maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                                                திருவருகைக்காலம் 2ஆம் ஞாயிறு             

முதல் வாசகம்

ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 40: 1-5, 9-11

“ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்” என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப் பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்: “அவள் போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது; அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு தண்டனை பெற்றுவிட்டாள்.”

குரலொலி ஒன்று முழங்குகின்றது: “பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம் நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்.”

சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்! எருசலேமே! நற்செய்தி உரைப்பவளே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே! ‘இதோ உன் கடவுள்’ என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு ஆட்சிபுரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன் எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன. ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில் தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச் செல்வார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்

திபா 85: 8ab-9. 10-11. 12-13 . (பல்லவி: 7 காண்க)  Mp3

பல்லவி: ஆண்டவரே, உமது பேரன்பைக் காட்டி எங்களை மீட்டருளும்.

8ab
ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;
9
அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். - பல்லவி

 
10
பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும்.
11
மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். - பல்லவி

 
12
நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம் நாடு நல்கும்.
13
நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும். - பல்லவி

 

இரண்டாம் வாசகம்

புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

திருத்தூதர் பேதுரு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 8-14

அன்பார்ந்தவர்களே, நீங்கள் ஒன்றை மறந்துவிட வேண்டாம். ஆண்டவரின் பார்வையில் ஒரு நாள் ஆயிரம் ஆண்டுகள் போலவும், ஆயிரம் ஆண்டுகள் ஒரு நாள் போலவும் இருக்கின்றன. ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர். ஆனால் அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிருக்கிறார். யாரும் அழிந்து போகாமல், எல்லாரும் மனம் மாறவேண்டுமென விரும்புகிறார்.

ஆனால் ஆண்டவருடைய நாள் திருடனைப்போல வரும். வானங்கள் பெருமுழக்கத்துடன் மறைந்தொழியும்; பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும். மண்ணுலகமும் அதன் செயல்களும் தீக்கிரையாகும். இவை யாவும் அழிந்து போகுமாதலால் நீங்கள் தூய, இறைப்பற்றுள்ள நடத்தையில் மிகவும் சிறந்து விளங்க வேண்டும்! கடவுளின் நாளை எதிர்பார்த்து அவர் வருகையை விரைவுபடுத்த வேண்டும். அந்நாளில் வானங்கள் எரிந்தழிந்து பஞ்சபூதங்கள் வெந்துருகிப் போகும். அவர் வாக்களித்தபடியே நீதி குடிகொண்டிருக்கும் புதிய விண்ணுலகும் புதிய மண்ணுலகும் வரும் என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

ஆகவே, அன்பார்ந்தவர்களே, இவற்றை எதிர்பார்த்திருக்கும் உங்களை அவர் மாசுமறுவற்றவர்களாய், நல்லுறவு கொண்டவர்களாய்க் காணும் வகையில் முழு முயற்சி செய்யுங்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 3: 4, 6

அல்லேலூயா, அல்லேலூயா! ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்; மனிதர் அனைவரும் கடவுள் அருளும் மீட்பைக் காண்பர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஆண்டவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்.

மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-8

கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்:

“இதோ, என் தூதனை உமக்குமுன் அனுப்புகிறேன்; அவர் உமக்கு வழியை ஆயத்தம் செய்வார். பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது: ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்” என்று இறைவாக்கினர் எசாயாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.

இதன்படியே திருமுழுக்கு யோவான் பாலைநிலத்துக்கு வந்து, பாவ மன்னிப்பு அடைய மனம் மாறித் திருமுழுக்குப் பெறுங்கள் என்று பறைசாற்றி வந்தார். யூதேயாவினர் அனைவரும் எருசலேம் நகரினர் யாவரும் அவரிடம் சென்றனர்; தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தனர். யோவான் ஒட்டக முடி ஆடையை அணிந்திருந்தார்; தோல் கச்சையை இடையில் கட்டியிருந்தார்; வெட்டுக்கிளியும் காட்டுத் தேனும் உண்டு வந்தார். அவர் தொடர்ந்து, “என்னைவிட வலிமைமிக்க ஒருவர் எனக்குப்பின் வருகிறார். குனிந்து அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதி இல்லை. நான் உங்களுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தேன்; அவரோ உங்களுக்குத் தூய ஆவியால் திருமுழுக்குக் கொடுப்பார்” எனப் பறைசாற்றினார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

திருவருகைக்காலம் இரண்டாம் வாரம்

I எசாயா 40: 1-5, 9-11
II 2 பேதுரு 3: 8-14
III மாற்கு 1: 1-8

மாபரன் இயேசுவும் வருகையும், மனம் மாற்றமும்


 

நிகழ்வு

கொலைகாரன் ஒருவன் இருந்தான். அவன் தன் கண்ணில் பட்ட ஆண், பெண், சிறியவர், பெரியவர் என யாவரையும் வெட்டிச் சாய்த்தான். இதனால் அவன் வருவது தெரிந்தால், மக்கள் ஓடி ஒளிந்துகொள்வார்கள்.

ஒருநாள் அவன் தன்னுடைய குதிரையில் வேகமாக வருவதைக் கண்டு மக்கள் அனைவரும் ஓடி ஒளிந்துகொண்டார்கள். ஒரு துறவி மட்டும் ஓடாமல் அப்படியே இருந்தார். எல்லாரும் ஓடி ஒளிந்தபொழுது, துறவி மட்டும் ஓடாமல் அப்படியே இருந்ததைக் கண்டு, கடுஞ்சீற்றம் அடைந்த அந்தக் கொலைகாரன் துறவியிடம், “என்னைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? நான் என் வாளை வீசினால், எனக்கு முன்பாக நிற்பவர் யாராக இருந்தாலும், இரண்டு துண்டுகளாகச் சரிந்து கீழே விழுவார்” என்றான். அதற்கு அந்தத் துறவி, “என்னைப் பற்றி உனக்குத் தெரியாதா? நான் என் பார்வையாலேயே எனக்கு முன்பாக இருக்கக்கூடியவரைச் சாய்க்கக் கூடியவன்” என்றார்.

துறவி இப்படிச் சொன்னதும், அந்தக் கொலைகாரன் தன்னுடைய உள்ளத்தில் ஏதோ ஒரு மாற்றத்தை உணர்ந்தான். பின்னர் அவன், துறவியின் காலில் போய் விழுந்து, “இத்தனை நாள்களும் நான் ஒரு மிகப்பெரிய கொலைகாரனாய் வாழ்ந்துவிட்டேன். இனிமேல் நான் மனம்திருந்தி நடக்க விரும்புகின்றேன். அதனால் என்னை உங்களுடைய சீடராக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றான். துறவியும் அவனைத் தன்னுடைய சீடனாக ஏற்றுக்கொள்ள, அவன் புதிய மனிதனாக வாழத் தொடங்கினான்.

இந்த நிகழ்வில் வருகின்ற மிகப்பெரிய கொலைகாரன் துறவியின் அமைதியான தோற்றத்தையும், அவருடைய வார்த்தைகளையும் கேட்டு மனம்மாறினான். திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக, மனம்மாறி அவருக்கு உகந்தவர்களாக வாழவேண்டும் என்றோர் அழைப்பினைத் தருகின்றது. அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மனம் மாற்றம் காலத்தின் கட்டாயம்

திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு என்றாலே, ஆண்டவர் இயேசுவின் வருகைக்காக நம்மையே நாம் தயார் செய்யும் வகையில், மனம் மாற்றம் அடையவேண்டும் என்ற செய்தியைத்தான் தாங்கி வரும். இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் அத்தகைய செய்தியைத்தான் தாங்கி வருகின்றது.

நற்செய்தியில், ஆண்டவர் இயேசுவின் வருகைக்காகத் திருமுழுக்கு யோவான் மக்களைத் தயார் செய்வதைக் குறித்து வாசிக்கின்றோம். மெசியாவின் வருகைக்கு முன்பாக, தூதர் ஒருவர் தோன்றி மக்களைத் தயார் செய்வார் என்று பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டது (விப 23: 20; எசா 40: 3; மலா 3:1). அதுவே திருமுழுக்கு யோவானின் வழியாக நடந்தது. இந்தத் திருமுழுக்கு யோவான் மக்களிடம் மனம் மாறவேண்டும் என்றோர் அழைப்பு விடுத்தார். அந்த மனம்மாற்றம் என்பது பெயரளவில் மட்டும் இருக்காமல், செயல்வடிவிலும் இருக்கவேண்டும் என்பதற்காக, “நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள்” (மத் 3: 8) என்றார். ஆதலால், நாம் மெசியாவாம் இயேசு கிறிஸ்துவின் வருக்கைக்கு நம்மையே நாம் தயார்செய்வதற்கு மனம் மாற்றம் அடைவது காலத்தின் கட்டாயமாக, இன்றியமையாததாக இருக்கின்றது.

மனம்மாறுவதற்காகப் பொறுமையோடு இருக்கும் இறைவன்

மனம் மாற்றம் மிகவும் இன்றியமையாதது என்று இன்றைய நற்செய்தி வாசகம் கூறுகின்றபொழுது, இன்றைய இரண்டாம் வாசகத்தின் வழியாகப் புனித பேதுரு, நாம் மனம் மாறுவதற்காகக் கடவுள் பொறுமையோடு இருக்கின்றார் என்கின்றார்.

தொடக்கத் திருஅவையில் இயேசுவின் இரண்டாம் வருகை விரைவில் நிகழும் என்றொரு நம்பிக்கை இருந்தது; ஆனால், இயேசுவின் இரண்டாம் வருகை விரைவில் நிகழாதபொழுது, ஒருசிலர் இயேசுவின் இரண்டாம் வருகையைக் கேள்விக்குள்ளாகினார்கள். அப்பொழுதுதான் புனித பேதுரு அவர்களிடம், “ஆண்டவர் தம் வாக்குறுதியை நிறைவேற்றக் காலந்தாழ்த்துவதாகச் சிலர் கருதுகின்றனர்; ஆனால் அவர் அவ்வாறு காலந்தாழ்த்துவதில்லை. மாறாக, உங்களுக்காகப் பொறுமையோடிருக்கின்றார்” என்கின்றார்.

கடவுளின் விரும்ப மெல்லாம், இறைவாக்கினர் எரேமியா கூறுவது போல, தீயோர் சாக வேண்டும் என்பது கிடையாது; மாறாக அவர்கள் தம் தீய வழியினின்று திரும்பி, வாழவேண்டும் என்பதே ஆகும் (எரே 33: 11). இதையேதான் புனித பேதுரு தன்னுடைய திருமுகத்தில் வலியுறுத்திக் கூறுகின்றார். ஆகவே, நாம் மனம்மாறவேண்டும் என்பதற்காகப் பொறுமையோடு இருக்கும்; நாம் வாழவேண்டும் என்று விரும்பும் கடவுளிடம், நாம் மனம்மாறிச் செல்வது சிறப்பானது.

மனம்மாறுவோருக்கு இறைவன் வெற்றிப் பரிசை அளிப்பார்

நாம் மனம் மாறவேண்டும் என்றும், நாம் மனம்மாறுவதற்காகக் கடவுள் பொறுமையோடு காத்திருக்கின்றார் என்றும் இதுவரை சிந்தித்துப் பார்த்தோம். இப்பொழுது நாம் மனம்மாறி இறைவனுக்கு உகந்தவர்களாய் வாழ்கின்றபொழுது நமக்கு என்னென்ன ஆசிகள் கிடைக்கும் என்பதைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம்.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட முதல் வாசகம், பாபிலோனியர்களால் நாடுகடத்தப்பட்டு, அறுபது ஆண்டுகள் அன்னிய மண்ணில் அடிமைகளாக வாழ்ந்து வந்த யூதேயா நாட்டினருக்கு ஆண்டவராக கடவுள் ஆறுதலின் செய்தியை உரைப்பதாக இருக்கின்றது. யூதேயா நாட்டினர் தாங்கள் செய்த தவற்றினாலேயே நாடு கடத்தப்பட்டனர் என்று கூறும் இறைவாக்கினர் எசாயா, கடவுள் அவர்களுடைய குற்றத்தை மன்னித்து விட்டார் என்றும், தங்களுடைய வழிகளை – வாழ்க்கையை – சீரமைத்துக்கொண்டு தங்கள் நாட்டிற்கு அவர்கள் திரும்பிச் செல்லும்பொழுது, ஆண்டவரின் மாட்சி அவர்களிடம் வெளிப்படும் என்றும், ஆண்டவர் தம் வெற்றிப் பரிசை அவர்களுக்குத் தருவார் என்றும், ஓர் ஆயரைப் போன்று அவர்களை அவர் மேய்ப்பார் என்றும் கூறுகின்றார்.

முதல் வாசகம், தங்களுடைய வழிகளைத் திருத்திக்கொண்டு, தங்களது நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் யூதேயா நாட்டிற்குக் கிடைக்கும் ஆசிகளை எடுத்துச் சொல்வதாக இருந்தாலும், மனம் மாறி, ஆண்டவருக்கு உகந்த வழியில் நாம் நடக்கும்பொழுது கிடைக்கும் ஆசிகளை மறைமுகமாக எடுத்துச் சொல்வதாக இருக்கின்றது. ஆகையால், நாம் மனம்மாறுவதற்குப் பொறுமையோடு இருக்கும் ஆண்டவரிடம் மனந்திருந்தி வந்தால், அவருடைய மாட்சியைக் கண்டு, அவர் அளிக்கும் வெற்றிப் பரிசினைப் பெற்று, அவருடைய ஆடுகளாவோம் என்பது உறுதி. இத்தகைய ஆசிகளை நாம் பெற மனம் மாறத் தயாரா? சிந்திப்போம்.

சிந்தனை

‘குழந்தை இயேசு கோடிகணக்கான குடில்களில் பிறந்துவிட்டு, நம்முடைய உள்ளத்தில் பிறக்கவில்லை எனில், அதனால் எந்தவொரு பயனும் இல்லை’ என்பார் அலெக்சாண்டர் போப் என்ற அறிஞர். ஆதலால், இயேசு நம்முடைய உள்ளத்தில் பிறக்கும் வகையில், நாம் மனம்மாறி, நம்முடைய உள்ளத்தை இறைவன் தங்கும் இல்லடமாக மாற்றுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
 


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter