maraikal
MUM
நாளுக்கொரு வசன

"அப்பொழுது நீங்கள் செய்யும் தர்மம், மறைவாயிருக்கும். மறைவாய் உள்ளதைக் காணும் உங்கள் தந்தையும் உங்களுக்குக் கைமாறு அளிப்பார்."
மத்தேயு 6:4


ஒப்புரவு அன்னை ஆலயம்- பெல்வில் - France

தவக்காலம் என்பது இரக்கத்தின் காலம்,
மன மாற்றதின் காலம்,
நாம் இறைவனைவிட்டு பிரிய கரணமாய் இருந்த பாவ செயல்களை நினத்து வருந்தும் காலம்,
அந்த பாவங்களை மீண்டும் செய்யாமல் இருக்க நம் உள்ளத்தை தயார்படுத்த மன்றாடும் காலம்,
நாம் இறந்த பிறகு நமக்கு நீதி கிடைக்க உதவும் காலம், மண்ணிலிருந்து பிறந்த நாம் திரும்ப மண்ணுக்கே செல்ல வேண்டும் என்பதை நினைவூட்டும் காலம்,
 

 

திருநீற்றுப்புதன்

"கடவுளோடு ஒப்புரவாகுங்கள்"

நிகழ்வு

பெருநகர் ஒன்றில் ஒரு கணவனும் மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். நன்றாகச் சென்றுகொண்டிருந்த அவருடைய திருமண வாழ்க்கையில் திடீரென்று விரிசல் ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் பிரிந்துவிடுவதே நல்லது என்று பிரிந்துபோனார்கள். இதற்குப் பின்பு அவர்கள் இருவரும் வேறு வேறு இடங்களுக்குச் சென்று வாழத் தொடங்கினார்கள்.

ஒருநாள் கணவர் பணி நிமித்தமாக முன்பிருந்த அதே நகருக்கு வந்தார். அன்றைய நாளில், பிறந்து ஓரிரு மாதங்களிலேயே இறந்துபோன அவருடைய மகனின் நினைவுநாள் என்பதால், அவர் தன்னுடைய பணியை முடித்துவிட்டு, மகனின் கல்லறைக்கு மரியாதை செலுத்த வந்தார். அவர் மகனின் கல்லறையில் மரியாதை செலுத்திக்கொண்டிருக்கையில் அவருக்குப் பின்னால் யாரோ ஒருவர் நடந்து வருவது மாதிரியான காலடிச் சத்தம் கேட்டது. அவர் திரும்பிப் பார்த்தார். அப்பொழுது அவருடைய கண்களை அவரால் நம்ப முடியவில்லை. ஆம், அங்கு அவருடைய மனைவி, மகனுக்கு மரியாதை செலுத்துவதற்காக மாலையோடு நின்றுகொண்டிருந்தார்.

நீண்ட நாள்கள் கழித்து இருவரும் பார்த்துக்கொண்டதால் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்கள். பின்னர் அவர்கள் இருவரும் பல ஆண்டுகள் பிரிந்திருந்ததால் ஏற்பட்ட இழப்புகளை உணர்ந்தவர்களாய் ஒன்று சேர்ந்தார்கள். ஆம், இறந்துபோன மகன் பிரிந்திருந்த அவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்தான்; ஒப்புரவாக்கினான்.

இந்தக் குழந்தை எப்படி பிரிந்திருந்த கணவன் மனைவியை ஒப்புரவாக்கியதோ, அது போன்று ஆண்டவராகிய கடவுள் தன் மகன் இயேசு வழியாக மனிதர்களாகிய நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கினார். எனவே, நாம் அனைவரும் அவரோடு ஒப்புரவாக இருக்கவேண்டும். அதைத்தான் மேலே உள்ள நிகழ்வும் இன்று நாம் தொடங்கியிருக்கும் தவக்காலமும் நமக்கு எடுத்துக்கூறுகின்றன.

தன் மகன் இயேசுவின் வழியாக நம்மைத் தம்மோடு ஒப்புரவாக்கிய கடவுள்

இன்று நாம் அருளின் காலமான தவக்காலத்தைத்

தொடங்கியிருக்கின்றோம்.

இன்றைய நாளில் நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுளோடு ஒப்புரவாகவேண்டும் என்ற உயரிய அழைப்பினைத் தருகின்றது. நாம் ஏன் கடவுளோடு ஒப்புரவாகவேண்டும்...? கடவுளோடு எப்படி ஒப்புரவாகுவது...? கடவுளோடு ஒப்புரவாகுவதால் நாம் அடையும் நன்மைகள் என்ன...? ஆகியவற்றைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம்திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் இவ்வாறு

வாசிக்கின்றோம்: "உலகினரின் குற்றங்களைப் பொருட்படுத்தாமல் கடவுள், கிறிஸ்துவின் வாயிலாக அவர்களைத் தம்மோடு

ஒப்புரவாக்கினார்." ஆம், மனிதர்கள் தங்களுடையகீழ்ப்படியாமையால் கடவுளோடு உள்ள உறவை முறித்துக்கொண்டார்கள். அப்படியிருந்தும், கடவுள் அவர்களுடைய குற்றங்களைப் பொருட்படுத்தாமல், தம் மகன் இயேசுவின் வழியாக அவர்களைத் தம்மோடு ஒப்புரவாக்கிக் கொண்டார். அப்படியானால், நாம் ஒவ்வொருவரும் கடவுளோடு ஒப்புரவாக இருக்கவேண்டும் என்பதே அவர் நமக்குக் கொடுக்கப்படும் அழைப்பாக இருக்கின்றது.

கடவுளோடு எப்படி ஒப்புரவாகுவது என்பதற்கான பதிலை இன்றைய நாளில் நாம் படிக்கக்கேட்ட நற்செய்தி வாசகத்தில் இயேசு தருகின்றார். அறம் செய்தல், இறைவேண்டல் செய்தல், நோன்பிருத்தல், என்ற மூன்று முக்கியமான உண்மைகளைச் சொல்லும் இயேசு, இவற்றின்மூலம் நாம் கடவுளோடு ஒப்புரவாகலாம் என்று கூறுகின்றார். இங்கு ஒரு கேள்வி எழலாம். அது என்ன கேள்வி எனில், அறம் செய்தல், இறைவேண்டல் செய்தல், நோன்பிருத்தல் இவற்றின் மூலம் ஒருவர் எப்படிக் கடவுளோடு ஒப்புரவாக முடியும் என்பதுதான் அந்தக் கேள்வி.

திருத்தூதரான புனித யோவானின் கூற்றுப்படி (1யோவா 4: 20) மனிதரோடு ஒப்புரவாகாமல் அல்லது மனிதரை அன்பு செய்யாமல், கடவுளோடு ஒப்புரவாகுவதோ அல்லது கடவுளை அன்பு செய்யவோ முடியாது. மனிதரை அன்பு செய்வதற்கு ஒருவர் அறச்செயல்களைச் செய்தாகவேண்டும். இதைவிட மிக முக்கியமான செய்தி என்னவெனில், ஒருவர் சக மனிதரோடு ஒப்புரவாகவேண்டும் அல்லது அவரை அன்பு செய்யவேண்டும் என்றால், அதற்கு அவர் தன்னை முதலில் அன்பு செய்யவேண்டும். தன்னை அன்பு செய்கின்றவர் கட்டயாம் நோன்பிருந்தாக வேண்டும். எனவே, ஒருவர் கடவுளோடு ஒப்புரவாக வேண்டும் என்றால், அவர் தன்னோடும் பிறரோடும் ஒப்புரவாகவேண்டும். அதற்கு நோன்பும் அறச் செயலும் இறைவேண்டலும் தேவையானதாக இருக்கின்றன.

கடவுளிடமிருந்து பெற்ற அழைப்பை இழக்கவேண்டாம்

கடவுளோடு ஒப்புரவாகுங்கள் என்ற சொன்ன புனித பவுல், அடுத்ததாகச் சொல்லக்கூடிய செய்தி, "கடவுளிடமிருந்து பெற்ற அழைப்பை இழக்கவேண்டாம்" என்பதாகும். நாம் கடவுளிடமிருந்து பெற்ற அழைக்க இழக்கவேண்டாம் என்று பவுல் வலியுறுத்திக் கூறுவதற்கு ஒரு முக்கியமான காரணம் இருக்கின்றது. அது என்னவெனில், மனிதர்களாகிய நாம் அனைவரும் கடவுளுக்கு ஏற்புடையவர்களாக இருக்க, அவர் பாவம் அறியாத தம் திருமகனை பாவநிலை ஏற்கச் செய்தார் என்பதாகும். இது கடவுளைப் பொருத்தமட்டில் ஒரு மிகப்பெரிய செயல் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில், எவரும் தம் மகன் அல்லது மகள் தாழ்ந்துபோகவேண்டும் என்று விரும்புவதில்லை. ஆனால், கடவுள் பாவமே அறியாத தன் மகனைப் பாவநிலை ஏற்கச் செய்தார் எனில், அங்குதான் மேலான கடவுளின் அன்பு இருக்கின்றது. எனவே, இத்தகைய பேரன்பு மிக்க இறைவனிடமிருந்து வரும் "என்னிடம் திரும்பி வாருங்கள்"யோவே 2: 12,13) அல்லது ஒப்புரவாகுங்கள் என்ற அழைப்பினை நாம் இழந்துவிடவேண்டாம் என்பதுதான் பவுல் கூறும் செய்தியாக இருக்கின்றது.

இதுவே தகுந்த காலம்; இன்றே மீட்பு நாள்

இன்றைய இரண்டாவது வாசகத்தின் வழியாக புனித பவுல் நமக்குச் சொல்லும் மூன்றாவது முக்கியமான செய்தி, கடவுளோடு ஒப்புரவாகுவதற்கு இதுவே தகுந்த காலம்; இன்றே மீட்பு நாள் என்பதாகும். பலர் "கடவுளோடு நாளை ஒப்புரவாகலாம்... பிறகு ஒப்புரவாகலாம்..."என்று இருப்பதுண்டு. இதனால் அவர்கள் கடவுளோடு ஒருபோதும் ஒப்புரவாகாமல் போகும் நிலைதான் ஏற்படும். இத்தகைய சூழ்நிலையில் புனித பவுல் இன்றைய இரண்டாம் வாசகத்தின் வழியாகக் கொடுக்கும், "இதுவே தகுந்த காலம். இன்றே மீட்பு நாள்"என்ற அழைப்பு நமது கவனத்திற்குரியது.

கடல் ஆமைகளிடம் ஒரு வித்தியாச வழக்கம் உண்டு. அவை முட்டையிடும்பொழுது கடலில் முட்டையிடாமல், நிலத்திற்கு வந்து, குழிகளைத் தோண்டி முட்டையிட்டு மூடிவிட்டுப் போய்விடும். குறிப்பிட்ட காலத்தில் அவை குஞ்சுகளாகப் பொறித்துவிடும். குஞ்சுகளாகப் பொறித்தபின் அவை நிலத்தில் தங்குவதில்லை. மாறாக, தங்களுடைய பெற்றோர் இருக்கும் கடலுக்கு வந்துவிடும். ஒருவேளை அவை நிலத்திலேயே இருந்தால், பறவைகளுக்கும் பிற உயிரினங்களுக்கும் இரையாகிவிடும் என்பதலேயே அவை இப்படிச் செய்யும்.

மனிதர்களாகிய நாமும்கூட இந்த மண்ணக இன்பமே போதும் என்று இருந்துவிடாமல், முடிவில்லா வாழ்வினைத் தரும் இறைவனைத் தேடிச் செல்லவேண்டும்; அவரோடு ஒப்புரவாகவேண்டும். அதுதான் இறைவனின் விரும்பமும்கூட. எனவே, நாம் கடவுளோடு ஒப்புரவாக இதுவே தகுந்த காலம் என்று நம்மை அன்பு செய்து, பிறரையும் அன்பு செய்து, அதன்மூலம் கடவுளையும் செய்து, அவரோடு ஒப்புரவாகுவோம்.

சிந்தனை

"என்னைவிட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய முடியாது" (யோவா 15: 5) என்பார் இயேசு. ஆகையால், நாம் கடவுளோடு ஒப்புரவாகுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

 

நோன்போடு சேர்ந்த மனமாற்றத்தையே தவக்காலம் நமக்கு வலியுறுத்துகின்றது

மீட்பின் காலம், அருளின் காலம், செபத்தின் காலம் மனமாற்றத்தின் காலம் என்ற அறைகூவலை விடுக்கும் தவக்காலத்தில் நாம் நுழைந்துள்ளோம். “நீங்கள் உங்கள் உடைகளை கிழித்துக்கொள்ள வேண்டாம்.

 

இதயத்தை கிழித்துக்கொண்டு உங்கள் ஆண்டவராகிய இறைவனிடம் திரும்பி வாருங்கள்” என்று இறைவாக்கினர் யோசேவ் கூறுகின்றார். (யோசேவ் 2:12-13) ஆகவே பாஸ்கா திருவிழாவைக் கொண்டாட விசுவாசிகள் தங்களை முழு மனதுடன் ஆயத்தம் செய்யும் காலம் தான் தவக்காலம்.

 

நம் ஆண்டவர் நாற்பது நாட்கள் நோன்பிருந்தார் என்று நற்செய்தி கூறுகின்றது.

பழைய ஏற்பாட்டில் நாற்பது நாள் வெள்ளப்பெருக்கு, இஸ்ராயேல் மக்கள் பாலைவனத்தில் பயணம் செய்த நாற்பது ஆண்டுகள், மோசே நாற்பது நாள் நோன்பிருந்து மன்றாடியது, இறைவாக்கினர் எலியா ஒரேப் மலைக்கு செல்ல எடுத்துக்கொண்ட நாற்பது நாட்கள், நினிவே மக்கள் உண்ணா நோன்பிருந்த நாற்பது நாட்களையும் குறிக்கின்றது.

 

பழைய ஏற்பாட்டில் சுவையான உணவு, இறைச்சி, திராட்சை இரசம் ஆகியவற்றை கைவிட்டு நோன்பிருந்த தானியேலுக்கு ஆண்டவரின் திருக்காட்சி அருளப்பட்டதாக தானியேல் 10:2-3 வசனங்களில் காண்கின்றோம்.

புதிய உடன்படிக்கையில் நம் ஆண்டவர் கிறிஸ்துவின் நோன்பு குறிப்பிடப்பட்டுள்ளது. மத்தேயூ 4:1-11, லூக் 4:1-13 அவர் தூய ஆவியால் நிரப்பப்பட்டவராய் பசாசை வென்றார். பழைய இஸ்ராயேல் மக்கள் பாலை நிலத்தில் மூன்று சோதனைகளிலும் வெற்றிகாணவில்லை. ஆனால் புதிய இஸ்ராயேலின் தலைவரான இயேசு வனாந்தரத்தில் மூன்று சோதனைகளிலும் வெற்றி பெறுகின்றார்.

 

இவரது வெற்றிக்கு நோன்பு, செபம், இறைவார்த்தையின் வல்லமை இவையே காரணமாக அமைந்தது. ஆண்டவர் யேசு மலைப்பொழிவில் நோன்பு எவ்வாறானதாக அமைந்திட வேண்டுமென்று கற்பிக்கின்றார். அது வெறும் வெளிவேடச் சொல்லாகிவிடக்கூடாது. மத்தேயு (6:16-18)

 

முதல் கிறிஸ்தவர்களுக்கு நோன்பும், மன்றாட்டும் ஆற்றல் அளிப்பதாக இருந்தன. திருத்தூதர்களான பவுல், பர்னபாவையும் நோன்பிருந்து திருப்பணியில் அமர்த்தினர். (தி.ப. 12:3) அவர்கள் நோன்பிருந்து செபித்தே மூப்பர்களைத் தேர்ந்தெடுத்தனர். (தி.ப. 14:23)

 

திருத்தூதர் பவுல் தனது பணி வாழ்வில் தான் அடைந்த இன்னல்களை தமது திருமுகத்தில் குறிப்பிட்டுள்ளார். (2 கொரி 11:27, 6:5) கிறிஸ்து தம் உடலாகிய திருச்சபைக்காக வேதனை யுற்றார். அவர் மேலும் பட வேண்டிய வேதனையை நாம் நம் உடலில் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்துகின்றார். (கொலோ 1:24) தூய்மையான வழி நோன்பு என்று புனித ஏப்ரம் கூறுகின்றார்.

திரு முழுக்கு, பாவப்பரிகாரம் ஆகிய இரண்டிற்கும் சரியான ஆயத்தம் தேவை. அப்போதுதான் உண்மையான விதத்தில் உயிர்ப்பு விழாவை கொண்டாட முடியும். அதற்கு நோன்பு அவசியம். நோன்பு பாவத்தை போக்குகிறது என்று இரண்டாம் வத்திக்கான் சங்க ஏடு எடுத்தியம்புகிறது.

 

வெறும் நோன்பினால் எவ்வித பயனுமில்லை என்பதை நாம் உணர்ந்து எமது பழைய பாவ வாழ்வை களைந்து புதிய இதயத்தை அணிந்து கொண்டால்தான் நோன்பு பலன் தருமென்று புனித லொயோயா கூறுகிறார். ஆகவே தவக்காலத்தில் மாமிச உணவை மட்டுமல்ல, பாவத்தையும் தீய செயல்களையும் கைவிட்டு வாழ முயற்சி எடுப்போம்.

 


 

 

www.uravukal.org

Free Blog Widget
Stats Counter
hit counter