்ற நிகழ்வினைக் குறித்துப் படிக்கின்றோம். இந்த நிகழ்வுகூட இறையன்பிற்கும் பிறரன்பிற்கும் எதிராக மக்கள் நடந்துகொண்டதாலேயே நடந்து என்றுகூடச் சொல்லலாம்.

கி.மு. 949 ஆம் ஆண்டு சாலமோன் மன்னர் முதல் கோயிலைக் கட்டியெழுப்பினார். இக்கோயிலானது பாபிலோனியர்களால் அழிக்கப்பட்டது. அத்தோடு எருசலேமில் இருந்தவர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டார்கள் (2அர 25). இவ்வாறு பாபிலோனியர்களால் அழிக்கப்பட்ட எருசலேம் திருக்கோயிலானது எஸ்ரா மற்றும் நெகேமியா ஆகியோரின் தலைமையில் 515 ஆம் ஆண்டு மீண்டுமாகக் கட்டியெழுப்பட்டது; இது செருபாபேல் கோயில் என அழைக்கப்பட்டது.. இக்கோயிலானது பின்னர் ஏரோது மன்னனால் நாற்பத்து ஆண்டுகளாகப் புதுப்பிக்கப்பட்டது.

இத்தகைய நீண்டநெடிய பாரம்பரியம் கொண்ட எருசலேம் திருக்கோயிலைத்தான் இயேசு தூய்மைப்படுத்துகின்றார். இயேசு எருசலம் திருக்கோயிலைத் தூய்மைப்[படுத்துவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், இரண்டு காரணங்கள் மிகவும் கவனிக்கத்தக்கவை. ஒன்று, எருசலேம் திருக்கோயிலில் நடந்த முறைகேடு. ஆண்டுதோறும் பாஸ்காவிழாவைக் கொண்டாட எருசலேமிற்குச் செல்கின்றவர்கள் திருக்கோயிலில் பலியிட ஆடுமாடுகளை கொண்டுசெல்வர் (இச 12: 5-7); ஆனால், திருக்கோயிலின் வளாகத்திலேயே ஆடு மாடுகளின் விற்பனை நடைபெற்றதால், மக்கள் தங்களோடு ஆடுகளைக் கொண்டு செல்லவேண்டிய தேவையில்லாமல் போனது. இவ்வாறு திருக்கோயிலின் வளாகத்திற்குள் விற்கப்பட்ட ஆடு மாடுகளின் விலை மிகுதியாக இருந்தது. மேலும் நாணய மாற்றுதலிலும் முறைகேடுகள் நடந்தன. எவ்வாறெனில் பல இடங்களிலிருந்தும் வந்த மக்கள் கோயில்வரியினைச் செக்கேலில் செலுத்தவேண்டியிருந்தது. இதன்மூலம் நாணய மாற்றுவோர் மிகுதியாக இலாபம் அடைந்தனர்.

இயேசு எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்துவதற்கான இரண்டாவது காரணம், பிற இனத்தாருக்கான வழிப்பாட்டு உரிமை மறுக்கப்பட்டதால் ஆகும். சாலமோன் மன்னர் எருசலேம் திருக்கோயிலைக் கட்டிமுடித்து, அதை அர்ச்சிக்கின்றபொழுது, அன்னியர் அல்லது பகைவர் இத்திருக்கோயிலை நோக்கி வேண்டிக்கொண்டால், நீர் அவர்களுக்குச் செவிசாய்த்து, நீதி வழங்குவீராக (1 அர 8: 48-49) என்று கடவுளிடம் வேண்டியிருப்பார். மேலும் எருசலேம் திருக்கோயில் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய ‘இறைமன்றாட்டின் வீடு’ என்று ஆண்டவரே சொல்லியிருப்பார் (எசா 56: 7). உண்மை இப்படியிருக்கையில், எருசலேம் திருக்கோயிலில் வாணிபம் செய்தவர்கள் பிற இனத்தார் வழிபடும் இடத்தில் வாணிபம் செய்ததால்தான் இயேசு அவர்களை அங்கிருந்து விரட்டியடிக்கின்றார்.

எருசலேம் திருக்கோயிலில் வாணிபம் செய்தவர்கள் அதிலும் குறிப்பாக அதை நிர்வகித்த தலைமைக்குருக்கள் இறைவனையும் பிற இனத்து மக்களையும் அன்பு செய்திருந்தால் அங்கு வாணிபம் செய்திருக்கமாட்டார்கள். இறைவனையும் பிறரையும் அன்பு செய்யாதாலேயே அவர்கள் இவ்வாறு செய்தார்கள்.

இறையன்புக்கும் பிறரன்புக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய இயேசு

இஸ்ரயேல் மக்கள் இறைவனையும் பிறரையும் அன்பு செய்யாமல் இருக்க, எருசலேம் திருக்கோயிலை நிர்வகித்த தலைமைக்குருக்கள் இறைவனையும் பிறரையும் அன்பு செய்யாமல் இருக்க, இயேசு இறைவனையும் பிறரையும் அன்பு செய்கின்றார். அவர் இறைவனையும் பிறரையும் அன்பு செய்தார் என்பதன் அடையாளம்தான், எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்திய நிகழ்வு.

இயேசு எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்தும்பொழுது சொல்லக்கூடிய வார்த்தைகள், “என் தந்தையின் இல்லம்” என்பதாகும். தந்தைக் கடவுளின்மீது, அவரது இல்லத்தின் இயேசு உண்மையான அன்பு கொண்டிருந்ததாலேயே அவரால் இவ்வாறு சொல்ல முடிந்தது. அதைப்போன்று இப்பகுதியை மாற்கு நற்செய்தியில் படிக்கும்பொழுது, “என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு” (மாற் 11: 17) என்று இயேசு சொல்வதாக வரும்.. மக்கள் எல்லாரையும் அன்பு செய்ததாலேயே அவரால் ‘மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைவேண்டலின் வீடு என்று சொல்ல முடிந்தது. இவ்வாறு இயேசு இறையன்பிற்கும் பிறரன்பிற்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்கினார். நாமும் இறைவனையும், அதேநேரத்தில் சக மனிதர்களையும் முழுமையாக அன்புசெய்ய வேண்டும். ஏனெனில் இறையன்புக்கு இணையான கட்டளை பிறரன்பு ஆகும் (மத் 22: 39)

சிந்தனை:

‘தம் கண்முன்னேயுள்ள சகோதரர் சகோதரிகளிடம் அன்பு செலுத்தாதோர், கண்ணுக்குப் புலப்படாத கடவுளிடம் அன்பு செலுத்த முடியாது’ (1யோவா 4: 20). என்பார் யோவான். எனவே, நாம் நம்மோடு வாழும் சகோதர் சகோதரிகளை அன்பு செய்து, இறைவனை அன்பு செயபவர்களாவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 

 


 
Free Blog Widget
Stats Counter
hit counter